``எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் கருப்புக்கு 5.ரூவா முடிஞ்சு வச்சிருவேன்..." - மதுரைமுத்து நெகிழ்ச்சி! #WhatSpiritualityMeansToMe | Madurai Muthu speaks about that What spirituality means to me

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (03/06/2019)

கடைசி தொடர்பு:12:58 (03/06/2019)

``எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் கருப்புக்கு 5.ரூவா முடிஞ்சு வச்சிருவேன்..." - மதுரைமுத்து நெகிழ்ச்சி! #WhatSpiritualityMeansToMe

``எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் கருப்புக்கு 5.ரூவா முடிஞ்சு வச்சிருவேன்...

மிழில் ஸ்டாண்ட்-அப்  காமெடி புகழ்பெறத் தொடங்கிய காலகட்டத்தில்தான் மதுரைமுத்து தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொலைக்காட்சிகளில் பெரும்பாலும் மிமிக்ரியே நகைச்சுவை என்று இருந்த நிலையில், மண் மணம் மாறாத தன் தமிழாலும் கள்ளம் கபடமற்ற தன் யதார்த்த நகைச்சுவையாலும் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றார் மதுரைமுத்து. அன்றிலிருந்து இன்றுவரை சின்னத்திரையில் அவரது நகைச்சுவைக்கொடி பறந்தவண்ணம் இருக்கிறது. சில திரைப்படங்களிலும் நடித்திருக்கும் மதுரைமுத்துவிடம், அவரின் ஆன்மிகம் குறித்துக் கேட்டோம்.  

மதுரை முத்து

``எனக்குச் சொந்த ஊர் மதுரை பக்கத்துல அரசப்பட்டி. எனக்கு ரொம்பவும் இஷ்டமான தெய்வம்னா அது, எங்க குலசாமி முத்துக் கருப்பண்ணசாமிதான். எங்க ஊர்ல பையன் பொறந்தாலும் பொண்ணு பொறந்தாலும் முத்துமாணிக்கம், சின்னமுத்து, பெரியமுத்து, முத்தையா, முத்துமல்லிகா முத்துராணினுதான் பேர் வெப்பாங்க. கிட்டத்தட்ட ரெண்டாயிரம் தலைக்கட்டு எங்க ஊர்ல இருந்தாலும், 800 தலைக்கட்டுக்கு இந்த முத்துக்கருப்பண்ணசாமிதான் குலதெய்வம். 

இங்க என்ன விசேஷம்னா, கோயிலுக்கு சாமி சிலை தூக்குறவங்க யாரும் மது அருந்தமாட்டாங்க. எங்க அப்பாக்கு 86 வயசாவுது. அவர் சாமி தூக்குறவர், மது அருந்த மாட்டார். அந்த மாதிரி ஊர்க்காரங்க கட்டுப்பாட்டோட பயபக்தியா இருப்பாங்க.
கம்மாக்கரை ஓரமா மரங்கள் நிறைஞ்சு தோப்பும் துரவுமா இருக்கிற இடத்திலதான் கருப்பண்ணன் கோயில் இருக்கு. பெரிய ஆலமரம் ஒண்ணு. அங்க இருக்கிற கருப்பசாமி பார்க்கவே ரொம்ப கம்பீரமா இருக்கும். மருட்சியோடு நிக்கிற குதிரைசிலையைப் பார்த்தா சில நேரம் பயமா இருக்கும். கோயிலையொட்டி இருக்கிற பாதையில் போற யாரும் செருப்புப் போட்டுக்கிட்டுப் போக மாட்டாங்க. தலைப்பாகையும் கட்டமாட்டாங்க. செருப்பைக் கையிலெடுத்துக்கிட்டு தலைப்பாகையை அவுத்து இடுப்பில கட்டிக்கிட்டோ, இல்ல கையில வெச்சிக்கிட்டோதான் போவாங்க. மீறி சிலர் செருப்புப் போட்டுக்கிட்டு போய் சிக்கல்ல மாட்டிக்கிட்ட அனுபவங்கள் நிறையவே உண்டு.   

