``சுகத்தையல்ல, சாந்தத்தைத் தேடுங்கள்!" - சக்தி விகடன் - தயாலயா நிகழ்வில் ஜகதாத்மானந்த சரஸ்வதி உரை! | search for peace not joy

வெளியிடப்பட்ட நேரம்: 08:23 (09/06/2019)

கடைசி தொடர்பு:11:51 (09/06/2019)

``சுகத்தையல்ல, சாந்தத்தைத் தேடுங்கள்!" - சக்தி விகடன் - தயாலயா நிகழ்வில் ஜகதாத்மானந்த சரஸ்வதி உரை!

மனிதர்கள் சுகத்தைக் தேடுகிறோம். ஷாந்தியைத் தேடுவதில்லை. 'சாந்தஸ்ய சுகம்' என்பது சான்றோர் வாக்கு. 'ஷாந்தி' யாருக்கு இருக்கிறதோ அவனுக்குத்தான் சுகம் கிட்டும். சுகம் வேண்டும் என்று தேடுவது சகஜம். ஆனால், மனத்துள் சாந்தி இல்லையெனில் சுகம் எங்கே கிடைக்கும் ?"

``சுகத்தையல்ல, சாந்தத்தைத்  தேடுங்கள்!

க்தி விகடன் மற்றும் தயாலயா வேதாந்த ஆய்வு நிறுவனம் இணைந்து வழங்கும் `வேதாந்தா 24*7’ எனும் மாதாந்திர தமிழ்ச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கடந்த 26.5.19 ஞாயிறு அன்று கோவை ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலத்தில் நடைபெற்றது. பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் சீரிய சிந்தனைகளை நினைவுகூரும் விதமாக இந்தத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படுகின்றன. மே மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி உரையாற்றினார். பூஜ்யஸ்ரீ சுவாமிகளின் கருத்துகளைத் தொகுத்து வழங்கும் விதமாக, இந்த வாரத்தின் உரையை `ஷாந்தி இல்லையெனில் சுகம் எங்கே?' என்கிற தலைப்பில் அமைத்துக்கொண்டார்.

தயாலயா

`` மனிதர்கள் சுகத்தைக் தேடுகிறோம். ஷாந்தியைத் தேடுவதில்லை. `சாந்தஸ்ய சுகம்' என்பது சான்றோர் வாக்கு. `ஷாந்தி' யாருக்கு இருக்கிறதோ அவனுக்குதான் சுகம் கிட்டும். சுகம் வேண்டும் என்று தேடுவது சகஜம். ஆனால், மனத்துள் சாந்தி இல்லையெனில் சுகம் எங்கே கிடைக்கும் ?"  என்ற வினாவோடு நிகழ்வினைத் தொடங்கினார். மனித மனத்தில் சாந்தி ஏன் இல்லாமல் போகிறது? அதற்கான காரணிகள் என்னென்ன என்பதாக அவர் உரை விளங்கியது. 

``  நம்முடைய பிரயத்தனத்தினால் மட்டும் எதுவும் கிடைக்காது என்று எப்போது தீர்மானமாகிறதோ, அப்போதுதான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றோம். துக்கம் வேண்டும் என்று  யாரும் ஆண்டவனிடம் கேட்பதோ தேடுவதோ இல்லை. `ஷாந்தி வேண்டும்' என்று வேண்டுகிறோம். ஆனாலும், ஷாந்தி அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை.

ஷாந்தி என்பது ஏற்கெனவே நம்முள் இருப்பதுதான். மனிதன் இயல்பிலேயே சாந்தி உடையவன்தான். ஆனால், சூழ்நிலைகள் மாறுவதாலும் சாந்தியைக் குலைக்கக்கூடிய ஏதோ ஒன்று புதிதாகத் தோன்றுவதாலும் `அஷாந்தி' ஏற்படுகிறது. மனிதன் சுத்தமான மனத்துடன்தான் பிறக்கிறான். ஆனால், காலங்கள் போகப் போக மாறுகிறான்.

தயாலயா

நமக்கு மூன்று வகையில் அஷாந்தி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.  அவை `அதி தெய்வம்', `அதிபூதம்', `அத்யாத்மம்' என்பன. 
ஒரு விஷயம் நம் கட்டுப்பாட்டில் இல்லாத சூழ்நிலைகளின் காரணமாக ஏற்படும் துன்பத்தை அதி தெய்வம் என்று சொல்லலாம். உதாரணம் பூகம்பம், புயல், வறட்சி, இவற்றுக்கெல்லாம் யார் காரணம் என்பதைச் சொல்லமுடியுமா? இவ்வாறானவை தெய்வ சங்கல்பத்தினால் நிகழ்வது என்று கொண்டால், அது அதி தெய்வம் என்றாகிறது. இதைப் போன்ற பிரச்னைகள் நமக்கு வாழ்வில் ஏற்பட வேண்டாம் என்று முதலில் ஷாந்தியைத் தேடுகிறோம். 

தயா

அடுத்தது, பிறரால் ஷாந்தி அற்றுப் போகும் நிலை -  `அதி பூதம்'. நமக்கு வெளியே உள்ள சூழ்நிலைகளால் உண்டாகும் பிரச்னைகள். கர்மாவுக்கு இரண்டு பலன் உண்டு. ஒன்று `த்ருஷ்ட பலன்'. மற்றொன்று அதிருஷ்டபலன். ஒன்று நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய பலன். மற்றொன்று நம் கண்ணுக்குத் தெரியாத பலன். நம்முடைய வாழ்வில் பாதி நேரம் மற்றவர்களை மாற்றும் முயற்சியிலேயே உள்ளோம். அவ்வாறு மாற்ற முயற்சிசெய்யும்பொழுது ஏற்படும் தோல்வி, மனத்தில் அஷாந்தியை உண்டாக்குகிறது.  

மூன்றாவது  `அத்யாத்மம்' என்னும் நிலை. தெய்வத்தாலும், பிறராலும் ஏற்படாமல் தன்னிடம் இருந்தே வரக்கூடிய துன்பத்தால் உருவாகும் அஷாந்தி. எறும்பு கடிப்பது `அதிபூத அஷாந்தி'. ஆனால் `ஏன் என்னை மட்டும் கடிக்க வேண்டும் ?'  என்கிற சிந்தனை தன்னை இழிவுபடுத்தி நினைத்துக்கொள்வதால் உருவாவது. இதையே, `அத்யாத்மம்' என்கிறோம்.

தயா

நமக்கு வாழ்வில் நிகழும் அனைத்து விஷயங்களிலும் நன்மையும், தீமையும் கலந்தேயிருக்கும். அவற்றுள், தீங்குகளை விட்டுவிட்டு நல்லவைகளை மட்டுமே பார்க்கக் கற்றுக்கொண்டால் மனதில் நிம்மதி உண்டாகும். அந்த ஷாந்தி நிலை சுகத்தைக் கொண்டுவரும். எனவே, நிகழ்வது, எதுவாகிலும் அவற்றிலிருந்து ஷாந்தி கொள்ளவதென்பது நம் கையில்தான் இருக்கிறது" என்று தன் உரையை நிறைவுசெய்தார் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி


டிரெண்டிங் @ விகடன்