பரவசம் தரும் யமுனோத்திரி யாத்திரை! | yamunothri yathra

வெளியிடப்பட்ட நேரம்: 12:02 (12/07/2013)

கடைசி தொடர்பு:11:26 (12/07/2013)

பரவசம் தரும் யமுனோத்திரி யாத்திரை!

ஆன்மிக பயணம் - 13

 - சிவ.இராஜேஸ்வரி இராஜா, திருச்சி-21

ட இந்தியாவில் புகழ்பெற்ற யாத்திரைக்கு 'சார்-தாம்’ (Char - Dhom)  என்று பெயர். யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதர்நாத், பத்திரிநாத் - இவையே 'சார்-தாம்’ என்று அழைக்கப்படுகின்றன. சார்-தாம் புனித யாத்திரையை முடித்துவிட்டால் மற்ற எந்த இடங்களுக்குச் செல்வதும் கடினமாக இருக்காது என்பார்கள். அவ்வளவு கடினமான, கரடுமுரடான, பயத்தை வரவழைக்ககூடிய மலைப் பாதைகளில் இந்தப் புண்ணிய யாத்திரையை மேற்கொள்கிறார்கள் பக்தர்கள். நாங்களும் இந்த யாத்திரை சென்று வந்த அனுபவத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த நான்கு புண்ணிய ஸ்தலங்களுள் மிகவும் மோசமான மலைப் பாதையைக் கொண்டது யமுனோத்திரிக்குச் செல்லும் பாதை. ரிஷிகேஷிலிருந்து மலைப்பாதை தொடங்குகிறது. டேராடூன், முசோரி, நவுகாங், பார்கோட், சயனாசட்டி, ஜானகி சட்டி வரை 234 கி.மீ. தொலைவுக்கு மலையிலேயே பயணிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரம் ஆகிவிடுகிறது. அதற்குப் பிறகு ஜானகி சட்டியிலிருந்து 6 கி.மீ. தூரம் 5 அடி அகலமே கொண்ட பாதையில் குதிரையிலோ, தோடாவிலோ அல்லது நடந்தோ 3 முதல் 4 மணி நேரம் பயணித்துதான் யமுனோத்திரி கோயிலை அடைய முடியும்.

யமுனோத்திரி பயணத்தை முடித்துவிட்டால் மற்ற மூன்று பயணங்களும் எளிது என்பார்கள். அவ்வளவு ஏற்ற இறக்கங்களும், குறுகலான வழிகளும், கிடுகிடு பள்ளங்களும், நெருக்கடியும் மிகுந்தது யமுனோத்திரி மலைப் பயணம்.

யமுனோத்திரியை அடைவதற்கு முன் உள்ள பெரிய ஊரான பார்க்கோட்டை நெருங்கும்போதே, யமுனை உற்பத்தியாகும் சம்யோசர் பனிச்சிகரம் நம்மை எட்டிப் பார்க்கிறது. அந்த அற்புதக் காட்சியில் பரவசமாகி நின்றோம். நாங்கள் பார்க்கோட்டை நெருங்கும்போது மாலை 4 மணி. அந்த மாலை நேர வெயிலில் கம்பீரமான யமுனோத்திரி பனிச்சிகரம் வெள்ளியை உருக்கிக் கொட்டியதுபோல தகதகவென்று மின்னியது. மேலும், 4 மணி நேரம் பயணித்து சயனாசட்டியை அடைந்தபோது இரவாகிவிட்டது. அங்கேயே தங்கினோம்.

'சார்-தாம்’ பயணத்தின்போது 'சட்டி’ (Chatti)  என்ற பெயரில் நிறைய ஊர்கள் காணப்படுகின்றன. 'சட்டி’ என்றால் 'தங்குமிடம்’ என்று பொருள். இந்த இடங்களெல்லாம் இரவு நேரத்தில் எதிரும் புதிருமாக நிறுத்தப்படும் வாகனங்களால் நிரம்பிவிடுகின்றன. காலையில் 4 மணிக்குக் கிளம்பத் தொடங்கும் வாகனங்கள் 6 மணிக்கெல்லாம் காணாமல் போய்விடுகின்றன. இந்த ஊர்களில் நிறைய தங்குமிடங்கள் உள்ளன. அவரவர் வசதிக்கு ஏற்றது போல ஒருவருக்கு ரூ.100 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்த ஊர்களில் முக்கிய தொழிலே இதுதான். கோயில் திறந்திருக்கின்ற மே மாதம் முதல் அக்டோபர் வரை இந்த ஊர்கள் ஜேஜே என்றிருக்கும். அப்புறம் வெறிச்சோடிப் போய்விடும்.

