'ஒருபோதும் வெற்று சடங்காச்சாரமான பக்தியை விரும்புவதில்லை பாபா!' - சிலிர்ப்பூட்டும் அனுபவக் கதை | The Glory of Saibaba

வெளியிடப்பட்ட நேரம்: 07:58 (30/05/2019)

கடைசி தொடர்பு:07:58 (30/05/2019)

'ஒருபோதும் வெற்று சடங்காச்சாரமான பக்தியை விரும்புவதில்லை பாபா!' - சிலிர்ப்பூட்டும் அனுபவக் கதை

ஒரு குடும்பத்தில் ஒருவர் பாபாவை ஏற்றுக்கொண்டு சரணடைந்தாலும், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அவர் காத்தருள்வார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் அல்லவா..?

'ஒருபோதும் வெற்று சடங்காச்சாரமான பக்தியை விரும்புவதில்லை பாபா!' - சிலிர்ப்பூட்டும் அனுபவக் கதை

சுவாமி படங்களை வைத்து சடங்காக அதை வணங்கி பூஜை செய்து கடமை முடிக்கும் வழக்கம் அநேகருக்கு உள்ளது. ஆனால், இறைவன் இத்தகைய சடங்கான பூஜைகளை விரும்புவதில்லை. அதிலும் சாயி, நாம் அழைத்ததினால் மட்டுமல்ல, தனது பூர்ண விருப்பத்தோடுதான் ஒரு வீட்டில் வந்து அமர்கிறார். வீட்டின் ஒரு முதிய அங்கத்தினர்போல இருக்கவும், அன்பு செய்யவும் பாபா ஒருபோதும் வெற்று சடங்காச்சாரமான பக்தியை விரும்புவதில்லை. நம் வீட்டில் இருக்கும் முதிய அங்கத்தினர்போல, அந்த வீட்டின் எல்லாச் செயல்பாடுகளிலும் பொறுப்பேற்று வழி நடத்த விரும்புகிறவராகவே பாபா இருக்கிறார். குடும்பத்தில் ஒருவர், தன் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும் அனைவரையும் அரவணைத்துக் காக்கும் பண்புள்ளவராகப் பாபா விளங்குவார். இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை. சாயி நாதன் வாழ்ந்த காலத்திலேயே அவர் பக்தர்கள் அனுபவித்த உன்னதமான அனுபவங்கள்.

சாயி பாபா

மும்பையில் வாழ்ந்த தர்கட் குடும்பத்தினர் பாபாவின் தீவிர பக்தர்கள். தர்கட் குடும்பத்தின் தலைவரான ராமச்சந்திர ஆத்மாராம் என்னும் பாபா சாஹேப் தர்கட், பிரார்த்தனா சமாஜத்தைச் சேர்ந்தவர். பிரார்த்தனா சமாஜத்தினர் உருவ வழிபாட்டை நிராகரிப்பவர்கள். மூட நம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள். அவதாரங்கள் என்னும் கோட்பாட்டையே மறுப்பவர்கள். அதனால் இயல்பாகவே, ராமச் சந்திர ஆத்மாராமிற்கு பாபாவின் மேல் பக்தி இல்லை. ஆனால், அவரின் மகனும் மனைவியும் பாபாவின் பக்தர்கள். தர்கட்டின் மகன் தினமும் பாபாவின் படத்துக்கு முறையாகப் பூஜை செய்பவன். 

ஒருமுறை தர்கட்டின் மகனுக்கு ஷீரடிக்குச் செல்லும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், தன் வீட்டில் நடைபெறும் பாபாவின் பூஜைகள் தடைபெறுமே என்று ஷீரடி செல்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருந்தார். இதையறிந்த தர்கட், "நீயும் உன் அன்னையும் ஷீரடி சென்று வாருங்கள். நான் உன் பாபாவுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நீ திரும்பி வரும்வரை பூஜை செய்வேன்" என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

சாயி

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் தர்கட் தீவிரமாயிருந்தார். தினமும் பூஜை செய்து பாபாவின் படத்திற்கு ஒரு கற்கண்டை நைவேத்தியம் செய்வார். பின் அந்த கற்கண்டை மதிய உணவின் போது உட்கொள்வார். தொடர்ந்து மூன்று நாள்கள் பூஜையும் நைவேத்தியமும் செவ்வனே நடந்தது. நான்காம் நாள், தர்கட்டுக்கு அலுவலக வேலைகள் அதிகமாயின. பூஜை முடிந்த கையோடு நைவேத்தியம் செய்ய மறந்து வெளியே போய்விட்டார். திரும்ப வந்து உணவு உண்ண அமர்ந்த போதுதான் காலையில் நைவேத்தியம் செய்யவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

