`பக்தர்கள் துயர் கண்டு தோன்றிய பரமன்' - ஈசனுக்கு மாசில்லாது பூசை செய்த கழற்சிங்க நாயனார் குருபூஜை! | kalarchinga nayanar gurupoojai held on tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (31/05/2019)

கடைசி தொடர்பு:23:00 (31/05/2019)

`பக்தர்கள் துயர் கண்டு தோன்றிய பரமன்' - ஈசனுக்கு மாசில்லாது பூசை செய்த கழற்சிங்க நாயனார் குருபூஜை!

நாளை வைகாசி மாத பரணி நட்சத்திர நாள். இந்த நாளில் அனைத்து சிவாலயங்களிலும் கழற்சிங்க நாயனார் குருபூஜை கொண்டாடப்படும்.

கழற்சிங்க நாயனார்

ஈகை, கருணை, பக்தி ஆகியவற்றின் உச்சம் என்பது நின்று நிதானித்துச் செயல்படுவதில்லை. முல்லைக்குத் தேர்கொடுத்த பாரி, புறாவிற்கு இணையாகத் தன் தொடையை அரிந்து கொடுத்த அரசன் ஆகியோரின் செயல்கள் இதற்கு உதாரணம். பக்திக்கு உதாரணம் கழற்சிங்க நாயனார்.  

பல்லவ நாட்டை ஆண்ட மன்னன் கழற்சிங்கர். சிவன் மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர். சிவத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். ஒருமுறை அவன் மனைவியான பட்டத்தரசி கோயிலை வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது, சிவனடியார்கள் அமர்ந்து பூஜைக்குரிய மலர்களைத் தொடுத்துக்கொண்டிருந்தனர். பட்டத்தரசி மலர்களின் வாசனையில் மயங்கி நின்றாள்.  கீழே விழுந்துகிடந்த மலர் ஒன்றினை எடுத்து முகர்ந்தார். இதைக்கண்ட செருத்துணை நாயனார் சினம் கொண்டார். சிவ பூஜைக்குரிய மலரினை எடுத்து நுகர்ந்தது சிவ அபராதம் என்று கருதித் தன் கை வாளினால் அரசியின் மூக்கை அறுத்தார். 

கீழே விழுந்த அரசி புலம்ப, அங்கு வந்த அரசன் நிகழ்ந்தது என்ன? இச்செயலைச் செய்தது யார் என்று கேட்டான்.  செருத்துணை நாயனார் தானே செய்தேன் என்றும், சிவ பூஜைக்குரிய மலரினை முகர்ந்ததால் அவ்வாறு செய்ததாகவும் சொன்னார். இதுகேட்ட மன்னன், " அடியவரே, தவறான தண்டனை கொடுத்துவிட்டீர். அறுக்க வேண்டியது முகர்ந்த மூக்கையல்ல, எடுத்த கையையே" என்று சொல்லி வாளால் அரசியின் கைகளை வெட்டினார். 

பக்தர்கள் துயர் கண்டு பரமன் பொறுப்பானா... அக்கணமே இறைவன் இடப வாகனத்தில் அம்மை உமையுடன் தோன்றி அருட்காட்சியளித்தார். தேவர்கள் பூமாரிப் பொழிந்தனர். அரசியின் உடல் காயங்கள் குணமடைந்தது. இருவருமாக இறைவனை வணங்கினர். கழற்சிங்கரின் பக்தியின் மேன்மை உலகெங்கும் பரவியது.

கழற்சிங்க நாயனார் முக்தியடைந்த வைகாசி பரணி தினத்தில் அவருக்குக் குருபூஜை நடத்தப்படுகிறது. நாளை மாத சிவராத்திரியும் சேர்ந்துவருவதால் சிவாலயங்களுக்குச் சென்று நாயன்மார்களை வழிபடுவது சிறப்பைத் தரும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க