மறுநாள் காலை 6 மணிக்கு சயனாசட்டியை விட்டுக் கிளம்பினோம். 16 கி.மீ தூரத்தை ஒரு மணி நேரம் பயணம் செய்து ஜானகிசட்டியை அடைந்தோம். யமுனோத்திரியின் அடிவாரம்தான் ஜானகிசட்டி. பேருந்து அத்துடன் நின்றுவிடும். அங்கிருந்து 6 கி.மீ. தொலைவுக்கு குதிரை, டோலி அல்லது நடைப்பயணம்தான். நாங்கள் சென்ற நேரம் பேருந்து நிலையத்தில் குதிரைக்காரர்கள், டோலிவாலாக்கள் கூட்டம் திருவிழாபோல கூடியிருந்தது. குதிரைகளோ ஆயிரக்கணக்கில் இருந்தன. அத்தனை குதிரைகளை அதுவரையில் ஒரே இடத்தில் நான் பார்த்ததில்லை!

விமானப் பணிப்பெண்கள் பயணிகளுக்குத் தரும் எச்சரிக்கைபோல, எங்கள் வழிகாட்டியும் சில குறிப்புகளைத் தந்தார். குதிரைக்காரர்களிடமும் டோலிவாலாக்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள்; யாரும் கீழே இறங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

வெளியே எட்டிப் பார்த்தோம். வழிகாட்டி சொன்னது போல ஒவ்வொரு பயணியையும் 10, 15 டோலிவாலாக்களும் குதிரைக்காரர்களும் சூழ்ந்துகொண்டிருந்தார்கள். குதிரைகளில் போக வர ஆளுக்கு ரூ.1000 என்று வழிகாட்டி பேசிவிட்டு வந்திருந்தார். ஒவ்வொருவராக இறங்கினோம்.

அவரவருக்குரிய குதிரைவாலாக்கள் எங்கள் கைகளைப் பிடித்து 'இழுத்து’ச் சென்றார்கள். அவர் கையை நழுவவிட்டால், பின்தொடர்ந்து வரும் குதிரைவாலா நம் கையைப் பற்றிக்கொண்டு பேரம் பேசிவிடுவார்போல! அவர்கள் வேகத்துக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியவில்லை. எப்படியோ படாத பாடுபட்டு, குதிரைகள் சூழ்ந்திருந்த மந்தைக்குச் சென்றோம். இல்லை இல்லை... 'இழுத்து’ வரப்பட்டோம்!

எங்களுக்குரிய குதிரையை நிறுத்தி ஏறுவதற்குக்கூட முடியாமல் மற்ற குதிரைகள் எங்களை உரசிக்கொண்டு சென்றன. எந்தப் பக்கம் ஒதுங்குவது என்று தெரியவில்லை. குதிரைகள் கூட்டத்துக்கு நடுவே நாங்கள் திசை தெரியாமல் நகர முயன்று கொண்டிருந்தோம். எங்களுக்கு மட்டுமில்லை, குதிரை ஏற ஆசைப்பட்டவர்கள் எல்லோரது நிலையும் இதுதான்!

ஒருவழியாக, குதிரைக் குழப்பத்திலிருந்து தப்பித்து வெளியே வந்தோம். 100 மீட்டர் தூரம் தாண்டி வந்து எங்களைக் குதிரைகள் மீது ஏற்றிவிட்டார்கள். நான்கு பேர் கொண்ட எங்கள் குழுவில் நான் உட்பட மூவர் பெண்கள். இன்னொருவர் என் கணவர். எங்கள் மூவருக்கும் குதிரை ஏற பயம்தான். இருந்தாலும், புதிய அனுபவத்துக்கான ஆசையும் அசட்டுத் தைரியமும் பயத்தை விரட்டிவிட்டன. அப்போது நாங்கள் ஆபத்தை உணரவில்லை. குதிரைகள் கிளம்பின. குதிரைவாலாக்கள் கூடவே வந்தார்கள்.

