மழைக்காக வைகையில் இசைபாடி வழிபட்ட மதுரை மாணவர்கள்! | Madurai Music College Students worships for rain

வெளியிடப்பட்ட நேரம்: 20:45 (01/06/2019)

கடைசி தொடர்பு:20:31 (02/06/2019)

மழைக்காக வைகையில் இசைபாடி வழிபட்ட மதுரை மாணவர்கள்!

அறநிலையத்துறை உத்தரவின்பேரில் மழை வேண்டிக் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக நேற்று மதுரையில் மழைக்காக இசை வழிபாடு நடத்தப்பட்டது. கோடைக்காலம், மதுரையை வாட்டுகிறது. நகரிலும் சுற்றுப்புறக் கிராமங்களிலும் மழைப்பொழிவு முற்றிலுமாக இல்லை. குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.  

இசை

இந்நிலையில், மதுரை பசுமலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில், ஏராளமான மாணவர்கள், கர்நாடக இசையும் நாட்டுப்புற இசையும் பயின்று வருகின்றனர். இசைக்கல்லூரி நிர்வாகம் மதுரையில் மழை வேண்டி இசை வழிபாடு நடத்தத் திட்டமிட்டது. அதன்படி கல்லூரியிலிருந்து நேற்று மாலை பேராசிரியர்களும் மாணவர்களும் அழகர் ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் வைகைப் பகுதிக்கு வந்து அமர்ந்து இசை வழிபாடு நடத்தினர். பக்கவாத்தியங்களுடன் மாணவ மாணவியர் குரலிசை வழங்கினர். ஹம்சத்வனி, கீரவானி, அமிர்தவர்ஷினி ஆகிய ராகங்களில் இசைமழை பொழிந்தனர்.

இதுகுறித்துக் கல்லூரி முதல்வர் கூறுகையில், “மக்கள் நலனுக்காக மழைபொழிய வேண்டும். அதற்காக இசை மூலம் இயற்கையையும் இறையையும் வழிபடவே இங்கு கூடியிருக்கிறோம்” என்றார். வைகைநதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் பேசுகையில், “வைகையில் நீர்பொங்க வேண்டும். மக்களின் குடிநீர்த் தட்டுப்பாடு முற்றிலும் நீங்க வேண்டும். நகரில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் தணிய வேண்டும். இதற்கெல்லாம் மதுரையில் மழைப்பொழிவு அவசியம். அதற்காகத்தான் கல்லூரியோடு சேர்ந்து எங்கள் இயக்கம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது” என்றார்.

மழை

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர் ஒருவர் நம்மோடு பேசினார். “இசை, மழையைக் கட்டுப்படுத்தும் என்பது மூடநம்பிக்கையல்ல. சிலப்பதிகாரம் உள்ளிட்ட நமது சங்க இலக்கியங்களில் பண்முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் பயன்களை பலர் ஆய்ந்தும் அனுபவித்தும் கண்டறிந்துள்ளனர். அதிகாலையின் ‘பூபாளம்’ புத்துணர்ச்சி ராகம், மாலையில் ‘மலயமாருதம்’ மயக்கும் ராகம். உறக்கத்துக்கு ‘நீலாம்பரி’ தாலாட்டு ராகம் என்று வகுத்துள்ளனர். இயற்கையையும் உயிரையும் இசையச் செய்யும் ராகங்கள் இன்னும் எத்தனையோ உள்ளன. ஸ்வரக் கட்டுகள் காற்றில் அலைவரிசையாய் ஆதிக்கம் செலுத்தும். இது ஆன்மிகத்தையும் கடந்த அறிவியல்!” என்றார்.