கார்த்திகை மாதம் பிறப்பு: குமுளி, கம்பம்மெட்டு சாலையில் நாளை முதல் ஒருவழிப் பாதை அமல்!

கார்த்திகை மாதம் தொடங்கி மகர ஜோதி தரிசனம் வரை சபரி மலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே தான் இருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு, வரும் 17ஆம் தேதி முதல் குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக கேரளத்துக்குச் சென்று வருவதற்கு ஒரு வழி பாதை போக்குவரத்து அமல்படுத்தப்பட உள்ளது.

குமுளி, கம்பம்மெட்டு சாலை வழியாக சபரிமலைக்கு லட்சக்கணக்காண ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் சென்று வருவது வழக்கம்.

சபரிமலைக்குச் சென்றுவரும் வாகனங்கள் குமுளி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பல மணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, ஐயப்பன் கோயில் சீசனில் குமுளி, கம்பம்மெட்டு சாலையில் ஒருவழிப் பாதையில் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.சென்ற வருடம் போலவே, இந்த ஆண்டும், சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் நாளை தொடங்குகிறது. அன்றைய தினம் முதல், தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் குமுளி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும்.

சபரிமலையில் இருந்து  திரும்ப வரும் வாகனங்கள் கம்பம்மெட்டு சாலை வழியாக வர வேண்டும். ஒரு வழிப்பாதைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பம், கம்பம்மெட்டு சாலையில் காவல் துறை சோதனைச் சாவடி அமைக்கப்படுகிறது.

வாகன அனுமதிச் சீட்டு: தேனி மாவட்டம், வழியாக கேரளத்துக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள், கூடலூர் அருகே லோயர்கேம்பில் செயல்பட்டு வந்த போக்குவரத்து சோதனைச் சாவடியில் தாற்காலிக அனுமதிச் சீட்டு பெற்று வந்தனர்.

சபரிமலைக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்கள் பழனிசெட்டிபட்டியில் உள்ள போக்குவரத்து சோதனைச் சாவடியில் கேரளத்துக்குச் சென்று வர தாற்காலிக அனுமதிச் சீட்டு பெற்று செல்லலாம்.

இ.லோகேஸ்வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!