திருமண வரம் தரும் திருநாங்கூர் 12 ரிஷப வாகன சேவை! | 12 rishaba sevai thirunangur

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (03/06/2019)

கடைசி தொடர்பு:13:40 (03/06/2019)

திருமண வரம் தரும் திருநாங்கூர் 12 ரிஷப வாகன சேவை!

ஒவ்வோர் ஆண்டும், வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று 12 சிவாலயங்களில் இறைவன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருநாங்கூரில் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சீர்காழிக்கு அருகே அமைந்துள்ள திருத்தலம் திருநாங்கூர். இந்த ஊரைச் சுற்றிலும் பல்வேறு வைணவ திவ்ய தேசங்களும் சிவத்தலங்களும் அமைந்திருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள், சுற்றியிருக்கும் 11 திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள் கருட சேவையில் எழுந்தருளும் உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோன்று, ஒவ்வோர் ஆண்டும், வைகாசி மாத, ரோகிணி நட்சத்திரத்தன்று 12 சிவாலயங்களில் இருந்து இறைவன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் 12 ரிஷப வாகன சேவை காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டிற்கான ரிஷப வாகன சேவை, இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது.

ரிஷப வாகன சேவை

மதங்க மகரிஷி, இந்தத் தலத்தில் வந்து தவம் செய்தபோது நாராயணர், விநாயகர் மற்றும் பார்வதி சமேதராக சிவபெருமான் ஆகியோர் காட்சிகொடுத்தனர். நாராயணர், மதங்கருக்கு மோகினி ரூபமாகக் காட்சிகொடுத்ததால், இந்தத் தலத்திலுள்ள மதங்கீஸ்வரர் ஆலயத்தில் 'நாராயணி' என்ற திருநாமத்தோடு மோகினி ரூபத்திலேயே தரிசனம் கொடுக்கிறார். விநாயகரும் 'மதங்க விநாயகர்' என்ற பெயருடனேயே காட்சிதருகிறார். அன்னை சியாமளா தேவி, இங்கு ராஜ மாதங்கியாகக் காட்சிகொடுக்கிறார்.

ரிஷப் வாகன சேவை

தனக்கு காட்சிகொடுத்த சிவபெருமானிடம், அன்னை உமையவளே தனக்கு மகளாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அவரின் வேண்டுதலை ஏற்று, அன்னை தனது ரூபமான சியாமளாதேவியை அவருக்கு மகளாகும்படி வரம் அருளினார். இந்தத் தலத்தில் இருக்கும் மதங்கத் தீர்த்தத்தில் உள்ள நீலோத்பவ மலரில் சிறு குழந்தையாக அவதரித்த சியாமளாதேவியை மதங்க முனிவர் எடுத்து வளர்த்துவந்தார். உரிய பருவத்தில் சிவபெருமான் எழுந்தருளி, மதங்கரின் மகளான 'மாதங்கி' என்னும் பெயரோடு வளர்ந்த சியாமளா தேவியைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் ரிஷப வாகனத்தில் தோன்றி, மதங்கருக்குக் காட்சி கொடுத்தனர்.

வைகாசி ரோகிணி அன்று நிகழ்ந்த இந்த நிகழ்வை, அன்று தொட்டு இன்றுவரை இந்தத் தலத்தில் கொண்டாடி வருகின்றனர். முதலில் திருக்கல்யாண வைபவமும் பின்னர், ரிஷப வாகன சேவையும் நடைபெறும். இதில் சிறப்பான அம்சம், சுற்றியிருக்கும் 12 சிவாலயங்களில் இருந்தும் அம்மையப்பன் திருமேனிகள் புறப்பட்டு ஒரே இடத்தில்  ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காட்சிகொடுப்பர். 

திருநாங்கூர் அன்னை அஞ்சனாட்சி உடனுறை அருள்மிகு மதங்கீஸ்வர சுவாமி திருக்கோயில் ,கீழைத் திருக்காட்டுப்பள்ளி அன்னை அகிலாண்டநாயகி உடனுறை அருள்மிகு ஆரண்யேஸ்வர சுவாமி திருக்கோயில், கீழ் சட்டநாதபுரம் திருயோகீஸ்வரம் அன்னை யோகாம்பாள் உடனுறை அருள்மிகு யோகநாத சுவாமி திருக்கோயில்,  உள்ளிட்ட 12 கோயில்களில் இருந்து இறைவன் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு, இன்று இரவு  ஒரே இடத்தில் அருள் பாலிப்பர். இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தையும் ரிஷப வாகனக் காட்சியையும் கண்டு வழிபட, சகல செல்வங்களும் கூடும் என்பது ஐதீகம். குறிப்பாக , திருமண வரம் வேண்டுபவர்கள் திருக்கல்யாணத்தில் கலந்துகொண்டு தரிசிக்க, விரைவில் திருமணம் கைகூடும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். 

எப்படிச் செல்வது ?

சீர்காழியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் திருநாங்கூர் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து ஆட்டோ மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க