மதுரை முத்து தனது குடும்பத்தினர்

ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தள்ளியிருந்தாலும், நான் பள்ளிக்கூடம் படிக்கிறப்பவே பாடப் புத்தகத்தை எடுத்துக்கிட்டு அங்க போயிருவேன். அங்க உக்காந்து படிப்பேன். பாட்டு பாடிப் பார்ப்பேன்; பேசிப் பார்ப்பேன். ஊர்ல இருக்கிற பங்காளிங்ககூட என்னைப் பார்க்கிறப்போ, `ஏற்கெனவே நம்ம ஊர்ல படிச்சவன்ல்லாம் பெரிய மனுஷன் ஆயிட்டான்களாக்கும். பெரிய படிப்பாளியாட்டம் இங்க வந்து படிச்சுக்கிட்டிருக்கான், பெரியஇவன் மாதிரி 'னு கேலி கிண்டல் பேசுவாங்க. நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்படவும் மாட்டேன். காதுல வாங்கவும் மாட்டேன். `நான் உண்டு, என் கருப்பு உண்டு'னு படிப்பேன். அங்க இருக்கும்போது நேரம் போறதே தெரியாது. மனசுக்கு அவ்வளவு நிம்மதியாவும் தெம்பாவும் இருக்கும். 

எப்போ கோயிலுக்குப் போனாலும் அங்க ஓடைக்கரையில மொளைச்சிக் கிடக்குற அறுகம்புல்லைப் பறிச்சி மாலைகட்டி, அங்க இருக்கிற புள்ளையாருக்குப் போட்டுட்டுத்தான் படிக்க உட்காருவேன். நான் கொஞ்சம் வளர்ந்து வாலிபனான பிறகு, நிறைய மரக்கன்னுகளை அங்கேயே நட்டுவெச்சு வளர்த்திருக்கேன். அந்த மரமெல்லாம் இப்போ பெரியளவுல வளர்ந்து நிக்குது. அப்போ என்னைக் கிண்டல் கேலி பண்ணினவங்க, இன்னிக்கு அவங்க புள்ளைங்களுக்கு என்னைத்தான் உதாரணமா சொல்றாங்க. `இந்தக் கருப்பே கதின்னு கிடப்பான். இன்னிக்குப்பாரு பேரும் புகழோட ஊருக்கும் பெருமை சேர்த்திருக்கான் பார்'னு சொல்றதக் கேக்குறப்போ சந்தோஷமா இருக்கு.

மொத மொதல்ல 2004 - ல் விஜய் டி.வியில `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்துச்சு. நேரா கருப்புக்கோயிலுக்குப்போய் சாமியைக் கும்பிட்டேன். 5 ரூபாய் காணிக்கைக் காசு முடிஞ்சி வெச்சிட்டுப்போய்தான் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். இத்தனைக்கும் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறதைப் பார்க்கக்கூட, வீட்டுல டி.வி இல்ல. எங்க ஊர் மெடிக்கல் ஷாப்புல இருந்த டி.வியிலதான் என்னுடைய முதல் நிகழ்ச்சியையே பார்த்தேன். 

வழிபாடு செய்யும் முத்து

சின்னச் சின்ன வேண்டுதலா இருந்தாலும் கருப்பண்ணன்கிட்டதான் கோரிக்கை வைப்பேன். இப்பவும் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கிறதா இருந்தாலும் அஞ்சு ரூபா காசை முடிஞ்சி வெச்சிட்டுத்தான் செய்வேன். போன மாசம் துபாய் போனதோடு, இதுவரைக்கும் 80 நாடுகளுக்குப் போயிட்டு கலைநிகழ்ச்சிகள் நடத்திட்டு வந்திட்டேன். வந்ததும் கருப்புக்கோயிலுக்குப் போய் சாமிகும்பிட்டுட்டுத்தான் மத்த வேலை பார்ப்பேன். பத்து நாளைக்கொருமுறை கருப்பைக் கும்பிட்டாதான் மனசுக்குத் தெம்பாவும் தைரியமாவும் இருக்கும். 

`கருப்புதான் நமக்கும் நம்ம ஊருக்கும் காவல்தெய்வமா இருக்கு'ங்குகிற எண்ணம் எனக்குச் சின்னவயசுல இருந்தே மனசுல ஊறிடுச்சு. என்னுடைய பிள்ளைங்க மூணு பேருக்கும் காது குத்துற நிகழ்ச்சியை அங்கதான் நடத்துனேன்.

 `உலகத்துல உள்ள எல்லாக் கோயிலுக்கும் போனாலும்சரி, நம்ம குலதெய்வக் கோயிலுக்குப் போறதுக்கு ஈடாகாது'ன்னு சொல்லுவாங்க. ஏன் திருப்பதிக்கே போய் பெருமாளைக் கும்பிட்டாலும், பெருமாள் நம்ம குலசாமிகிட்ட கேட்குமாம். `உன் புள்ளை என்கிட்ட வந்து முறையிடுறான் அவனுக்குச் செய்யட்டுமா?'னு கேட்டுட்டுத்தான் செய்வாராம். அதனால குலசாமியைக் கும்பிடுறதைமட்டும் விட்டுடக் கூடாது'' என்கிறார் மதுரைமுத்து. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்