காஞ்சியின் சித்திரம் பங்குனி உத்திரம்

துரை என்றால் மீனாட்சி, காஞ்சி என்றால் காமாட்சி என்பது  இவ்வுலகறிந்த ஒன்று. காஞ்சிபுரம் என்றவுடன் அனைவர் மனதிலும் தோன்றும் ஒன்று, காஞ்சி பட்டு. கோவில் என்றால் காமாட்சி அம்மன். காஞ்சி வாழ் மக்கள், தமிழக கோவில்கள் பற்றி அறிந்தவர்கள் தவிர வேறு எவருக்கும் ஏகாம்பரநாதர் கோவில் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை.

வானுயர்ந்த கோபுரம், ஆயிரம் கால் மண்டபம், பிரமாண்ட குளம், மூன்று வெவ்வேறு சுவை கொண்ட மாம்பழம் தரும் மாமரம் இப்படி பல சிறப்புகள் உள்ளடக்கியது தான் ஏகாம்பரநாதர் கோயில்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயிலின் சிறப்புமிகு திருவிழா, பங்குனி ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி திருமண விழா. திருவிழா என்றாலே சிறப்பு, அதிலும் இது 13 நாள் திருவிழா. பக்தர்களின் கொண் டாட்டத்திற்கு சொல்லவா வேண்டும்? இந்த நாட்களில் காஞ்சி நகரம் தூங்க நகரமாகும். கொடியேற்றம் துவங்கி தீர்த்தவாரி வரை 13 நாட்களும் கொண்டாட்டம்தான்.

ஏகாம்பரநாதர் ஏலவார் குழலியின் திருமணத்திற்கு முன்தினம் பூனை குறுக்கே சென்றதால், ஏலவார் குழலி அம்மன் தன் தாய் வீட்டுக்கு சென்றதாகவும் அதன் பின் ஏகாம்பரநாதர் சமாதானம் செய்து திருமணத் திற்கு அழைத்து வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அந்நிகழ்வும் இத்திருவிழாவில் உண்டு. அதுசரி, 13 நாள் அப்படி என்ன நிகழும்?

முதல் நாள் காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது பங்குனி உத்திரம். அன்று மாலை சிம்ம வாகனத் தில் ஏகாம்பரநாதர் உலா வருகிறார். அதற்கு அடுத்த நாள் காலை சூரிய பிரபை உற்சவம், மாலை சந்திர பிரபை உற்சவம். மூன்றாம் நாள் அன்று பூத வாகனத்தில் சாமியின் தரிசனம். நான்காம் நாள் அன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் நாதர் உலா. அடுத்த நாள் ராவனேஸ்வரர் உற்சவம். ஆறாம் நாள் காலை அறுபத்தி மூவர் என்றழைக்கப்படும் 63 நாயன்மார்களின் உற்சவம்.

அன்று மாலையே ஏகாம்பரநாதர் வெள்ளி தேரில் திருவீதி உலா. நான்கு ராஜா வீதி வழியே ஏகாம்பரநாதர் வெள்ளி தேரில் மின் விளக்குகள் மின்ன வருவதை காண, மக்களிடையே அப்படி ஒரு உற்சாகம். அடுத்த நாள் கட்டைத்தேரில் (மரத்தேர்) பவனி. எட்டாம் நாள் குதிரை வாகனம். ஒன்பதாம் நாள் மாவடி சேவை, முன்பு சொன்ன அந்த மூன்று வெவ்வேறு சுவை கொண்ட மாம்பழம் தரும் மரத்தின் இலைகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார் குழலியின் வரவேற்பு நிகழ்ச்சி.

வரவேற்பு முடிந்த பின் என்ன? அடுத்த நாள் காலை திருமணம்தான். பங்குனி உத்திரம் என்றழைக்கப்படும் திருக்கல்யாண பெருவிழா நிறைவேறும். அதற்கு அடுத்த நாட்களில் ருத்ரகோட்டி உற்சவம், பஞ்ச மூர்த்தி உற்சவம் போன்றவை நிகழும். 13ஆம் நாள் நிகழ்வான தீர்த்தவாரி, கோவிலுக்கு அருகே உள்ள சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ, யானை உற்சவம் முடிந்த பின் கொடி இறக்கத்துடன் பங்குனி உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

இதன் பின் உற்சவ சாந்தி சிறப்பு பூஜை நிகழும். இவ்விழாவை காண மக்கள் கூட்டம் அலைமோதும், நான்கு ராஜ வீதிகளிலும் மக்கள் கூட்டம் கடல் அலை போல் நிரம்பி வழியும். சாமியை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் எனில், அங்கு நிகழும் வாண வேடிக்கைகளை காண மற்றொரு கூட்டம். வழக்கம்போல் திருவிழா என்றால் நினைவுக்கு வருவது கடைகள், ராட்டினம் போன்றவை, அதுவும் இங்கு உண்டு.

டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, காளி ப்ளவர் பக்கோடா என சிறுவர்களை உற்சாகப்படுத்தும் கடை களுக்கும் பஞ்சம் இல்லை. ஆங்காங்கே சமய சொற்பொழிவுகளும் நிகழும்.

தன்னிகரற்ற இந்த திருவிழாவை நேரில் சென்று பார்த்து ஏகாம்பரநாதர் அருள் பெறுவோம் வாருங்கள்.

-அ.பார்த்திபன்
(மாணவப் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!