ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: விழாக் கோலம் பூண்ட திருப்பூர் | tirupur sri veera ragavap perumal temple kumbabishaekam

வெளியிடப்பட்ட நேரம்: 17:07 (02/12/2014)

கடைசி தொடர்பு:17:13 (02/12/2014)

ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: விழாக் கோலம் பூண்ட திருப்பூர்

திருப்பூர்: வரலாற்றோடு பின்னிப்பிணைந்த தொன்மை கொண்ட  திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று ( 1.12..2014 )நடைபெற்றது.

இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 1999 ம் ஆண்டு நடந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின் இப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிட்டத்தக்கது. சுமார் 9 மணியளவில் எம்பெருமான் புறப்பாடு யாக சாலையில் இருந்து துவங்கியது. கருட பகவான் ஆலயத்தை வலம் வந்ததும், சரியாக 9.47 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க அனைத்து கோபுரங்களின் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டு குடமுழுக்கு விழா அதி விமரிசையாக நடைபெற்றது. 10.22 க்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக ஸ்பிரிங்லர் மூலம் புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. மேலும் கோபுரங்களின் மீது ஹெலிகாப்டர் மூலம் பூ தூவ ஏற்பாடு செய்ப்பபட்டிருந்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராஜகோபால மணவாளமுனி சுவாமிகள் அருளாசி வழங்க திரும்பும் திசையெங்கும் பெருமாள் நாமமாகவே காட்சியளித்தது. நூறு ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல் ஒரு கும்பாபிஷேக தரிசனத்துக்கு ஈடானது என்பதால் மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர்.

திருப்பூர் நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இதை கண்டு ஆண்டவனின் அருள் பெறும்வகையில் கோவில் நிர்வாகம் பல இடங்களில் எல்.சி.டி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. உற்சவரான பூமாதேவி தாயாருடனுறை வீரராகவ பெருமாள், ஸ்ரீகனகவல்லி தாயாரின் கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளினார். விழாவில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் ஆசிபெற்று சென்றனர். திருப்பூர் நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது இந்த நாளில்.


-பா.குமரேசன்


(மாணவப் பத்திரிக்கையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்