கொலு வைப்பது எப்படி..? சொல்லித்தராங்க ! | How to trowel? ... Teach...!

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (30/09/2014)

கடைசி தொடர்பு:17:37 (30/09/2014)

கொலு வைப்பது எப்படி..? சொல்லித்தராங்க !

வராத்திரி என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது கொலு தான். கொலு வைப்பதென்பது ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் குட்டி திருவிழா தான். நவராத்திரி முழுவதும் வீட்டை அலங்கரித்து, மாவிலை தோரணத்தால் வீட்டை அலங்கரித்து கொலு படிகட்டுகள் அமைத்து பொம்மைகளால் அவற்றை அலங்கரிப்பதே ஒரு தனி கலைதான்.அந்த கலை எல்லோருக்கும் எளிதில் வந்து விடாது.

அப்படி ஒரு கலையை எல்லோருக்கும் சாத்தியம் ஆக்குகிறது ஒரு கலை அமைப்பு. சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் 'தி மயிலாப்பூர் ட்ரையோ' என்ற அமைப்பு, ஒவ்வொரு வருடமும் கொலு எப்படி வைப்பது, கொலு வைப்பதன் அவசியம் என்ன, நவராத்திரியின் சிறப்புகளை எல்லோருக்கும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பல வருடம் பாரம்பரியமானது நவராத்திரியில் கொலு வைப்பது. எங்கள் அம்மாவும், அப்பாவும்தான் எங்களுக்கு முன்னோடி. எங்கள் வீட்டில் 52 வருடங்களாக தொடர்ந்து கொலு வைத்துக் கொண்டு வருகிறோம். அப்போதுதான் தோன்றியது, இதை மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் செய்தால் என்னவென்று. 2003ல் ஆரம்பிக்கப்பட்டது தான் 'தி மயிலாப்பூர் ட்ரையோ'.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக கொலு வைக்கும் நிகழ்ச்சியும் நடத்திக்கொண்டிருக்கிறோம். அதுபோலவே, மார்கழி பால உத்சவம், தியாகராஜா ஆராதனை, பால குருகுலம், பாலர் சித்திரை கலை விழா, நவராத்திரி கொலு போன்று ஆண்டு முழுவதும் கொலு கொண்டாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம், என்று இந்த அமைப்பை பற்றி விவரிக்கிறார் சுரேந்தர்.

சுரேந்தர் தவிர அமர்நாத் மற்றும் அபர்ணாவும் சேர்ந்துதான் இந்த அமைப்பை நிறுவி வழிநடத்தி வருகின்றார்கள். கொலு வைப்பதோடு மட்டும் அல்லாது சமயம் சார்ந்த பல கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஆன்மிகம் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறார்கள். கடந்த பத்து வருடங்களாக இவர்கள் நடத்தி வரும் கொலுவை பார்வை இடவே ஆயிரக்கணக்கானவர்கள் வந்து செல்கிறார்கள். 'நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தையும்' மக்களுக்கு எடுத்து சொல்வதையே தங்களது குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

அதனால் ஒவ்வொரு வருடமும், கொலு எப்படி வைப்பது, என்ன மாதிரியான கொலு பொம்மைகள் வைப்பது, எத்தனை படிகள் வைப்பது போன்ற விளக்கம் தருவதில் இருந்து, கொலு முடிந்து எப்படி பொம்மைகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்பது வரை இவர்கள் பயிற்சிக்கு வருபவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் நவராத்திரிக்கு இரண்டு வாரங்களுக்கு முன் இவர்களது வீட்டிலேயே சிறிய அளவில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. அதோடு மட்டும் அல்லது அந்த பகுதியில் நடக்கும் கொலு போட்டிகளுக்கும் நடுவர்களாகவும் இந்த அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

2009 ஆண்டு சென்னை, கபாலீஸ்வரர் கோயிலில் இவர்கள் நடத்திய கொலு எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. இவர்கள் மேற்கொள்ளும் கொலு அனைத்தும் ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் இருக்கும்.அதுபோலவே கபாலீஸ்வரர் கோயிலில் 'மகாமேரு கொலு' என்ற தலைப்பில் இருந்தது. 2010ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 'அல்லிக்கேணி அலங்கார கொலு' என்ற தலைப்பில் கொலு அமைத்திருந்தனர். அதன் பிறகு பல கோயில்களில் கொலு அமைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது இந்த அமைப்பு.

தாங்கள் எடுத்துக் கொண்ட தலைப்பை கொலுவில் கொண்டு வருவது ஒரு கலை. அந்த கலையை பார்ப்பவர்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் செயல்படுத்துவதிலேயே இவர்கள் விடாமுயற்சியை தெரிந்து கொள்ளலாம். இந்த வருடம், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இவர்கள் அமைக்கவிருக்கும் பிரம்மாண்ட கொலுவை காண, தமிழகத்தில் இருந்து பலரும் மதுரைக்கு செல்ல இருக்கிறார்கள். நவராத்திரி முடிந்தும் மக்கள் பார்வைக்காக அடுத்த பத்து நாட்களும் கோயிலில் கொலு நடைபெறும்.

தொடர்ந்து பத்து வருடங்களாக இவர்கள் செய்து வரும் ஆன்மிகத் தொண்டும், கலைத் தொண்டும் வளர்ந்து இந்த சமூகத்திற்கு ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இ.லோகேஸ்வரி

படங்கள்: இர.யோகேஸ்வரன்
(மாணவப் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்