நடந்து செல்பவர்களும், டோலியில் செல்பவர்களும், கூடையில் செல்பவர்களும், குதிரையில் செல்பவர்களுமாக... பக்தர்கள் கூட்டம் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் அந்தக் குறுகலான 5 அடி அகல மலைப் பாதையில் நிரம்பி வழிந்தது. நாங்களும் நம்பிக்கையுடன் யமுனாதேவியை தியானித்துக்கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்று முடிவெடுத்து, புதிய அனுபவத்தைத் தேடிச் சென்றோம்.

சம தளத்தில் சென்ற குதிரை திடீரென்று உயரமான படிக்கட்டுகளில் ஏற ஆரம்பித்தது. எங்களுக்குள் ஒளிந்திருந்த பயம் வெளிப்பட்டது. உட்கார்ந்திருக்கும் சீட்டின் முன்னால் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, குதிரை படிக்கட்டில் ஏறும்போது முன்னால் வளைந்தும், படிக்கட்டில் இறங்கும்போது பின்னால் சாய்ந்தும்... இப்படி ஒரேநேரத்தில் பலவிதமான தேகப் பயிற்சிகளை செய்துகொண்டு வந்தோம். கூடவே, வழியில் உள்ள ரம்மியமான காட்சிகளில் மனத்தைப் பறிக்கொடுத்தோம். அதனால் எங்கள் பய உணர்வு அவ்வப்போது மறைந்துபோனது என்னவோ உண்மைதான்.

இந்த இடத்தில் யமுனை நதி பற்றி ஒரு குட்டித் தகவலைச் சொல்லிவிடுகிறேன்.

யமுனை நதியின் உற்பத்தி ஸ்தானம் யமுனோத்திரி பனித்தொடர் எனப்படுகிறது. இந்த மலைத்தொடர் கடல் மட்டத்திலிருந்து 3,954 மீட்டர் (12,972 அடி) உயரமுள்ளது. அதற்கும் மேல் சம்பாசார் பனித்தொடர் உள்ளது. இது 4,421 மீட்டர் (14,605 அடி) உயரம் கொண்டது. இங்கிருந்துதான் யமுனோத்திரி உற்பத்தியாகிறது என்று சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும், யமுனோத்திரி கோயில் வரைதான் நாம் செல்ல முடியும். யமுனோத்திரி செல்லும் 6 கி.மீ நீள மலைப்பாதை கிடுகிடு பாதாளங்களும், குறுகலான வழிகளும், கூர்மையான பாறைகளும், குனிந்து செல்ல வைக்கும் குடைவரைப் பாறைகளும் அதிகம் கொண்டது. எனவே அச்சம், கவனம், மகிழ்ச்சி மூன்றும் கலந்த பயணமாக யமுனோத்திரி பயணம் இருந்தது.

குதிரை ஏறியதிலிருந்து யமுனோத்திரியை அடைகின்ற வழிநெடுகிலும் யமுனை நதி, எங்களுடனேயே 500 முதல் 1000 அடி பள்ளத்தாக்கில் வளைந்து நெளிந்து பயணித்துக்கொண்டிருந்தது. சில வளைவுகளில் கீழே இருந்து பார்த்தால், மேலே 5-வது வளைவு வரை ஆட்களும் குதிரைகளும் வரிசையாகப் போய்க் கொண்டிருப்பது அழகாகத் தெரிந்தது.

இங்கு கூட்ட நெரிசல் அடிக்கடி ஏற்படுமாம். அப்படி நெரிசல் ஆகிவிட்டால், சரியாவதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஆகுமாம். நாங்கள் வந்த நேரத்திலும் 2, முறை நெரிசல் ஏற்பட 6 கி.மீ. தூரத்தை கடக்க 4 மணி நேரம் ஆகிவிட்டது.

