புராண காலக் காவலர்களிடமிருந்து தற்காலக் காவலர்கள் கற்க வேண்டிய பாடம் என்ன? | This article explains about Jayan - Vijayan

வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (04/06/2019)

கடைசி தொடர்பு:21:06 (04/06/2019)

புராண காலக் காவலர்களிடமிருந்து தற்காலக் காவலர்கள் கற்க வேண்டிய பாடம் என்ன?

பகவான் விஷ்ணுவின் பணியே பக்தர்களைக் காப்பதுதான். பக்தர்கள் எப்போதும் பகவானை தரிசிக்க உரிமையுள்ளவர்கள். ஆனால், காவலர்களோ அந்த உரிமையை மறுத்தனர். அதன் விளைவுதான் பதவி பறிப்பு. மக்களுக்காகவே ஜனநாயகம். ஜனநாயகத்தின் உரிமைகளை மக்கள் பெறுவதற்குத் தடையாக பதவியில் இருப்பவர்கள் செயல்படுகிறார்கள்.

புராண காலக் காவலர்களிடமிருந்து தற்காலக் காவலர்கள் கற்க வேண்டிய பாடம் என்ன?

யன், விஜயன் ஆகிய இருவர் ஸ்ரீமஹாவிஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தின் வாயில் காவல்காரர்களாக இருந்தனர். இவர்களுக்குத் துவார பாலகர்கள் என்ற பெயர். ஸ்ரீமஹாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தைக் காப்பதற்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதைப் புராணங்கள் விரிவாக விவரிக்கின்றன. முற்பிறவியில் நற்செயல் மற்றும் தான, தருமங்களைச் செய்து பெரும் புண்ணியத்தை பெற்றவர்கள் மட்டுமே வைகுண்ட வாசலை அடைய முடியும். எனவே, அந்த வைகுண்ட வாசலைக் காவல் காப்பவர்கள் மிகப்பெரிய புண்ணியங்களைச் செய்திருக்க வேண்டும். பரம பாகவதோத்தமர்களான ஜயனும் விஜயனும் அவ்வாறே அந்தப் பதவியைப் பெற்றிருந்தனர். 

துவார பாலகர்கள், காவலர்

உண்மையில் கடவுளுக்கு எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. தன்னை நாடிவரும் அடியார்களுக்கு அருள்புரிய வேண்டி அவன் சந்நிதியின் திருக்கதவு தாழிடப்படாமல் எப்போதும் திறந்தே இருக்கும். அதைக் காவல்காக்கும் காவலாளிகள் இருவரும் காலப்போக்கில் தன் பணியில் கர்வம் கொண்டு பக்தர்கள் ஸ்ரீவிஷ்ணுவை தரிசிக்கத் தடையாக இருந்தனர். பொறுப்புணர்வுடன் அடியார்களுக்குப் பணி செய்வதே தங்கள் கடமை என்பதை மறந்து, கடவுளுக்கு இணையாகத் தங்களை நினைத்துக்கொண்டு இறுமாப்புடன் நடந்துகொண்டனர். 

ஒருநாள் தவவலிமை மிக்க சனகாதி (சனக, சனாதன, சனந்தன, சனத்குமார) முனிவர்கள் பகவான் ஸ்ரீமஹாவிஷ்ணுவை தரிசிக்க வைகுண்ட வாசலுக்கு வந்தனர். அப்போது ஏகாந்தமாய் இருந்த மகாவிஷ்ணுவுக்குத் தொந்தரவாக இருக்குமோ என்று எண்ணிய துவாரபாலகர்கள், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சனகாதி முனிவர்களைத் தடுத்து நிறுத்தினர். அதோடு நில்லாமல் அறிவாற்றலில் சிறந்த முனிவர்களை எள்ளி நகையாடி ஏளனம் செய்தனர். 

