மதுரை சித்திரை திருவிழா: இலவச நீர் மோருக்கு 'நோ'.. பன்னாட்டு பானத்துக்கு பாதுகாப்பு! | Madurai Chithirai Festival: Police ban free distribution of buttermilk to devotees

வெளியிடப்பட்ட நேரம்: 14:22 (19/04/2016)

கடைசி தொடர்பு:15:55 (19/04/2016)

மதுரை சித்திரை திருவிழா: இலவச நீர் மோருக்கு 'நோ'.. பன்னாட்டு பானத்துக்கு பாதுகாப்பு!


துரையில் நடந்து வரும் சித்திரை திருவிழாவில், இன்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடந்தது.

மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு, வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு எதுவாக இருந்தாலும் கோவிலை சுற்றியுள்ள மூல ஆவணி வீதி, வடக்கு மாசி வீதி, தெற்கு மாசி வீதி, ராஜ கோபுர வீதி எனக் கோவிலை சுற்றி இருக்கும் வீதிகளில் சித்திரை வெயிலுக்கு இதமாக பக்தர்களுக்கு குடிக்க பொது மக்கள் சார்பில் நீர் மோர், பானக்கரம் உள்பட நீர் ஆகாரங்கள் கொடுப்பார்கள். அதை கோவிலுக்கு வரும் பொதுமக்கள் விரும்பி வாங்கி பருகுவார்கள்.

இந்த ஆண்டு கோவிலை சுற்றியுள்ள பிரதான வீதிகளில் நீர் மோர் ஆகாரங்கள் கொடுக்கக்கூடாது என்று காவல்துறை சார்பில் தடை போட்டு விட்டனர். இது பொது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், பன்னாட்டு குளிர்பான நிறுவனமான கோகோ கோலா நிறுவனத்தின் குளிர்பானங்கள்  ஸ்டால் போட்டு விற்பனை செய்யப்பட்டது.

''இலவசமாக கொடுக்கும் பாரம்பர்யமான உள்ளூர் நீர் மோர்களுக்கு தடை விதித்து விட்டு, கோகோகோலா நிறுவனத்திற்கு ஸ்டால் போட்டு வியாபாரம் செய்ய எப்படி அனுமதி கொடுத்தீர்கள்?'' என்று மதுரையை சேர்ந்த 'நாணல் நண்பர்கள்' சமூக வலையதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர்.

நாணல் நண்பர்கள் குறிப்பிட்ட இடத்தை பார்வையிட்டோம். அந்த இடத்தில் கோகோகோலா நிறுவனம் சார்பில் ஸ்டால் போட்டு இருந்தனர்.

இது குறித்து காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, ''மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதிக அளவில் செயின் பறிப்பு, நகை திருட்டுகள் நடக்கிறது. தவிர குற்றவாளிகளே நீர் மோர் கொடுப்பது போல கொடுத்து பக்தர்களின் உடைமைகளை திருடவும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு யாருக்கும் நீர் மோர் கொடுக்க அனுமதி வழங்கவில்லை. கோகோகோலா விற்கும் அனுமதி வழங்கவில்லை" என்றார்கள்.

'நாணல் நண்பர்கள்' அமைப்பை சேர்ந்த தமிழ்தாசன், " காவல் துறைக்கு தெரியாமல் எப்படி பன்னாட்டு நிறுவனத்தினர் ஸ்டால் போட முடியும்? பாரபட்சம் காட்டும் அதிகாரிகள் யார் என்று மக்களுக்கு தெரிய வேண்டும். பாரம்பர்யமாக நடைபெறும் இலவச நீர் மோர் கொடுக்கும் வேண்டுதல் நிகழ்வை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இது, இந்த மண்ணின் மனிதாபிமானத்தை குறிக்கும் சம்பவத்தை பறை சாற்றும் நிகழ்வு. இதை தடை செய்து விட்டு எப்படி மற்றவர்கள் வியாபாரம் செய்ய அனுமதிக்கிறார்கள் ?'' என்றார்.

உள்ளூர் இலவச பானங்களுக்கு தடை..பன்னாட்டு பானங்களுக்கு பச்சை கம்பளமா?


-சண்.சரவணக்குமார்

படங்கள் : வி. சதீஷ்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்