வியாபாரத்தில் வெற்றி பெறும் யோகம் யாருக்கெல்லாம் அமையும்? #Astrology | Who can get Success through Business as per Astrology?

வெளியிடப்பட்ட நேரம்: 06:48 (02/06/2019)

கடைசி தொடர்பு:06:48 (02/06/2019)

வியாபாரத்தில் வெற்றி பெறும் யோகம் யாருக்கெல்லாம் அமையும்? #Astrology

வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்குரிய ஜாதகம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

வியாபாரத்தில் வெற்றி பெறும் யோகம் யாருக்கெல்லாம் அமையும்? #Astrology

விவசாயிகளுக்கு அடுத்தபடியாக உற்பத்தியாகும் பொருள்களை கொண்டு போய் வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதில், வியாபாரிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். வியாபாரம் செய்து கோடீஸ்வரராகும் கனவு எல்லோருக்கும் உண்டு. ஆனால் எல்லோராலும் வியாபாரத்தில் வெற்றி பெற முடிவதில்லை. ஒருசிலர் வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கிறார்கள். வியாபாரத்தில் வெற்றி பெறுவதற்குரிய ஜாதகம் எப்படி இருக்கும் என்பது பற்றி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியிடம் கேட்டோம்.

''பணம் வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், பணமே வாழ்க்கையாகி மட்டுமே வாழ்க்கையில்லை. ஆனால், நுகர்வுக் கலாசார வாழ்க்கைக்குப் பழக்கமாகிப்போன மனிதன், பணத்தை நோக்கியே பயணம். பயணமா அது, ஓட்டம். இந்த ஓட்டத்தை இனி நிறுத்தமுடியாது. மாத சம்பளம், தினப்படி சம்பளம், சொந்தத் தொழில், வியாபாரம், கமிஷன் ஏஜென்ட், எனப் பலவிதமான வழிகளில் தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. இதில் வியாபாரத்தில் வெற்றிபெறும் அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு என்பது பற்றிப் பார்ப்போம். 

ஜோதிடம்

பணம், சம்பளதாரர்கள் தவிர, மற்றவர்களுக்குச் செய்யும் தொழில், வியாபாரம், ஆகிய இரண்டு வழிகளில்தான் கிடைக்கிறது. இத்தகைய வழிமுறைகளில் பொருள் ஈட்டுபவர்களை இரண்டுவிதமாக நாம் பிரிக்கலாம். சிலர் தங்களின் அறிவை முதலீடாகக் கொண்டு பொருளீட்டுவார்கள். உதாரணமாக ஆடிட்டர், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகனப் பழுது நீக்குபவர் எனப் பலரைச் சொல்லலாம். சிலர் தான் தேர்ந்தெடுத்த வர்த்தகத்தில் பண முதலீடு செய்து, ஒரு இடத்தில் பொருட்களை வாங்கி, மற்றொரு இடத்தில் விற்பனை செய்வார்கள். எப்போதுமே தான் மேற்கொண்ட வியாபாரத்தில், தனது புத்திசாலித்தனத்தையும் இணைக்கும்போதுதான் அவர்கள் வெற்றிபெற்ற வியாபாரிகளாகத் திகழமுடியும். 

ஆதித்ய குருஜிஜோதிட சாஸ்திரப்படி வியாபாரத்தில் ஒருவர் வெற்றிபெற வேண்டுமென்றால், அவரின் ஜாதகக் கட்டத்தில் தனஸ்தானமான இரண்டாமிடத்தையும் வேலை மற்றும் கடன் ஸ்தானமான ஆறாமிடத்தையும் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தையும் லாபஸ்தானமான பதினொன்றாமிடத்தையும் கவனிக்க வேண்டும். இந்த நான்கு ஸ்தானங்களும் சுப, சூட்சம வலுவுடன் இருந்தால்தான் ஜாதகர் வெற்றிகரமான வியாபாரியாகத் திகழ்வார். 

இதிலும் குறிப்பாக ஆறாமிடம் ஒருவரின் ஜாதகத்தில் வலுவடையக்கூடாது. அப்படி வலுப்பெற்றால், ஜாதகர் வியாபாரத்தில் லாபம் ஈட்டமுடியாது. அடுத்தவரின் கீழ்தான் பணிபுரிய வேண்டியிருக்கும். அதேவேளையில் பத்தாமிடம் வலுப்பெற்றால், ஜாதகர் சிறந்த வியாபாரியாகவோ தொழிலதிபராகவோ திகழ்வார்.

வியாபாரம் என்பதைச் செய்வதற்கு பங்குதாரர்கள், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என மூன்று விதமான மனிதர்களைத் தன் ஆளுமைத்திறனால் கையாளவேண்டியிருக்கும். பங்குதாரர்களைக்கூட நமக்குப் பிடித்தால் சேர்ந்து கொள்ளலாம்.  பிடிக்காவிட்டால் தனியாகத் தொழில் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் வியாபாரிக்கு மிகவும் முக்கியமானவர்கள். இதற்குச் சூரியன், சனி ஆகிய கிரகங்கள் ஜாதகத்தில் சிறப்பான முறையில் அமைந்திருக்கவேண்டும். சூரியன் ஆளுமைப் பண்பைக் குறிக்கும். சனி தனக்குக்கீழ் பணிபுரிபவர்களைக் குறிக்கும். 

