1,200 ஆண்டுகள் பழைமையான வட்டெழுத்து நடுகல் - காவேரிப்பட்டணத்தில் கண்டெடுப்பு ! | 1200 years old Sclupture found in Krishnagiri district

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (29/05/2019)

கடைசி தொடர்பு:20:06 (29/05/2019)

1,200 ஆண்டுகள் பழைமையான வட்டெழுத்து நடுகல் - காவேரிப்பட்டணத்தில் கண்டெடுப்பு !

கிருஷ்ணகிரி  மாவட்டம் காவேரிபட்டணத்தில், கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து நடுகல் ஒன்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருங்காட்சியகக் காப்பாட்சியர் மற்றும் வரலாற்று ஆய்வு ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் மற்றும் சில தன்னார்வலர்கள், சப்பரம் பஞ்சாயத்தில் உள்ள பணகமுட்டலு கிராமத்தில் ஆய்வுப்பணியினை மேற்கொண்டபோது, 1,200 ஆண்டு பழைமையான வட்டெழுத்து நடுகல் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர்.

நடுகல்

இதுகுறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கூறும்போது, "நாங்கள் பெரும்பாலும் எந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டாலும், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களிடையே விசாரிப்பது வழக்கம். அப்படி விசாரித்தபோது, 'தொட்லான் முரளி' என்ற விவசாயி, ஏர் ஓட்டும்போது தன் நிலத்தில்  ஓர் உடைந்த பெரிய கல் கிடைத்தது. அதை எடுத்து வரப்பின் ஓரம் போட்டுவைத்துள்ளேன் என்று கூறினார். அதையடுத்து, அவரது நிலத்துக்குச் சென்று ஆய்வுசெய்தபோது, அது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து நடுகல் என அறிந்துகொண்டோம்.

வட்டெழுத்து என்பது, கி.பி 3 -ம் நூற்றாண்டிலிருத்து கி.பி 10- ம் நூற்றாண்டு வரை எழுதப் பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். இது, பிராமி எழுத்து என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி.13 - ம் நூற்றாண்டோடு வட்டெழுத்தின் பயன்பாடு நின்றுவிட்டது.  

சிலை

இந்த நடுகல், ஒரு கையில் வாள், மறு கையில் வில்லுடன் வீரன் ஒருவன் போரிடுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. போரில் மார்பின் கீழ் பகுதியில், அம்பு பட்டு இறந்துள்ளான் அந்த வீரன். அவனோடு அவன் மனைவியும் உயிரைத் துறந்துள்ளாள். இவர்கள் இருவரின் நினைவாக இந்தக் கல் வடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நடுகல்லில் இன்னொரு  உருவமும் காணப்படுகிறது. ஒரு வேளை அவனும் இப்போரில் இறந்திருக்கலாம். அந்த நடுக்கல்லில் 'இருவரை எறிந்து பட்டார்'  (போரில் இரண்டு பேரை கொன்று தானும் இறந்த ) என்ற வரிகள் மட்டும்தான்  முழுமையாய்க் காணமுடிகிறது. அதற்கு மேல் உள்ள வரிகளில், 'நான்று  ஐ கரை ஈல்லப்ப...'   என்று  முற்றுப் பெறாமல் உள்ளதால், சொல்லவரும் செய்தி என்னவென்று  அறிய முடியவில்லை. மேலே உள்ள தொடக்க வரிகளும் காணப்படவில்லை. 

கண்டுபிடிப்பு

சுமார் 1,200 ஆண்டுகள் பழைமையான இந்த  நடுகல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கிடைத்த  நடுகற்களில் மிகப் பழைமையானதாகும். கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் வட்டெழுத்துடன்கூடிய நடுகல் எதுவும் இல்லை என்பதால்,  அருங்காட்சியத்துக்கு இந்த நடுகல்லை வழங்கக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், நில உரிமையாளரான தொட்லான்-முரளி இந்த நடுகல்லை அருங்காட்சியத்துக்கு அளித்தார். இதையடுத்து, இந்த நடுகல் தற்போது மக்கள் பார்வைக்காக அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.