1000 மணிகளும் அழகிய நேர்த்திக்கடனும்: மேலூர் மந்தைவீரன் கதை | thousands of bell: melur mandhai veeran story

வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (18/04/2015)

கடைசி தொடர்பு:13:36 (18/04/2015)

1000 மணிகளும் அழகிய நேர்த்திக்கடனும்: மேலூர் மந்தைவீரன் கதை

"எத்ததண்டி ஆளா இருந்தாலும், இங்கிட்டு வந்தாங்கன்ன...அவன் ஆட்டத்தைக் குறைச்சுக்கணும் . இல்லென்ன தெக்குத்தெரு மந்தைவீரன் சாமி அவங்கள தண்டிப்பாரு, புதுசா வந்த பையன்களை, சாமி கும்பிட்டுட்டு சூதானமா போகச்சொல்லுப்பா" - மதுரை மேலூர் அருகேயுள்ள , தெற்குத்தெருவை நாம் நெருங்கும்போது இப்படி ஊர் பெருசுகளின் பேச்சு, பகீரென வந்து விழுந்தன நம் காதுகளில். தெற்குத்தெரு என்பது மதுரை, மேலூர் அருகேயுள்ள அழகிய பாரம்பரியமான ஒரு கிராமம் .

ஊர்ப் பொது மந்தையில், 1000 -த்திற்கும் மேற்பட்ட மணிகள் புடை சூழ, கம்பீரமாய் வீற்றிருக்கிறார் பெருசு பயமுறுத்திய "மந்தை வீரன் சாமி". சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ,நடைபாதையின் எல்லையில் காவல் தெய்வமான "மந்தை வீரனை'' பிரதிஷ்டை செய்து வழிபடுவதால், ஊரும் சிறப்புறும் என எண்ணி, கோவில் எழுப்பி வணங்கப்பட்டதாக கூறுகிறது மந்தை வீரன் சாமி வரலாறு .

இக்கோவிலில் விநோத விழாக்கள் இன்னும் கொண்டாடப்படுகின்றன.

பாரி வேட்டைக்குச் செல்லுதல்:


சிவராத்திரியின் போது, இப்பகுதிமக்கள் இரவுத்தூக்கம் களைய சுற்றியுள்ள, மலைப்பகுதிக்கு முயல் வேட்டைக்குச் செல்கின்றனர். அப்போது மந்தை வீரனை வழிபட்டுவிட்டு செல்வது வழக்கம். இப்படி சென்று திரும்புவதால், அவ்வருடம் எந்தவொரு பிரச்னைகளும் இன்றி, ஊர் ஒற்றுமையுடன் இருக்கும் என்பது  மக்களின் நம்பிக்கை .

பகிஞ்சி விழா

சிவராத்திரியின்போது வேட்டையாடி திரும்பிய மக்கள், புளியமரத்திற்கு அடியில் நின்று அதனை சாட்சியாக வைத்து, பாதுகாப்பிற்கு கொண்டு சென்ற கம்புகளை வானில் தூக்கி வீசுகின்றனர். முன்னர் ஏற்பட்ட பகைமையில் வீண் பழிக்கு ஆளானவர்கள் கம்புகளை தூக்கி எறிவதன் மூலம் தாங்கள் உண்மையானவர்கள் என அப்புளியமரத்திற்கும், சுற்றியிருக்கும் ஊர்மக்களுக்கும் எடுத்துக்கூறுவதே தூக்கி எறிதலின் நோக்கம்.

இதனாலேயே ஊர்ப் பஞ்சாயத்துகளில் பிரச்னைக்குரிய இருதரப்பினரிடமும் உண்மை நிலை அறிய புளியமரத்தின் அடியில் நிற்க வைத்து விசாரிப்பார்களாம். அப்படி நிற்கும்போது, உண்மையைப்பேசி விடுவார்களாம். அப்படி நடந்த உண்மை  வெளிவரும் என்பதால்தான் தவறு செய்தவர்கள், புளிய மரத்தின் அடியில் செல்ல மாட்டார்களாம். அந்தளவுக்கு சத்தியவான்களுக்கான மரமாக, முன்னொரு காலத்தில் "புளிய மரம் "கருதப்பட்டுள்ளது

பிணக்கு தீர்க்கும் விழா


ஒவ்வொரு வருடமும் பங்குனியில் கோயில் திருவிழா நடைபெறுமாம். அப்போது கோவில் திருவிழா பற்றி பேச்சு துவங்குவதற்கு முன் ,பரம்பரை பகையுள்ளவர்கள், அதை முறிக்க ஒன்று கூடி, அழகர் கோவி லில் உள்ள நுபுர கங்கையில் குளித்துவிட்டு, கோவில் அடிவாரத்தில் உள்ள சம்ப தோசையை வாங்கி சாப்பிடுவார்களாம்.

பின்  ஊருக்குப் பொதுவான ஊருணியில் பகையாளர்கள் இருவரோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ, மூழ்கி குளித்து, அங்கிருந்து பிடி அளவு மண் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள ஐயனாரை வணங்கியபின் தங்கள் பிணக்கினை  பேசி தீர்த்துக்  கொள்வார்களாம். கோவில் திருவிழா என்று தொடங்கிவிட்டால், எல்லோரும், எல்லோருடனும் சகஜமாக பேசிவிடவேண்டும் என்பதற்காகவே, இந்த ஏற்பாடு.

1000 மணிகள் உடைய அதிசயக் கோவில்


சிறப்பு மிக்க இக்கோவிலில் விசேஷமான நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் மணிகளை கட்டுவதாக வேண்டிச்செல்வார்களாம். அப்படி உருவானதுதான் 1000 -க்கும் மேற்பட்ட மணிகள். ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவில் நடக்கும் அக்கினி குண்டமிறங்கும் திருவிழாவில் இளைய வயதினர் உப்பு, சர்க்கரை, மிளகு ஆகியவற்றை, தங்கள் தலையை சுற்றி, தீயில் இடும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த கோவிலை வழிபட மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து மேலூர் செல்லும் பேருந்து பிடித்து செல்லவேண்டும்.

இப்படி பாரம்பரியமான கோவில்களை காண்பதன் மூலம், தென் தமிழக மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் எவ்வளவு அழகாக உள்ளது என்பதை நேரில் அறிய முடியும். இந்த அழகான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!

- ம.மாரிமுத்து

படங்கள்: சே.சின்னத்துரை
(மாணவப் பத்திரிக்கையாளர்கள் )

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்