அபரா ஏகாதசி... விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்! | Apara Ekadashi Fasting Procedure

வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (29/05/2019)

கடைசி தொடர்பு:19:06 (29/05/2019)

அபரா ஏகாதசி... விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!

அபரா ஏகாதசி... விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்!

றைவனை அடைவதற்குப் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. உண்ணாமல், உறங்காமல் சிந்தனை முழுவதும் இறைவனே வியாபித்திருக்க, அவன் திருநாமங்களை ஜபித்தபடியும், ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்தபடியும் மேற்கொள்ளும் விரதம் பல வகைகளிலும் பலன் தருவதாகும். காடுகளிலும், மலைகளிலும் துறவிகள் உணவு உட்கொள்ளாமல் இறைவனின் அருளைப் பெறத் தவமிருந்தனர். இல்லறத்தில் இருப்பவர்களால் அப்படியிருக்க முடியாது. அதற்காகவே, எளிய முறையில் நோன்பிருந்து இறைவனை வேண்டுவதற்குக் கடைப்பிடித்த வழிமுறையே விரதமாகும். 

அபரா ஏகாதசி விரதம்

`மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்...'

`ஒருவன், முதலில் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து, அதன் பிறகு தக்க அளவு உண்டால், அவன் உடம்புக்கு மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை’ என்று திருவள்ளுவரும் தகுந்த அளவு உணவு உண்பதைப் பற்றிக் கூறியுள்ளார். மருத்துவ ரீதியிலும் சீரான இடைவெளியில் விரதமிருந்தால் நமது வயிறு, குடல் ஆகியவற்றுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும். விரதத்துக்குப் பிறகு அவை மேலும் சிறப்பாகச் செயல்படும் என்று விரதமிருப்பதால் ஏற்படும் நன்மையைப் பற்றி மருத்துவமும் கூறுகிறது. 

உள்ளம் மட்டுமல்லாமல் உடலும் சேர்ந்து தூய்மைபெற உதவுபவை விரதங்களே. விரதங்கள் பல இருந்தாலும் அவற்றில் மேன்மையானது ஏகாதசி விரதம். நாளை (30.5.19) வரும் ஏகாதசிக்கு, `அபரா ஏகாதசி' என்று பெயர். ஏகாதசி விரதங்களில் முக்கியமான விரதமும்கூட. `அபரா' என்றால் `அபாரமான', `அளவில்லாத' என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்துவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள்.  

ஏகாதசி விரதம்

அபார ஏகாதசியின் மகிமையைக் கூறுகிறது அம்பரீஷன் எனும் மன்னனின் கதை.

`அம்பரீஷன் எனும் மன்னன் திருமாலின் அதிதீவிர பக்தன். வருடம் முழுவதும் தவறாமல் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்து அருளைப் பெற்று வந்தான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதமிருந்து, அதை முடிக்கும் தறுவாயில் துர்வாச முனிவர் அங்கு வந்துவிட்டார். விரத வேளையிலும் துர்வாச முனிவரை ஓடிச்சென்று வரவேற்ற மன்னன், அவரை உணவருந்த அழைத்தான். முனிவரும் அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று நதியில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், நீராடப்போன துர்வாச முனிவர் குறித்த நேரத்துக்குள் திரும்பி வரவில்லை. யாருக்கும் காத்திருக்காத காலம் அப்போது துர்வாச முனிவருக்கும் காத்திருக்காமல் விரைந்து ஓடியது. விரத காலம் முடிவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து, உணவு எடுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் விரதபங்கம் ஏற்பட்டுவிடும். இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஏகாதசி விரதத்தின் பலனைப் பெறமுடியாமல் போய்விடும். இதனால், மன்னன் திருமாலை நினைத்தபடியே துளசி தீர்த்தத்தை அருந்தி தனது உபவாசத்தை முடித்துக்கொண்டார்.   

பெருமாள்

இதைத் தனது  ஞான சக்தியால் அறிந்த துர்வாசர், கடும் கோபம் கொண்டு தனது தலைமுடியைப் பிடுங்கி ஆயுதமாக்கி எறிந்தார். அது பூதமாக மாறி மன்னனைத் துரத்தத் தொடங்கியது. மன்னன் திருமாலின் பாதங்களைச் சரணடைந்தான். திருமால், தன் பக்தனைக் காக்க சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் துர்வாச முனிவர் ஏவிய பூதத்தை அழித்துவிட்டு அவரையும் விரட்டியது. வேறு வழியில்லாமல் திருமாலிடமே சரணடைந்தார் துர்வாசர். திருமால், ``என் பக்தனுக்கே நான் அடிமை. என் பக்தன் உன்னை மன்னித்தால் நானும் உன்னை மன்னிக்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தார். துர்வாசரும் அம்பரீஷனிடம் சென்று மன்னிப்பு கேட்டார். மன்னன் சக்கரத்தாழ்வாரிடம் வேண்டி அவரைக் காப்பாற்றினான். அன்றைய தினத்தில் அம்பரீஷன் மேற்கொண்ட விரதம்தான் அபரா ஏகாதசி விரதம். அந்த விரதம் அவனைக் காப்பாற்றியதுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. துர்வாச முனிவரும் அபரா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, திருமால் பக்தனைத் தாக்க பூதத்தை ஏவிய தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார். 

இந்த அபரா ஏகாதசி விரதமானது பாவங்களை அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். மங்காத பேரும், புகழும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் புஷ்கரில் மூன்று முறை நீராடுவது, சூரியன் மகர ராசியில் நுழையும்போது பிரயாகையில் குளிப்பது, காசியில் சிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது, கயா என்னுமிடத்தில் திருமாலின் பாதங்களில் சரணடைவது, குரு சிம்ம ராசியில் நுழையும்போது கௌதமி நதியில் நீராடுவது போன்றவற்றை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்களை விடவும் அதிக பலன்களைத் தரக்கூடியது இந்த அபரா ஏகாதசி விரதம். இந்த அபரா ஏகாதசி, மரதத்தை வெட்டி வீழ்த்தும் கூர்மையான ஆயுதத்தைப் போன்று நம் பாவங்களையும் வெட்டி வீழ்த்தும் தன்மை வாய்ந்தது. 

திருமால்

அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து திருமாலை திரிவிக்ரமர் (உலகளந்த திருக்கோலம்) உருவத்தில் வழிபட்டால் எல்லா வளங்களும் வந்து சேரும். அவர்கள் இல்லங்களைத் தேடிவந்து லட்சுமி தேவி அருள்புரிவாள். லட்சுமி கடாட்சம் நிறையும், செல்வ வளமும் சேரும்... 

அபரா ஏகாதசி - வியாழக்கிழமை 30.5.19

ஏகாதசி திதி தொடங்கும் நேரம் : 29.5.19 : 3.21 PM

ஏகாதசி திதி முடிவடையும் நேரம் : 30.5.19 : 4:38 PM

பாரணை நேரம் : 

31 - ம் தேதி அதிகாலை 5.28 AM - 8.12 AM

பாரணை தினத்தில் துவாதசி முடிவடையும் நேரம் - 5.17 PM

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்