தர்கட் மனம் வருந்தியது. தான் கொடுத்த வாக்குறுதியில் இருந்து மீறிவிட்டதாக உணர்ந்தார். இதற்கு என்ன பிராயச்சித்தம் என்பதை அறியாமல் வருந்தினார். பாபாவின் படத்திற்கு முன்பாக நின்று மன்னிப்புக் கேட்டார். மேலும் ஒரு கடிதத்தை ஷீரடியில் இருக்கும் தன் மகனுக்கு எழுதினார். அதில், "மகனே, அறியாமல் பாபாவுக்கு நைவேத்தியம் செய்யத் தவறிவிட்டேன். இதே போன்ற ஒரு பிழையை இனி செய்யமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். இந்தக் கடிதத்தை பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்து அவரிடம் என் மன்னிப்பைக் கோருவாயாக" என்று எழுதி அதை ஷீரடிக்கு அனுப்பினார்.

சாயி

இறைவன் நம் முன்பாக நிற்கவில்லை என்றும், இதையெல்லாம் அவர் எங்கே பார்க்கப் போகிறார் என்றும் அநேகர் நினைக்கிறார்கள். ஆனால் அவரோ எல்லா இடங்களிலும் நிறைந்தவராக இருக்கிறார். எல்லோரின் செயல்களையும் அறிந்தவராக இருக்கிறார். பாபாவோ, தன் அடியார்களையும் அவரின் குடும்பத்தினரையும் இரட்சிக்கும் தருணத்திற்காக எப்போதும் காத்திருக்கிறார். தர்கட் நைவேத்தியம் செய்யவில்லை என்பதை பாபா அறியமாட்டாரா என்ன? அவ்வாறு செய்யவில்லை என்றாலும் பாபா பசியால் வாடுவாரா என்ன? ஆனால் இந்தத் தருணத்தை பாபா பயன்படுத்திக்கொண்டு தம் பக்தர்களின் அருகிலேயே தாம் இருப்பதை உறுதி செய்கிறார்.

சாய்

அன்றைய மதிய வேளையில் தீபாராதனை முடிந்ததும், தர்கட்டின் மனைவியை அழைத்த பாபா, "நான் பம்பாயில் இருக்கும் உன் வீட்டுக்குச் சென்றேன். கதவு மூடியிருந்தது. ஆனாலும் எப்படியோ உள்சென்று பசியாற ஏதாவது கிடைக்குமா என்று தேடினேன். ஆனால் எனக்கு அங்கு எதுவுமே வைக்கப்படவில்லை" என்று சொன்னார். இதன் பொருள் என்ன என்பதை தர்கட்டின் மனைவியால் அறிய முடியவில்லை. ஆனால், அவரின் மகன் அறிந்துகொண்டார். பம்பாயில் தன் வீட்டில் நிகழும் பூஜையில் ஏதோ குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொண்டார். உடனே, தான் வீடு திரும்ப பாபாவிடம் உத்தரவு கேட்டார். ஆனால், பாபாவோ அதை மறுத்துத் தன்னோடு இருக்குமாறு உத்தரவிட்டுவிட்டார். 

வேறுவழியின்றி அவன், தன் தந்தைக்குக் கடிதமொன்றை எழுதினார். அதில், பாபாவின் பூஜையில் ஒருகுறையும் வைக்க வேண்டாம் என்று பாபா விசாரித்ததை விவரித்து எழுதியிருந்தார். இருவர் எழுதிய கடிதங்களும், ஒரு நாள் கழித்து ஒரே நேரத்தில் இருவரின் கரங்களிலும் கிடைத்ததன. தர்கட் கடிதத்தை வாசித்ததும், அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டேயிருந்தது. 

ஒரு குடும்பத்தில் ஒருவர் பாபாவை ஏற்றுக்கொண்டு சரணடைந்தாலும், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அவர் காத்தருள்வார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் அல்லவா..?     

ஷீரடி சாய்பாபாபின் அற்புதங்களை மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்