வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (20/12/2014)

கடைசி தொடர்பு:13:17 (20/12/2014)

சூடிக் கொடுத்தவளே! சுடர்க்கொடி நீ வாழி!

"பக்தி
முக்திக்கு முதன்மையான வழி!
ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாக ஜீவனுள்ள உயர் நெறி!"

 இறைவனைக் காதலனாகவும், தன்னைக் காதலியாகவும் பாவித்து கொள்ளும் பிரேம பக்தி மிகச் சிறந்த பக்தி ஆகும்.

பகவானே ஆனாலும் பூமியில் மனிதனாய்ப் பிறந்து  பரம்பொருளிடத்தே ஆழ்ந்த பிரேமை பூண்டு அன்பு செலுத்தினால்தான், பிரேம பக்தியின் சிறப்பை உணர முடியும்! அப்படி ஓர் ஆசை பூமிதேவிக்கும் ஏற்பட்டது. அந்த ஆசையின் விளைவாக பூமிதேவி எடுத்த அவதாரமே ஆண்டாள் அவதாரம்.

 பகவானின் அருளுடன் பூமகள் தேவி, ஸ்ரீவில்லிபுத்தூரில், பெரியாழ்வார் வீட்டு நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், ஆடிமாதம், சதுர்த்தசி திதி, சுக்ல பட்ச, பூர நட்சத்திரத்துடன் கூடிய சுபதினமான ஒரு செவ்வாய்க்கிழமையன்று, அழகிய பெண் குழந்தையாய் அவதரித்து நின்றாள்.

வழக்கம்போல் நந்தவனத்திற்கு வந்த பெரியாழ்வார் துளசிச் செடியின் அடியில், ‘சாட்சாத் தேவியே குழந்தையாக அவதரித்தாளோ’ என்று எண்ணுமளவிற்குப் பேரழகுப் பெட்டகமாய்த் திகழ்ந்த பெண் குழந்தையைக் கண்டு, ‘தமது பிள்ளைக் கலிதீர தாயாரே தமக்குக் குழந்தையாய் வந்துதித்து விட்டாள்’ என்று பெருமிதம் கொண்டு, அந்தக் குழந்தையை ஆசைதீர அள்ளியெடுத்து அணைத்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பினார்.

அழகுமிகு குழந்தையுடன் வரும் கணவரைக் கண்ட பெரியாழ்வாரின் மனைவி, அவரது மார்பில் தவழ்ந்த படி, மலர்முகம் காட்டிச் சிரித்த குழந்தையைத் தன் கையில் வாங்கிக் கொண்டு, நடந்ததைக் கேட்டறிந்து பெருமகிழ்ச்சி கொண்டாள்.பெரியாழ்வாரின் வீட்டில் அக்குழந்தை கோதை என்ற பெயர் கொண்டு, நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தாள்.அழகிலும், அறிவிலும் சிறந்து, வளர்ந்த கோதை, நினைவு தெரிந்த நாளிலிருந்தே நீங்காத பிரேமையினைக் கொண்டுவிட்டாள் கண்ணனிடம்.அவள் தோன்றியதன் காரணமே, பிரேம பக்தியின் சிறப்பினை நமக்கெல்லாம் விளக்கி, நம்மை பரம்பொருளிடத்தே ஐக்கியப்படுத்திடத்தானே!

பெரியாழ்வார் தினந்தோறும் வடபத்ரசாயிக்குச் சார்த்த தொடுத்து வைத்திருக்கும் பூமாலையைத் தான் சூடிப்பார்த்து, ரசித்து, இருந்த இடத்திலேயே வைத்து விடுவாள் கோதை.நீண்ட நாட்களாக நிகழ்ந்து வரும் இந்த நிகழ்ச்சியை அறியாத பெரியாழ்வார், ஒரு நாள் இதைப் பார்த்து விட்டார். உடனே கோபத்துடன் கோதையைக் கடிந்து கொண்டதுடன், வேறொரு மாலையினைத் தொடுத்து வடபத்ரசாயிக்குச் சார்த்தினார்.

அன்றிரவு உறங்கிய பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய பெருமாள், ‘‘நின் மகளை சராசரி பெண்ணாக எண்ணிவிடாதே! இன்று தான் சூடிய மலர்மாலையை எனக்களித்து என்னை ஆண்ட அவள், நாளை பாமாலை எனக்குச் சூட்டி என்னுடன் ஐக்கியமாகப் போகிறாள்’’ என்று அருளினார்.

அன்றுமுதல் கோதை ‘ஆண்டாள்’ என்று போற்றப்பெற்றாள்.

ஆண்டாளின் பிரேம பக்தி நாளுக்கு நாள் பெருகிக் கனன்றது. இனி கணப் பொழுதும் கண்ணனைக் காணாது இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளாகி விட்டாள்.

தான் இருக்கும் இடத்தை கோகுலமாகவும்,தன் தோழியர்களை கோபியராகவும்
தன்னை பிரேமபக்தியில் சிறந்த ராதையாகவும், தான் காணும் வடபத்ரசாயியைக் கண்ணனாகவும் பாவித்து, கண்ணனைக் கணவனாய்ப் பெற பாவை நோன்பு நோற்றாள்.அக்காலத்தில் அவள் பாடிய பாவைப் பண்கள் முப்பதுமே தினம்தினம் தித்திக்கும் திருப்பாவையாய்த் திகழ்கிறது.

மார்கழியில் பாவை நோன்பு நோற்ற ஆண்டாள் கண்ணனின் தரிசனம் கிடைத்து, அவனுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள மன்மதனை வேண்டிப் பண் இசைத்தாள்.அரங்கனைத் தன் மணாளனாக எண்ணிய கோதை, கனவில் அவனுடன் திருமணம் நடப்பதைக் கண்டு மகிழ்கிறாள்.கவிதையில் கண்ணன் புகழ்பாடி ஆனந்தம் அடைகிறாள்.

ஊடல் விளையாட்டுகளில் திளைத்து, பெருமாளிடம் கொண்ட பக்தியை, இனிமையான மதுர பக்தியாக வெளியிடுகிறாள்.
‘‘மாலாய்ப்பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?
மேலாற் பரந்தவெயில் காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே’’

என்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பாடி அருளிய பாமாலைகளை, நாமும் பாடி மாமாயன் கண்ணனின் அருள் பெறலாமே!

-எஸ்.கண்ணன் கோபாலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்