வெற்றி ஜாதகம்

மேஷ லக்னக்காரர்களுக்குப் பத்தாமிடமான மகரத்தின் அதிபதி சனியும் இரண்டாமிடமான ரிஷபத்தின் அதிபதியான சுக்கிரனும் இணைந்திருந்து குருவின் தொடர்பு ஏற்பட்டால், அவர்கள் வர்த்தகப் பிரமுகர்களாகத் திகழ்வார்கள். 

ரிஷப லக்னக்காரர்களுக்கு ஒன்பது, பத்தாமிட அதிபதியான சனியுடன் இரண்டாம் அதிபதியான புதன் மற்றும் சுக்கிரனுடன் இணைந்திருந்தால் அவர்கள் வியாபாரத்தில் வெற்றியடைவார்கள். 

மிதுன லக்னக்காரர்களுக்குப் பத்தாமிடமான தனுசின் அதிபதி குரு.  இவர்களுக்கு அதி நட்பு ஸ்தானமான சிம்மத்திலும் விருச்சிகத்திலும் குரு பகவான் இருந்து, லக்னாதிபதி புதனும் சந்திரனும் வலுப்பெற்றிருந்தால் ஜாதகர் வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்.

கடக லக்னக்காரர்களுக்குப் பத்தாமிடமான மேஷத்தின் அதிபதியான செவ்வாய் சுபத்துவ சூட்சும வலுவுடன் குரு மற்றும் வளர்பிறைச்சந்திரனுடன் இணைந்திருதால் ஜாதகர் வியாபாரப் புலியாகத் திகழ்வார்.

சிம்ம லக்னக்காரர்களுக்குப் பகையாளியான சுக்கிரன் ஆறு, எட்டு, பன்னிரண்டு போன்ற இடங்களில் மறைந்து, இவர்களுக்கு இரண்டாமிடமான கன்னியின் அதிபதி புதனுடன் இணைந்து குருவின் பார்வை பெற்றால் ஜாதகர் மிகப்பெரிய தொழிலதிபராக இருப்பார்.

ராசிகள்

கன்னி லக்னக்காரர்களுக்குப் பாக்யாதிபதியான சுக்கிரனுடன் புதன் இணைந்திருந்து பூர்வப் புண்ணியஸ்தானமான மகரத்தின் அதிபதி சனி, சுபத்துவ சூட்சும வலுவுடன் இருந்தால் ஜாதகர் சிறுவயதிலிருந்தே தொழிலதிபராகத் திகழ்வார்.

துலாம் லக்னக்காரர்களுக்கு வளர்பிறைச் சந்திரனுடன் குரு, புதன் சேர்க்கை இருந்தால் அவர்கள் போடும் கணக்குகள் தப்பாமல் பலிதமாகும். இதனால் இவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். துலாம் லக்னத்தின் சின்னமே தராசுதான். அதனால்தான் உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களெல்லாம் துலா லக்னத்தில் பிறந்தவர்களே.

விருச்சிக லக்னக்காரர்களுக்கு இரண்டாமிடமான தனுசின் அதிபதி குருவும் பத்தாமிட அதிபதியான சூரியனுடன் சந்திரனும் இணைந்திருந்தால் அவர்கள் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பார்கள். 

தனுசு லக்னக்காரர்களுக்குப் பத்தாமிடமான புதனும் சுக்கிரனும் இணைந்திருக்க, அவர்களை வலுப்பெற்ற குருவும் சனியும் பார்த்தால், அவர்கள் நல்ல வர்த்தகப் பிரமுகர்களாகத் திகழ்வார்கள்.   

மகர லக்னக்காரர்களுக்குப் பத்தாமிடமும் ராஜ்யாதிபதியுமான துலாத்தின் அதிபதி சுக்கிரனுடன் சனியும் புதனும் இணைந்திருந்தால் ஜாதகர் கடுமையான உழைப்பாளியாகத் திகழ்வார். தன் உழைப்பின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி முதலாளியாக விளங்குவார். 

கும்ப லக்னக்காரர்களுக்குப் பத்தாமிடமான விருச்சிகத்தின் அதிபதி செவ்வாயும் பதினொன்றாமிடமான தனுசின் அதிபதியான் குருவும் இணைந்து சுபத்துவம் பெற்றிருந்தால் ஜாதகர் மிகச் சிறந்த பில்டராக வெற்றி பெற்று செல்வந்தராகத் திகழ்வார்.

மீன லக்னக்காரர்களுக்கு லக்னாதிபதியும் தொழில்ஸ்தானபதியும் குருதான். இவருடன் இரண்டாமிடத்து அதிபதியான செவ்வாயும், பதினொன்றாமிடமான மகரத்தின் அதிபதி சனியும் சுபத்துவமாக வலுப்பெற்று இருந்தால் ஜாதகர் ஆன்மிக அறக்கட்டளை, கல்வி நிலையங்கள் நடத்துவதாலும் நூல்கள் விற்பனை செய்வதன் வாயிலாகவும் கோடீஸ்வரராகத் திகழ்வார்" என்கிறார் ஜோதிடக் கலை அரசு ஆதித்ய குருஜி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்