வெளியிடப்பட்ட நேரம்: 16:26 (06/01/2015)

கடைசி தொடர்பு:17:01 (06/01/2015)

இறைவனோடு மனிதன் எப்படி இருக்க வேண்டும்..?

ன்னிரு ஆழ்வார்களும், தங்கள் வாழ்வை பகவான் ஸ்ரீவிஷ்ணுவுக்கு அர்ப்பணித்து, அவரது புகழ் வையக மெங்கும் பரவிட, எழுத்துக்களால் சேவை செய்தனர். அவர்களுள் ஒருவரான குலசேகர ஆழ்வார், மனித னுக்கும் இறைவனுக்கும் உள்ள நீங்காத் தொடர்பினை பற்றி 10 பாசுரங்கள் பாடியுள்ளார்.

இவை ஐந்தாம் திருமொழி என்றழைக்கப்படுகின்றன.

அதாவது பெருமாள் திருமொழியின் 40 முதல் 50 வது பாடல்களாகும். "நவ வித சம்மந்தம்" என்றழைக்க படும் அந்த பாசுரங்களை குலசேகர ஆழ்வார் ஒன்பது உவமைகளைக் கொண்டு நமக்கு உணர்த்துகிறார். உவமைகள் ஒவ்வொன்றிலும் மனிதன், இறைவனை எவ்வாறு நேசிக்க வேண்டும் என்பதை கூறியுள்ளார்.

முதல் உவமை : தாய் - சேய்

இதில் ஆழ்வார், " தரு துயரம் தடையே " என்று தாய் சேய் உறவை கூறும் பாடலில், ஒரு தாய் தன் குழந்தை யை வெறுத்து ஒதுக்கினாலும் அது தாயின் அன்பை தேடிச் செல்லுமாம், அதை போல நாராயணன் அன்பை தேடி மனிதர்களும் செல்ல வேண்டும் என்கிறார்.

இரண்டாம் உவமை : கணவன் - மனைவி


"கண்டார் " செய்யுளில், ஒரு கணவன் தன் மனைவியை பொது இடங்களில் வைத்து துன்புறுத்தினாலும் கூட அவள் அதை எல்லாம் மறந்து தன் கணவனின் அன்பை தேடிச் செல்வாள். அதுபோல், குலசேகர ஆழ்வார், இறைவன் தன்னை ஏற்காவிட்டாலும் அதை மறந்து அவரிடம் அடைக்கலம் நாடிச் செல்ல வேண்டும் என்கிறார்.

மூன்றாம் உவமை : குடிமகன் - அரசன்

"மீன் நூக்கும்" என்ற பாடலில், ஓர் அரசன் தன் குடிமகனின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டாலும் , அவன் மீது நம்பிக்கை கொண்டு காத்திருப்பான், அதுபோலவே இறைவன் தன் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்காமல் இருந்தாலும், அவருடைய அருளை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்கிறார்.

நாங்காம் உவமை : நோயுற்றவர் - மருத்துவர்


நோய் தீர உடலில் கூர்மையான பொருளால் அறுவை சிகிச்சை செய்தாலும், அவன் உயிர் காத்த மருத்துவர் மீது நம்பிக்கையோடு இருப்பான், அதுபோலவே இறைவன் தன் பற்றை சோதித்தபோது அவர் மீது நம்பிக் கையோடு இருப்பதாக கூறுகிறார்.

ஐந்தாம் உவமை : பறவை - பாய்மரம்

இந்த பாடலில், ஒரு பறவை பல திசைகள் இருந்தும், பெரிய கப்பலின் பாய்மரம் தேடி செல்லுமாம், அது போலவே தான் பல இடங்கள் தேடியும், இறைஅடி போல தன் வாழ்வை திருப்தி அடைய செய்ய வேறு இடமில்லை என்கிறார்.

ஆறாம் உவமை : தாமரை - சூரியன்

என்னதான் தாமரைக்கு அருகில் செந்தழலை வைத்தாலும் , சூரியனின் செங்கதிர் பட்டால் மட்டுமே அது மலரும், அது போலவே தம் ஆத்மாவை இறைவனின் உயரிய தன்மையை தவிர வேறு எந்த பொருளுக்கும் கரைய விட மாட்டேன் என்கிறார்.

ஏழாம் உவமை : மேகங்களும் - பயிர்களும்

மழை இல்லாவிட்டாலும், மேகத்தை நோக்கி காத்திருக்கும் பயிர்களை போல, கடவுள் தன் மீது தற்சமயம் அருள் பாவிக்காவிட்டாலும், என்றாவது ஒரு நாள் தன் துன்பங்களையும் வலியையும் போக்குவார் என்ற நம்பிக்கையோடு வாழ்வேன் என்கிறார்.

எட்டாம் உவமை : நதியும் - கடலும்

இந்த பாடலில் ஆழ்வார் கூறுவதாவது, ஓர் இடத்தில் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியானது , கடலில் சென்று கலந்து ஓயும். அது போலவே தான் இறைவனின் மேன்மை பண்புகளை சென்றடைவதை தவிர வேறு எங்கும் ஓயமாட்டேன் என்கிறார்.

ஒன்பதாம் உவமை : கொண்டால் - கொண்டார்

இறைவன் மீது தான் கொண்ட நம்பிக்கை மூலம் மோட்சம் அடைந்துவிட்டால், பின், பணம், புகழ் , அந்தஸ்து போன்ற வாழ்கைக்கு தேவையானவற்றை அடைவதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்கிறார்.

- ரெ.சு வெங்கடேஷ்
   

     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்