இதனால் சினமடைந்த முனிவர்கள் காவல்காரர்கள் இருவரும், தங்கள் வைகுண்டப் பதவியை இழந்து பூமியில் சாதாரண மனிதர்களாக ஏழு பிறவிகள் பூமியில் விஷ்ணு பக்தர்களாகப் பிறந்து பின் வைகுண்டத்தை அடைய வேண்டும் என்று சாபமிட்டனர். நிகழ்ந்தவற்றைத் தன் ஞான திருஷ்டியினால் அறிந்த ஸ்ரீமஹாவிஷ்ணு வைகுண்ட வாசலுக்கு விரைந்தோடி வந்து, முனிவர்களிடம் தன் காவலாளிகள் அறியாமையால் செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பெருமாள்

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் கோரிக்கைக்குச் செவிமடுத்த முனிவர்கள், காவல்காரர்கள் இருவரும் பலபிறவிகளை எடுத்து பக்தி செய்வதற்கு, பதிலாக மூன்று பிறவிகள் கொடிய அசுரர்களாகப் பிறந்து ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரங்களால் அழிக்கப்படலாம், எது உங்கள் தேர்வு என்று கேட்டனர். இதைக் கேட்ட ஜயனும் விஜயனும் ஏழு பிறவிகள் பகவானை விட்டுப் பிரிந்திருக்க விரும்பவில்லை என்றும் மூன்று பிறவிகளில் அவரை மீண்டும் அடையவே விரும்புகிறோம் என்று சொல்லி சாபத்தை ஏற்றனர். 

இதனால், இருவரும் ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு ஆகவும், ராவணன், கும்பகர்ணன் ஆகவும், சிசுபாலன், தண்டவக்த்ரன் ஆகவும் அசுரப் பிறவிகளெடுத்து ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அவதாரங்களால் அழிக்கப்பட்டனர். 

புராணத்தில் காணப்படும் இந்தக் கதையைத் தற்காலத்தில் நாம் பொருத்திப் பார்க்கலாம். பகவான் விஷ்ணுவை ஜனநாயகம் என்றும், காவலர்களை நாம் தேர்ந்தெடுக்கும் ஆட்சியாளர்கள் என்றும், பக்தர்களாகிய முனிவர்களை மக்கள் என்றும் பொருத்திப் பார்க்க சில விஷயங்களை உணர்ந்துகொள்ள முடியும்.

ஜனநாயகம் ஆட்சியாளர்

பகவான் விஷ்ணுவின் பணியே பக்தர்களைக் காப்பதுதான். பக்தர்கள் எப்பொழுதும் பகவானைத் தரிசிக்க உரிமையுள்ளவர்கள். ஆனால், காவலர்களோ அந்த உரிமையை மறுத்தனர். அதன் விளைவுதான் பதவி பறிப்பு.

மக்களுக்காகவே ஜனநாயகம். ஜனநாயகத்தின் உரிமைகளை மக்கள் பெறுவதற்குத் தடையாகப் பதவியில் இருப்பவர்கள் செயல்படுகிறார்கள். ஜனநாயகத்தின் உண்மையான எஜமானர்கள் மக்களே. அவர்களுக்குச் சேவை செய்யவே பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதை மறந்துவிடுகிறார்கள். சிலர், இந்திய கலாசாரம், இனம், மதம், மொழி, கடவுள் வழிபாடு இவற்றுக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படுகிறார்கள். பதவி நிரந்தரம் என்கிற எண்ணம் அவர்களை அப்படிச் செயல்பட வைக்கிறது. 

தற்கால ஆட்சியாளர்கள், அதிகார போதை தலைக்கேறி கடமையை மறந்து செயல்பட்டால் புராணக் காவல்காரர்களுக்கு நேர்ந்த கதியே தங்களுக்கும் நேரும் என்பதை அவர்கள் அறிந்து ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட வேண்டும். ஏற்கெனவே, பதவியை இழந்த பழைய காவல்காரர்களின் கதைகளிலிருந்து தற்போதைய காவல்காரர்கள் கற்க வேண்டிய பாடம் இது. 

எனவே, எஜமானர்களாகிய பொதுமக்களே, நாம் நமது காவல்காரர்களைக் கண்காணிப்போம்.


டிரெண்டிங் @ விகடன்