ஓரிடத்தில் குதிரையிலிருந்து இறக்கிவிட்டார்கள். அங்கிருந்து கோயில் 200 மீட்டர் தொலைவில் இருந்தது. கோயிலுக்கு முன்னால் நுங்கும் நுரையுமா 'ஹோ’ வென்ற பேரிரைச்சலுடன் பெரிய பெரிய பாறைகளில் முட்டி மோதிக்கொண்டு யமுனை நதி அதிர்ந்தபடி பாய்ந்து கொண்டிருந்தது. வேகமாக வீசிய காற்றில் அந்த மெல்லிய நீர்த் திவலைகள் எங்கள் மீது பட்டு இன்ப அதிர்ச்சியைத் தந்தன. நடந்து செல்லும் வழியெங்கும் தலையின் மேலுள்ள பாதை இடுக்குகள் வழியாக நீர்த் திவலைகள் கொட்டின. பக்கவாட்டுப் பாறைகளில் கசிந்த பனிநீர் எங்கள் கால்களைத் தழுவி, ஜில்லிட்டது. கடினமான பயணத்துக்கான பயனை அப்போதே அனுபவித்துவிட்டோம் என்ற ஆனந்தம் எங்களுக்குள் ஊற்றெடுத்தது.

ஆற்றுப் பாலத்தைக் கடந்து கோயிலை நெருங்கினோம். ஒரே கூட்டம். யமுனையில் நேரடியாகக் குளிக்க முடியாது; குளிப்பதற்கான வசதிகள் இல்லை என்பது ஒருபுறம் இருக்க... யானையையே இழுத்துக்கொண்டு ஓடிவரும் அளவுக்குத் தண்ணீரின் வேகம் இருக்கும். குளிரோ தாங்க முடியாது. கோயில் உயரமான மேட்டில்! நம் ஊர் மாடக் கோயில்போல அமைந்திருக்கிறது. 10- 15 படிகள் ஏறிப் போக வேண்டும். எந்த வழியாகப் போக வேண்டும், எந்த வழியாக வரவேண்டும், வெந்நீர் ஊற்றுகள் எங்குள்ளன என்பது பற்றியெல்லாம் அறிவிப்புகள் இல்லை. அப்படியே ஒன்றிரண்டு அறிவிப்புகள் இருந்தாலும், அவை முழுக்க முழுக்க இந்தியிலேயே இருந்தன. எல்லாமே நாமாக மற்றவர்களைப் பார்த்துப் பின்தொடர்ந்து சென்று தெரிந்து கொள்ளவேண்டியதாகவே இருந்தது.

எப்படியோ, கூட்டத்தில் திக்குமுக்காடி இருட்டில் படியைத் தடவுவதுபோல கால்களால் தடவித் தடவியே படிகளைக் கண்டுபிடித்து, மேலே ஏறினோம். பெண்கள் குளிப்பதற்கு வெதுவெதுப்பான கௌரி குண்டமும், ஆண்கள் குளிப்பதற்கு சூடான சூரிய குண்டமும் தனித்தனியே உள்ளன. பெண்கள் குளிப்பதற்குப் போதிய வசதிகள் இல்லை. இருட்டு வேறு. இருந்தாலும், அந்தக் குளிருக்கு அது சுகமாக இருந்தது. சற்றுத் தள்ளி அதிக சூடான வெந்நீர் ஊற்று உள்ளது.  அதில் சிலர் அரிசியை ஒரு துணிப் பையில் கட்டி வேகவைத்துக் கொண்டிருந்தனர். அந்தச் சோற்றை அவர்கள் பிரசாதமாக எடுத்துச் செல்வார்களாம்.

உடை மாற்றிக்கொண்டு கோயிலுக்குச் சென்றோம். சந்நிதியில் கறுப்பு நிறத்தில் ஒன்றரை அடி உயரத்தில் காளிந்தி எனப்படும் யமுனைதேவியைத் தொழுது வணங்கினோம். தாஜ்மகாலின் அழகுக்கு அழகு சேர்ப்பது யமுனை நதியல்லவா? இந்தியாவின் மூன்று முக்கிய நதி நங்கையரில் இவள் இரண்டாமவள் அல்லவா? அருள் ததும்பும் அந்த விழிகளைப் பார்த்துக்கொண்டே நின்றோம்.

அருகிலேயே ஓரடி உயரத்தில் சிவந்த நிறத்தில் கங்காதேவி; இருவருக்கும் நடுவில் வெள்ளி லட்சுமி தேவி. மூவரையும் தரிசித்த அந்த நேரத்தில் எங்களை மறந்தோம். நாங்கள் பட்ட கஷ்டங்கள் மறைந்தன. வாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கையை சூரியக் கடவுளின் புத்திரியான யமுனாதேவி எங்களுக்குத் தந்தாள்.

பரவசப்படுத்திய பஞ்ச துவாரகா!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்