வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (05/10/2014)

கடைசி தொடர்பு:07:50 (05/10/2014)

அக்.: 5 "வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் பிறந்த தின சிறப்பு பகிர்வு

தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், மும்மொழி கல்வியை கொண்டுவந்தவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என்று பல சிறப்புகளை பெற்றார் இவர்.

பசி நெருப்பை அணைப்பதே சீவகாருண்யம் என்ற புதிய கொள்கையை தோற்றுவித்தவர் இவர். தனது தலையாய கொள்கையான சீவகாருண்யத்தின் முக்கிய நோக்கமாகிய பசிக்கொடுமையை போக்கியவர்.

சிதம்பரத்தை அடுத்த மருதூரில் இராமையாபிள்ளை-சின்னம்மையார் தம்பதியருக்கு தவ புதல்வனாக 1823ம் ஆண்டில் பிறந்தவர் இவர். இராமலிங்கம் என்பது இவரின் இயற்பெயர். பிற்காலத்தில் இராமலிங்க அடிகள், வள்ளலார், அருள் ஜோதி, ஞான ஒளி, திருஅருட்பிரகாசம் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.

சொற்பொழிவாளர், இறையன்பர், ஞானாசிரியர், அருளாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, இதழாசிரியர், போதகர், உரையாசிரியர், சித்தமருத்துவர், பசிப் பிணி போக்கிய அருளாளர், நூலாசிரியர், தீர்க்கதரிசி, தமிழ் மொழி ஆய்வாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர் இவர்.

எதிலும் பொது நலம் வேண்டும் என்று கடைசி வரை எந்த பயனும் கருதாமல் வேண்டி வந்தவர்களுக்கு எந்த பாகுபாடும் கருதாமல் உதவி கரம் நீட்டியவர் இவர்.

'பசி' தான் கொடிய நோய். இன்றளவும் மக்கள் அனைவரும் உழைப்பது வயிற்று பசிக்காக தான்!
அப்பர்.     வயிற்று பசியை போக்கிய மகான் இவர். கடலூரை அடுத்த வடலூர் என்னும் ஊரில் பசியில் வாடும் வறியவர்களுக்கு இவர் தொடங்கிய 'சத்திய ஞான சபை' என்னும் தரும சாலை மடம் இன்று வரை சாதி, மதம், மொழி என்ற வேறுபாடு பார்க்காமல் நாடி வரும் அனைவருக்கும் பசி பிணியை போக்கி வருகிறது. இன்றளவும் இவர் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு இச்சபையின் மூலம்  பசியாற்றப்படுகிறது. வடலூரில் இச்சபை இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பல்வேறு மக்கள் பின்பற்றுகிறார்கள்.

இவர் 1867ஆம் ஆண்டு அன்று ஏற்றிய தீப ஜோதி இன்று வரை அணையாமல் எரிந்து பலரின் பசியை போக்கி கொண்டிருக்கிறது. அந்த தீப ஜோதி, எண்ணெய்க்கு பதிலாக சாதாரண தண்ணீரில் எரிகிறது என்பது அதன் சிறப்பம்சமாகும்.

-கடவுள் ஒருவரே, அவர்
அருட்பெருஞ்சோதி ஆண்டவர். அவர் ஒளியாக
உள்ளார்,அவருக்கு மனித உருவம்
இல்லை, அருள் என்னும் ஆற்றல்
உள்ளது. அதற்கு பெயர் ''அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி!
தனிப்பெரும் கருணை !
அருட்பெரும்ஜோதி !!'' என்பதாகும். அந்த ஒளிதான் பல கோடி அண்டங்களையும்
இயக்கிக் கொண்டு இருக்கிறது.

-எந்த உயிரையும் கொல்லக்கூடாது, சாதி, மதம், இனம், மொழி முதலிய
வேறுபாடு கூடாது.

-இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி
தான் வைக்க வேண்டும்.

-பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம்,
மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.

-சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும்
கூடாது, எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது .

அன்றைய தினங்களில் இது போன்ற முற்போக்கான கருத்துக்களுக்கு பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர். யாரும் ஏற்று கொள்ள தயாராக இல்லை. ஆனால் இன்று அவற்றின் ஆழ்ந்த அர்த்தங்களை உணர்ந்து பலரும் அதன்படியே நடக்கின்றனர்.

இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, "திருவருட்பா" என்று அழைக்கப்படுகிறது. அவை ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.

இந்திய அரசு இவரது சேவையை கருத்தில் கொண்டு 2007 ஆகஸ்ட் 17ல் தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.

'இவர் இன்னும் இறக்கவில்லை' என பலதரப்பட்ட மக்களாலும் இன்று வரை நம்பப்பட்டு வருகிறது.

ஆம், உண்மை தான்!

எந்த பயனையும் கருதாமல் மற்றவரின் பசியை போக்கும் கருணையுள்ளம்  கொண்ட ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வள்ளலார் இன்று வரை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

ஜி.கே.தினேஷ்
மாணவப் பத்திரிகையாளர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்