தேவாரம்... தேனமுது! | lord muruga

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (09/06/2014)

கடைசி தொடர்பு:18:31 (09/06/2014)

தேவாரம்... தேனமுது!

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் வழிபடுவதற் கும், பாடி மகிழ்வதற்கும் மட்டுமின்றி, தமிழ்ச்சொல்லணி இயலுக்கும் மூலமாகத் திகழ்கின்றன. திருமொழிமாற்று, திருமாலைமாற்று... என இதில் பலவகை உண்டு. அதில் ஒரு வகை 'கோமூத்திரி அந்தாதி’!

தண்டியலங்காரத்தில், சித்திரக்கவி வகைகளில் இதுவும் ஒன்று. ஒரு செய்யுளை இரண்டு வரிகளாக எழுதி, மேலும் கீழும் ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து எனச் சேர்த்து வாசித்தாலும், அதே செய்யுளே வரும். பசுவானது நடந்துகொண்டே கோமியம் கழிக்கும்போது, அந்த நீர் விழுந்த தாரையானது மேலும் கீழுமாக நெளிந்த வடிவமாகத் தோன்றுமல்லவா... எனவேதான், இதற்கு 'கோமூத்திரி அந்தாதி’ எனப் பெயர் உண்டானது. கீழுள்ள பாடலைக் கவனியுங்கள்

பருவ மாகவி தோகன மாலையே

பொருவி லாவுழை மேவன கானமே

மருவு மாசைவி டாகன  மாலையே

வெருவ லாயிழை பூவணி காலமே

இந்தப் பாடல், இரு வரிசையாக 'கோமூத்திரி’ வடிவில் எப்படி இருக்கிறது என்பதை படத்தில் பார்த்து மகிழலாம்.

இதுமட்டுமின்றி, சொல்லணி இயலில் சுவாரஸ்யம் கூட்டும் இன்னும் பல வகை பாடல்கள் உண்டு. வகைகளும் உதாரணப் பாடல் களும் இங்கே உங்களுக்காக...

திருமொழிமாற்று:

காடு அது அணிகலம் கார் அரவம் பதி; கால் அதனில்

தோடு அது அணிகுவர் சுந்தரக்காதினில் தூச்சிலம்பர்;

வேடு அது அணிவர் விசயற்கு உருவம் வில்லும் கொடுப்பர்;

பீடு அது அணிமணி மாடப்பிரமபுரத்து அரரே.

திருமாலை மாற்று:

யாமாமா நீ யாமாமா யாழீ காமா காணாகா

காணா காமா காழீயா மாமாயாநீ மாமாயா

வழிமொழித் திருவிராகம்:

சீர்காழிக்கு பன்னிரண்டு பெயர்களும் வந்த  வழி- வரலாறு மொழியப்பெறும் பதிகம்... அதாவது வழிகளை மொழிந்த ராகமு டைய பதிகம், 'வழிமொழித் திருவிராகம்’ எனப் பெயர் பெற்றது.

முதற் பாடல், பிரமபுரத்துக்கு (சீர்காழி) பெயர் வந்த வழியைச் சொல்கிறது; 'சுரர், நரர், தரணி, முரண்...’ என 'ர’கரமாக வரும்.

இரண்டாவது பாடல், 'தாணு, வணி, ஆணு, பேணு...’ என 'ண’ கரமாகவும் வரும்.

இயமகமாகிய ஏகபாதம்:

ஒரே அடி நான்கடியாக மடங்கி வரின், ஏகபாதம் ஆகும். உதாரணம்: மிழலை, ஆலவாய், கச்சி ஏகம்பம் பதிகச் செய்யுள்.

ஈரடி:  

இரண்டு அடிகளில் அமையும் பாடல் உதாரணம்: 'வரமதே கொளா...’ - பழம் பஞ்சுரப் பண்.

திரு இருக்குக்குறள்: இரண்டு அடிகளில் குறள் வடிவில் பாடப்பட்ட பதிகம். உதாரணம்...

'அரனையுன்குவீர்...’,

'நீலமிடற்று ஆலவாயன்...’,

'வாசி தீரவே காசு நல்குவீர்...’

'சித்தந்தெளிவீர்காள்...’

திரு எழு கூற்றிருக்கை: எண் அலங்காரப் பாடல். சித்திரக் கவி.

ஒன்று, இரண்டு, ஒன்று, ஒன்று, இரண்டு, மூன்று, இரண்டு, ஒன்று... என ஒன்று முதல் ஏழு வரையிலும் படிப்படியாக ஒவ்வொன்று ஏற்றியும், இறக்கியும் ஏழு கூறுகளிலும் எண்கள் இருக்க இயற்றப்படும் செய்யுள், எழு கூற்றிருக்கை ஆகும்.

கூறுகளாக அறைகளைக் கீறும்போது...

முதற்கூற்றில் மூன்று அறைகளும்

இரண்டாம் கூற்றில் ஐந்து அறைகளும்

மூன்றாம் கூற்றில் ஏழு அறைகளும்

நான்காம் கூற்றில் ஒன்பது அறைகளும்

ஐந்தாம் கூற்றில் பதினோரு அறைகளும் கீறி, இவற்றை ரதபந்தமாக அமைப்பது வழக்கம்.

ஈரடி மேல்வைப்பு: முதல் இரு அடிகள் ஓர் அமைப்பாகவும், அடுத்த இரண்டு அடிகள் மற்றொரு அமைப்பாகவும் அமையப் பாடப்படுவது. உதாரணம்:

'தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய்...’

