நெகிழி அரக்கனுக்கு எதிராகக் களமிறங்கிய சாரநாதப் பெருமாள் ஆலய நிர்வாகம்... இன்று உலக சுற்றுச்சூழல் தினம்! | 108 Plants were planted in World Environment Day

வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (05/06/2019)

கடைசி தொடர்பு:18:52 (05/06/2019)

நெகிழி அரக்கனுக்கு எதிராகக் களமிறங்கிய சாரநாதப் பெருமாள் ஆலய நிர்வாகம்... இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

ஆலயங்கள் புனிதமான தலங்களாகக் கருதப்படுபவை. அங்கு சொல்லப்படும் செய்திகள் மிக விரைவாக மக்கள் மத்தியில் போய்ச் சேரும்.

நெகிழி அரக்கனுக்கு எதிராகக் களமிறங்கிய சாரநாதப் பெருமாள் ஆலய நிர்வாகம்... இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

ன்று உலக சுற்றுச்சூழல் தினம். அழகிய உலகை அழியும் உலகமாக மாற்றும் பல்வேறு காரணிகள் குறித்த விழிப்புணர்வு இன்று தேவையாக இருக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளையும் தாண்டி, சாமானியர்களிடமும் இத்தகைய பிரசாரத்தைக் கொண்டு சேர்க்கச் சமூகத்தின் அனைத்து அமைப்புகளும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அத்தகையதொரு அற்புதமான முயற்சியை திருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயம் மற்றும் சாரநாதப் பெருமாள் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆலயங்கள் புனிதமான தலங்களாகக் கருதப்படுபவை. அங்கு சொல்லப்படும் செய்திகள் மிக விரைவாக மக்கள் மத்தியில் போய்ச் சேரும். எனவே, ஆலயங்களை மையப்படுத்திச் செய்யப்படும் பிரசாரங்கள் மிகவும் பலனளிப்பவை. இதை உணர்ந்து, பல்வேறு ஆலயங்களில் நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடைவிதித்திருப்பதுடன், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்படியொரு ஆலயமே திருச்சேறை சாரபரமேஸ்வரர் ஆலயம்.  

திருச்சேறை

புராணச் சிறப்புமிக்க திருத்தலம் திருச்சேறை. பிரளய காலத்தில் ஞானங்கள் அனைத்தையும் சேமித்துவைக்க ஒரு பாண்டம் செய்யுமாறு மகாவிஷ்ணு பிரம்மனை வேண்டிக்கொண்டார். அதற்கேற்ற மண் திருச்சேறை தலத்தில் உள்ளது என்று வழிகாட்ட, பிரம்மனும் இந்தத் தலத்துக்கு வந்து அந்தப் பாண்டத்தைச் செய்து வேதம் முதலான ஞானப் பொக்கிஷங்களைக் காத்தார் என்பது புராணச் செய்தி.

தற்போது, திருச்சேறை கோயில் நிர்வாகம் இந்தப் பூமியை அழிவுக்குக் கொண்டு செல்லும் நெகிழிப் பயன்பாட்டுக்கு எதிரான ஒரு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. நெகிழியை ஒரு அரக்கனாக உருவகப்படுத்தி அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பும் அழகிய போட்டோ கார்டுகளும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதற்குப் பக்தர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சேறறை சாரபரமேஸ்வரர் கோயில்

திருச்சேறை ஆலயத்தில் அண்மைக் காலமாக நெகிழிப் பயன்பாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அர்ச்சனைக்குரிய பொருள்களை நெகிழிப் பைகளில் கொண்டுவருவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல அபிஷேகத்துக்குரிய பாலைக் கொண்டுவரும் பக்தர்கள், பாக்கெட் பாலாகக் கொண்டுவராமல் இருக்க ஆலய நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்று பல்வேறு வழிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ஆலய நிர்வாகம், இன்று சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அழகிய படங்களைத் தயாரித்து, அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. 

இந்த உலகில் மனிதன் மட்டுமே வாழும் உரிமைகொண்டவன் இல்லை. பிற உயிர்களுக்கும் அதில் சம பங்கு உள்ளது. மனிதர்கள் உருவாக்கும் நெகிழிக் கழிவு அந்த உரிமையை மறுக்கும் வகையில் உள்ளது. ஏதுமறியாத வனவிலங்குகள் நெகிழிப் பொருள்களால் அடையும் துன்பங்களைக் காண்போர் மனம் வருந்தி விழிப்புணர்வு அடையும்வண்ணம் உருவாக்கியுள்ளனர். 

மரக்கன்றுகள் நடும் விழா

இந்நிலையில் இன்று காலை, கோயில் கோபுர வாசலில், திருச்சேறை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நெகிழிப் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழி ஒன்றை எடுத்துக்கொண்டனர். இதில் கலந்துகொண்டவர்கள், இந்தியக் குடிமகனான ஒவ்வொருவரும் நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றும், மரக்கன்றுகளை நட்டு இயற்கை செழிக்க உதவ வேண்டும் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதன் பின்னர், நெகிழி அரக்கன் என்னும் பொம்மை ஒன்றைச் செய்து அதை முக்கிய வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டுசென்று பிரசாரம் செய்தனர். அப்போது செம்மங்குடி தொழிற்பயிற்சி  நிறுவன மாணவர்களும் ஆர்.கே.ஆர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளும் மற்றும் தன்னார்வலர்களும் கையில் நெகிழிப் பயன்பாட்டுக்கு எதிரான பதாகைகளைத் தாங்கியபடி திரளாகக் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்துக்குப் பின்பு கோயிலைச் சுற்றிய பகுதிகளில் அரசு, அத்தி, வேம்பு, வேங்கை, மருதம், புங்கன் உள்ளிட்ட 108 மரங்கள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் ச.சிவகுமார் மற்றும் உதவி ஆணையர் இரா.இளையராஜா ஆகியோரது அறிவுறுத்தலின்பேரில் திருக்கோயில் செயல் அலுவலர் ஆ.ஜீவானந்தம், தக்கார் க.ஆசைத்தம்பி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

நெகிழியை ஒழிக்க மரக்கன்று நடுவது

இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் ஜீவானந்தம் நம்முடன் பேசினார்.

"திருச்சேறையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற அருள்மிகு சாரநாதப் பெருமாள் மற்றும் அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து நெகிழிக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டுவருகிறோம். கோயில் பகுதிகளில் நெகிழிப் பயன்பாட்டைத் தடை செய்திருக்கிறோம். அதன் ஒருபகுதியாகவே இந்த பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளோம். இதன் ஒருபகுதியாக மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, இன்று ஆலயத்தைச் சுற்றிய பகுதிகளில் 108 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். தூய்மையும் ஆரோக்கியமும் உயர்வான ஆன்மிக மனநிலையைத் தரும் என்று உறுதியாக நம்புகிறோம்" என்று தெரிவித்தார். 

மேலும், ஆலய நிர்வாகம் தயாரித்திருக்கும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு படங்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்