தெப்ப உத்சவம்: ஆனந்தம் தந்த அரங்கன் தரிசனம்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கத்தில் நேற்று தெப்ப உத்சவம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான  மக்கள் இதில் கலந்து கொண்டு அரங்கனை வழிபட்டனர்.

இந்த பத்து நாட்களும் உள் வீதிகளில் அரங்கன் வீதியுலா வந்தார். முதல் நாள் அம்ச வாகனத்தில் கற்பக விருஷம், ஹனுமந்த் வாகனம் போன்ற வாகனங்களில் வீதியுலா வந்தார் அரங்கன். இதில் 4ஆம் நாள் நிகழ்ந்த வெள்ளி கருட சேவை மிகவும் புண்ணியமாக கருதப்படுகிது. தை, மாசி, பங்குனி, சித்திரை என கருட சேவை வருடத்தில் நான்கு மாதம் உண்டு.

இதில் மாசி மாதம் மட்டும் வெள்ளி கருடசேவை. இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் "மாசி கருடன் காசியிலும் கிடைக்காது" என்ற சொலவடை உண்டு.

மாசி மாத கருடனை தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பப்படுகிறது. இந்த சேவையின் போது கருடன் தங்க நிற பட்டாடையில் சிகப்பு ஜரிகை போட்ட ஆடை உடுத்தி, இறக்கைகள் இரண்டு பக்கமும் விரித்து, கைகளால் பெருமாளின் திருவடியை தாங்கிக்கொண்டு இருந்தார். ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்த லம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன்.

தெப்பம் நடந்த அன்று அந்த இடமே மிகவும் கோலாகலமாக காணப்பட்டது. சிறுவர்கள் தெப்பகுளத்தில் குதித்து சாகசம் புரிந்து விளையாடினார்கள். எங்கும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வான வேடிக்கைகளுடன் நிறைந்து காணப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் காவல் துறை மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டது.

- மு.கோதாஸ்ரீ
படங்கள்: தே.தீட்ஷித்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!