மனக் குழப்பம் நீங்க, செல்வ வளம் சேர கடக ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருந்துதேவன்குடி கற்கடேஸ்வர்! | special temple for kadagarasi people to worship

வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (07/06/2019)

கடைசி தொடர்பு:10:41 (07/06/2019)

மனக் குழப்பம் நீங்க, செல்வ வளம் சேர கடக ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருந்துதேவன்குடி கற்கடேஸ்வர்!

சோழநாட்டை ஆண்ட மன்னன் ஒருவன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தான். படுக்கையில் இருந்த வண்ணமே சிவனை தியானித்துவந்த மன்னனின் துயர் தீர்க்க  திருவுளம் கொண்டார் இறைவன். மருத்துவனாக சிவபெருமானும் மருத்துவச்சியாகப் பார்வதி தேவியும் மாற்று உருகொண்டு மன்னனைச் சந்தித்தனர்.

மனக் குழப்பம் நீங்க, செல்வ வளம் சேர கடக ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருந்துதேவன்குடி கற்கடேஸ்வர்!

காவிரி நதிக்கரையில் இருக்கும் தலங்களில் 42-வது திருத்தலமாகத் திகழ்வது திருந்துதேவன்குடி. பல்வேறு புராணச் சிறப்புகளைக் கொண்டு பரிகாரத்தலமாக விளங்கும் இந்தத் தலத்து இறைவன், `கற்கடேஸ்வரர்'. இவரை `தேவதேவேசர்' என்றும் அழைப்பார்கள்.  அம்பிகைக்கு `அருமருந்துநாயகி' என்றும் `அபூர்வ நாயகி' என்றும் அழகிய திருநாமங்கள் உண்டு. திருஞானசம்பந்தப் பெருமான், `மருந்துவேண்டில் இவை மந்திரங்கள் இவை' என்று தொடங்கும் 3 -ம் திருமுறைப் பதிகம் பாடிய தலம். 

கடக ராசி

முன்னொரு காலத்தில் துர்வாச முனிவர் ஓர் ஆற்றின் கரையில் அமர்ந்து சிவபூஜை செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த இடத்துக்கு வந்த ஒரு கந்தர்வன், துர்வாசர் செய்துகொண்டிருந்த சிவபூஜையைக் கண்டு பரிகசித்துச் சிரித்தான். இதைக் கண்ட துர்வாசர் கோபமடைந்து, `சிவபூஜையைக் கண்டு நகைத்ததால் நீ நண்டாகக் கடவாய்!' என்று சாபமிட்டார். இதைக் கேட்டு பயந்த கந்தர்வன், துர்வாசரின் காலில் விழுந்து வணங்கித் தன் தவற்றை மன்னித்துச் சாப விமோசனம் வழங்குமாறு கேட்டான். 

மனமிரங்கிய துர்வாசர் அவனைப் பார்த்து, ``சிவபூஜையை இகழ்ந்ததால் பெற்ற சாபத்தை நீ சிவபூஜை செய்துதான் தீர்க்கமுடியும். ஆகவே, நீ திருந்துதேவன்குடி அகழியில் நண்டாகப் பிறந்து, அங்கு மலரும் தாமரைப் பூவைப் பறித்து அத்தலத்து தேவதேவேசரை வழிப்பட்டு சாபம் நீங்குவாய்" என்றார். அதன்படியே அந்தக் கந்தர்வனும் திருந்துதேவன்குடியில் நண்டாகப் பிறந்தான். தினமும் அகழியில் மலரும் தாமரை மலர்களை ஒவ்வொன்றாகப் பறித்து சுயம்புலிங்கமாக வீற்றிருக்கும் ஈசனுக்குப் பூஜை செய்துவந்தான்.

கடக ராசி

அப்போது, இந்திரன், அசுரர்களுடனான போரினில் வெற்றிபெற தனக்கு சக்தி வேண்டி, அதற்கான வழியை உபதேசிக்குமாறு தன் குருவான வியாழ பகவானைக் கேட்டுக்கொண்டான். அவரும், `எந்நாட்டவர்க்கும் இறைவனாக விளங்கும் சிவபெருமானைப் பூஜை செய்வதுவே சிறந்த மார்க்கம்' என்று உபதேசித்தார். `திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் ஈசனை 1008 தாமரை மலர்கள் கொண்டு பூஜை செய்துவர வேண்டிய சக்தி கிடைக்கும்' என்று வழிகாட்டினார்.

அதன்படி இந்திரனும் இந்தத் தலத்திற்கு வந்து தாமரை மலர்களைப் பறித்து வந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்தான். அப்போது ஒரு நண்டு, தாமரை மலர் ஒன்றினைக் கொண்டுவந்து அர்ச்சிப்பதைக் கண்டான். புனிதமான தனது பூஜைக்கு இடையூறு நேருவதாக நினைத்துக் கோபமுற்று அந்த நண்டினைக் கொல்ல முயன்றான்.

