பூத நெல் திருவிழா!

பண்டைய காலம் தொட்டு இன்று வரை  திருவாரூரில் வெகு விமரிசையாக நடைபெறக்கூடிய ஒரு விழாவாக இருந்து வருவது  பூத நெல் விழா..
 
“சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் பரவை நாச்சியாரை மணம் புரிந்து, அத்தலத்திலேயே சிறிது காலம் தங்கி, தல மூர்த்திகளான வன்மீகநாதரையும் தியாகராஜப் பெருமானையும் முப்பொழுதும் வணங்கி வந்தார். திருவாரூருக்கு அருகில் உள்ள 'திருக்கோளிலி'(திருக்குவளை) என்னும் தலத்தில் குண்டையூர்க்கிழார் என்னும் அடியவர் வாழ்ந்து வந்தார். இவர் சுந்தரரிடம் பேரன்பு பூண்டிருந்தார்.
 
சுந்தரரும் அடியவர்களும் உணவு செய்யும் பொருட்டு நெல், பருப்பு, சர்க்கரை முதலிய உணவுப் பொருட்களை பரவையாரின் இல்லத்திற்கு தவறாது அனுப்பும் தொண்டினையும் கிழார் புரிந்து வந்தார். ஒரு சமயம் அவ்வூரில் கடும் பஞ்சம் நிலவ, சுந்தரருக்கு உணவுப் பொருட்களை அனுப்ப இயலாததால் குண்டையூர் கிழார் பெரிதும் வருந்தி, திருக்கோளிலி இறைவனிடம் முறையிட்டார்.


 
இறைவன் கிழாரின் கனவில் எழுந்தருளி 'சுந்தரர் பொருட்டு உம் வாயிலில் நெல் மலையைக் குவித்தோம்' என்று அருளிச் செய்தார். கண் விழித்த கிழார் தம் இல்லத்து வாயிலில் நெல் மலைகள் குவிந்து இருக்கக் கண்டு பெருமகிழ்வு எய்தி, திருவாரூர் சென்று சுந்தரரிடம் இறைவனின் அருட்செயலை தெரிவித்தார். சுந்தரர் திருக்கோளிலி சென்று நெல் மலைகளைக் கண்ணுற்று வியந்தார்.
 
நெற்குவியல்களை திருவாரூருக்கு கொண்டு செல்வது இயலாத காரியம் என்றும் உணர்ந்தார். திருக்கோளிலி ஆலயம் சென்று 'நீள நினைந்து அடியேன்' என்னும் தேவாரம் பாடி இறைவனை துதித்து, நெல் மலைகளை திருவாரூரில் சேர்ப்பிக்குமாறு வேண்டினார். கோலிளி இறைவனும் அசரீரி மார்கமாய் 'இன்று இரவு பூத கணங்களைக் கொண்டு நெல்மலைகளை திருவாரூரில் சேர்ப்பிப்போம்' என்று அறிவித்து அருளினார்.
 
சுந்தரர் திருவருளை எண்ணி வியந்து திருவாரூர் திரும்பினார். அன்று இரவே இறைவனால் ஏவப்பட்ட பூத கணங்கள் நெல் மலைகளை திருக்கோளிலியில் இருந்து கொணர்ந்து, திருவாரூர் முழுவதும் நிறைத்தன. பொழுது புலர்ந்ததும் சுந்தரரும் ஊர் மக்களும் திருவாரூர் முழுவதும் நெல் மலைகள் குவிந்து இருக்கக் கண்டு பெருவியப்பு எய்தினர்.


 
பரவை நாச்சியார் அவரவர் வாயிலில் உள்ள நெல் மலைகளை அவரவர் எடுத்துச் செல்லலாம் என்று பறை அறிவிக்க, அனைவரும் சுந்தரரையும் பரவையாரையும் போற்றிப் புகழ்ந்தனர் !”

      இந்த புராதான நிகழ்வு - திருவாரூரில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைப் போக்க உதவும்படி திருக்குவளையைச் சேர்ந்த குண்டையூர்க்கிழாரிடம் சுந்தரர் கேட்டுக்கொள்ள, அவர் பெரும் நெல் மலையையே அளித்ததாகவும் சுந்தரர் பதிகம் பாட சிவனின் பூத கணங்கள் இரவோடு இரவாக அவ்வளவு நெல்லையும் திருவாரூர் கொண்டு சேர்த்ததாகவும் சொல்லப்படும் 'நெல்மகோற்சவம்’ என்ற திருவிழாவாக நடைபெற்றது. பக்தர்கள் பூதவேடம் அணிந்து நெல் மூட்டைகளை சுமந்து நகரத்தின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து திருகோவிலில் முடிவடைந்தது.  இந்நிகழ்வை ஆன்மிக மெய்யன்பர்கள் பாரம்பரிய இசை முழக்கங்களுடன் முடித்து வைத்தனர்.

த.க.தமிழ் பாரதன்
(மாணவ பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!