(அடிகள் வெவ்வேறாக வரும்)

கொள்ளம்புதூர் பதிகத்தில் ஒன்றாய் வரும். 'கொட்டமே கமழும்’

நாலடி மேல் வைப்பு: பாடலின் முதல் நான்கு அடிகள் ஓர் அமைப்பிலும், மேல் வைப்பாக வரும் அடிகள் வேறு அமைப்பிலும் வரும். உதாரணம் :

இயலிசையெனும் - புகலிப் பதிகம்

வேதவேள்வியை - ஆலவாய்ப் பதிகம்

இடரிலும் தளரினும் - ஆவடுதுறைப் பதிகம்

திருவிராகம்: விரைந்து செல்லும் ஓசையும் நடையும் கொண்ட பாடல்கள் உதாரணம்: 'எந்தமது சிந்தை பிரியாத பெருமான்’ (சண்பை நகர் பதிகம்)

திருச்சக்கரமாற்று: சக்கர வடிவமாக அடைத்துச் சுழன்று வருவது போல், சீர்காழியின் 12 பெயர்களுமே மாறி மாறிச் சுழன்று வருவது போல பாடப்பட்டிருக்கும். இது, ஒரு சக்கரத்தைப் போன்று சுழன்று சுழன்று வருவதால் 'சக்கரமாற்று’ எனப்பட்டது.

முதல் திருப்பாட்டில் இறுதியில் வரும் 'கழுமலம் என்றும்’ 2-ம் திருப்பாட்டில் முதலிலும்; 2-ம் பாட்டின் இறுதியில் உள்ள 'தோணிபுரம்’ 3-ம் பாட்டின் முதலிலும் வரும்படி தொடர்ந்து பாடப்பட்டிருக்கும். பன்னிரண்டாம் பாட்டின் இறுதி அடியில் உள்ள 'அயனூர்’ என்பது, பூமகனூர் எனும் திருப்பாட்டின் முதலிலும் வரும். இப்படி, பதிகத்திலுள்ள 12 திருப்பாடல்களும் சீர்காழிக்கு உரிய 12 திருப்பெயர்களால் முன்னும்பின்னுமுள்ள திருப்பாடல்களுடன் இணைந்து, ஒரு வட்டமாகச் செல்வதால் இப்பதிகம் சக்கரம் என்ற பெயர் பெற்றது. உதாரணம்: 'விளங்கிய சீர் பிரமனூர்...’ என்று தொடங்கும் காந்தாரப் பண்.

2-ம் திருமுறை 12-ம் பாடலில், 'இச்சக்கரம் சீர் தமிழ் விரகன் தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே’ என்று சம்பந்தர் சொல்கிறார்.

திருமுக்கால்: நான்கடிப் பாடலில் முதல், மூன்றாம் அடிகள் நான்கு சீர்களுடனும், 2 மற்றும் 4-ம் அடிகள் மூன்று சீர்களுடனும் பாடப்பெறும். குறைந்த சீருடைய 2-ம் அடியானது, நிறைந்த சீருடைய 3-ம் அடியில் மீண்டும் வரும். உதாரணம்:

தேனமர் பொழிலணி சிறுகுடி மேவிய

மானமர் கரமுடை யீரே

மானமர் கரமுடை மீருமை வாழ்த்திய

ஞான சம்பந்தன தமிழே.

பதிகங்களின் எல்லாப் பாடல்களிலும் ஊரின் பெயரை முதலடியிலும், இறைவனை 'உமை’ என்றே விளித்தும் பதிகம் முழுவதும் பலன் சொல்லி பாடியிருக்கிறார்.

திருச்தாளச்சதி: ஆடலில் உபயோகிக்கும் தாளச் சொற்கட்டுகள் உள்ள பாடல். உதாரணம்:

'பந்தத்தால் வந்தெப்பால் பயின்று

நின்ற வும்பரே...’ எனும் பாடல்.

கூடற் சதுக்கம்: 2-ம் திருமுறையில் 109-ம் பதிகம். உதாரணம்:

'மண்ணது வுண்டரி மலரோன் காணா

வெண்ணாவல் விரும்பு மயேந்திரருங்

கண்ணது வோங்கிய கயிலையாரும்

அண்ணலாரூராதி யானைக் காவே’

திருக்கயிலாயம், திருவானைக்கா, திருமயேந்திரம், திருவாரூர் ஆகிய நான்கு தலங்களையும் தனித்தனியே போற்றும்போது, நான்கு தலங்களும் சதுக்கம் போல் அமைந்ததால், இப்பதிகம் 'கூடற்பதிகம்’ எனப் பெயர் பெற்றது.

பல் பெயர் பத்து:

'எரியார் மழு ஒன்று ஏந்தி...’ எனும் பதிகம்; 12 பாடல்கள். ஒவ்வொரு பாடலின் ஈற்றடியிலும், சீர்காழியின் பெயர் சொல்கிறார் சம்பந்தர் (பிரமபுரத்தானே, வேணு புரத்தானே, தோணி புரத்தானே... இப்படி!). இறுதிப் பாட்டில், 'பல்பெயர் பத்து’ என்று அவரே பெயரிட்டிருக்கிறார்.

வினாவுரை:

இறைவனை நோக்கியும் அடியார்களை நோக்கியும் இறைவனின் இயல்பைக் குறித்து வினாவும் முறையில் உள்ள திருப்பதிகங்கள்.உதாரணம்:

'செந் நெலங் கழனிப் பழனத்தயலே செழும்

புன்னை வெண் கிழியற் பவளம் புரை பூந்தாய்

துன்னி நல்லிமை யோர் முடிதோய் கழவீர் சொலீர்

பின்னு செஞ்சடையிற் பிறை பாம்புடன் வைத்ததே’

விமலா ராமமூர்த்தி, கே.கே.புதூர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்