தாமரை

அதைக் கண்டு அஞ்சிய, நண்டுவடிவ கந்தர்வன், சிவபெருமானின் லிங்கத் திருமேனியில் ஏறி அபயம் வேண்டினான். மனமிரங்கிய ஈசன், லிங்கத்தின் உச்சியில் துளை ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க, நண்டு அந்தத் துளைக்குள் நுழைந்து மறைந்தது. இறைவனுக்குள்ளேயே ஒடுக்கம்பெற்றதால் அந்தக் கந்தர்வன் சாபம் நீங்கி சுயரூபம் கொண்டான். இதை அறிந்த இந்திரனும் தன் பிழைபொறுக்குமாறு வேண்டி, இறைவனின் அருளைப் பெற்றான். நண்டு வழிபட்ட தலமாதலால் இறைவனுக்கு `கடேஸ்வரர்' என்று திருநாமம் ஏற்பட்டது. 

சோழநாட்டை ஆண்ட மன்னன் ஒருவன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தான். படுக்கையில் இருந்த வண்ணமே சிவனை தியானித்துவந்த மன்னனின் துயர் தீர்க்கத் திருவுளம் கொண்டார் இறைவன். மருத்துவனாக சிவபெருமானும் மருத்துவச்சியாகப் பார்வதி தேவியும் மாற்று உருகொண்டு மன்னனைச் சந்தித்தனர். தரிசன மாத்திரத்திலேயே நோய்கள் தீரும் என்றாலும் மன்னன் நம்பிக்கை கொள்ளுமாறு மருத்துவமும் செய்தனர். அன்றைய இரவிலேயே மன்னன் முழுமையாகக் குணமடைந்தான். தன்னைக் குணமாக்கிய மருத்துவரைத் தேடிவந்து நன்றி கூறினான். ``தங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும்?" என்று கேட்டான். 

சந்திரன்

அதற்கு ஈசனும், ``காவிரியின் வடகரையில், வெள்ளம் வந்து எங்கள் ஊர் ஆலயம் மண்மேடிட்டு மூடிக்கிடக்கிறது. அதை வெளிப்படுத்தித் திருப்பணி செய்து தர வேண்டும்" என்று சொல்லி அக்கணமே மறைந்தார். மன்னனின் உடல் சிலிர்த்தது. தன்னைக் கரம்பற்றிக் குணம் செய்தது ஈசன் என்று அறிந்ததும் மனம் நெகிழ்ந்தான். தன் பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தான். அதற்குக் கைம்மாறாக ஈசன் கேட்ட திருப்பணியைச் செய்துமுடிக்க உத்தரவிட்டான். ஆலயம் புனரமைக்கப்பட்டது.

கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் சோழபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது திருந்துதேவன்குடி. நெடுஞ்சாலையிலிருந்து ஒற்றையடிப் பாதையாகச் செல்லும் சாலையில் நடந்து சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். நான்கு புறமும் பசுமை வயல்வெளிகளுக்கு நடுவே பழைமையின் சுவடு மாறாத எழிலோடு காட்சியளிக்கிறது இவ்வாலயம். இந்த ஆலயத்தைச் சுற்றி அகழி அமைந்துள்ளது. இந்த அகழியில் பூக்கும் தாமரை மலர்கள் இங்கு அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

நாயன்மார்கள்

தேவாரப் பாடல் பெற்ற தலமாக விளங்குவதால் இந்தத் தலத்தின் காலம் கி.பி 7 - ம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ள அகழியில் நீராடி, அருந்து மருந்து நாயகி என்ற அம்மனுக்கும், ஈசனுக்கும் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அந்த எண்ணெயை உட்கொண்டால் நோய்கள் நிவர்த்தியாகும் என்று புராணங்கள் கூறுகின்றன.

சந்திரன் ஈசனை வழிபட்ட தலம் ஆதலால் இந்தத் தலம் சந்திர தோஷத்திற்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு சந்திர பகவான் தனிச் சந்நிதியில் அருள்புரிகிறார். பெரும்பாலும் சந்திரன் நின்ற நிலையிலேயே தரிசனம் கொடுப்பார். இங்கு அமர்ந்த நிலையில் அதுவும் யோக நிலையில் அமர்ந்து அருள் செய்கிறார். எனவே, சந்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்ள சகல விதமான குழப்பங்களும் நீங்கி, சிந்தனையில் தெளிவு பிறக்கும்.

கடகம் வழிபட்டு நற்பேறு பெற்ற ஆலயம் என்பதால் கடக ராசிக்காரர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்ள செல்வ வளவும் உடல் நலமும் கிட்டும் என்பது நம்பிக்கை. 


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை