ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்?


'ஆன்மா, ஆன்மா எனச் சொல்கிறார்களே... அப்படின்னா என்ன? ஆன்மா வேற, ஆத்மா வேறயா? ஆஸ்துமாவுக்கும் இதுக்கும் தொடர்பு இருக்குமோ?'னுகூட சில பேரோட மனசுக்குள்ள ஓட ஆரம்பிச்சிருது.

'ஆன்மா எங்கேயாவது கடையில கிடைக்குமா அல்லது அது ஒரு இடமா? அது ஒரு பொருளா?' என ஆயிரம் கேள்விகள்...

ஆன்மா என்றதும், `உடல் அழியும், ஆன்மா அழியாது' 'ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்' இப்படிப்பட்ட வாக்கியங்கள் நமக்குள்ளே வந்து போகும்.

ரொம்பவே நமக்கு அன்னியமாகவும் பயமுறுத்தக்கூடியதாகவும் இருக்கக்கூடிய ஆன்மாவைப்பற்றி எளிமையாகப் பார்ப்போம்...

'இறைவா நான் படுக்கைக்குச் செல்லும் நேரத்துக்கும், தூங்கும் நேரத்துக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து விடு' என்று  மனிதன் வேண்டுகிறான். காரணம், நாள் முழுவதும் மனம் சொன்னதையெல்லாம் செய்த மனிதனுக்கு ஒருநாள் பொழுதில் அவன் செய்த சில தவறுகளுக்கு அவனது மனசாட்சியே இன்னொரு மனிதனாக அவனிடம் கேள்வி கேட்கிறது.

'ச்சே... பாரிமுனைக்கு எந்த பஸ் போகும்?'னு வழி கேட்டவருக்கு பதில் சொல்லி இருக்கலாமே...',  'வழியில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த பாட்டிக்கு 5 ரூபாயை போட்டிருக்கலாமே...',  'தேவையில்லாம பக்கத்து சீட்டில் உள்ளவரிடம் விவாதம் செய்து அவர் மனசை நோகடிச்சிட்டோமே...' என பலவித எண்ணங்கள்...ரீகேப்பாக ஓடி மறையும்.

'சரி, இந்தப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்' என்று நினைத்துக்கொண்டே தூங்கிப்போய் விடுகிறோம். இதில் உங்களைத் தூங்க விடாமல் கேள்வி எழுப்புகிறதே...அந்த மனசாட்சிதான், ஆன்மா அல்லது ஆத்மா. இதைத்தான், 'ஆன்ம விசாரணை', 'ஆத்ம விசாரம்' என்று சொல்கிறார்கள். இது, தன்னைத்தானே 'சுயபரிசோதனை' செய்துகொண்டு புதிதாக நம் மனதை மலரச் செய்கிறது.

ஆன்மா என்பது மனம், மனசாட்சி என இரண்டு உட்பிரிவுகள் கொண்டதாக இருக்கிறது. மனம் கடல் அலை போல் ஓயாமல், ஆயிரம் சிந்தனைகளை அலையாய் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அதில் நல்லதை செயல்படுத்தவும், தீயதை செயல்படுத்தவும், மனசாட்சியிடம் ஒப்புதல் கேட்கிறது. அப்படி கேட்கும்போது நல்லவற்றுக்கு மனசாட்சி உடனே ஒப்புதல் அளிக்கிறது. ஆனால் தீயவற்றுக்கு உடனே ஒப்புதல் அளிப்பதில்லை. உதாரணமாக, உங்களுக்கு திடீரென ஒரு ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கிறதென்றால், அதில் பிள்ளைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கிக்கொண்டு, மீதியை நம் மனைவியிடம் கொடுத்து சேமிக்கச் சொல்லலாம். இதை நம் மனம் நினைக்கும் தருணத்திலேயே நம் மனசாட்சி ஒப்புதல் கொடுத்துவிடும்.
இதே மனம், 'நண்பர்களுடன் சேர்ந்து ஒரு டிரிங்ஸ் பார்ட்டிக்கு செலவு செய்துவிட்டுப்போகலாமே' என்றும் சொல்லும். ஆனால், மனசாட்சி இதற்கு உடனே ஒப்புதல் அளிக்காது. உடனே, மனம் இதற்கு சப்பைக்கட்டான பல காரணங்களைக் கொண்டு வந்து நிறுத்தும். 'அதான் சம்பளப் பணத்தை அப்படியே கொடுத்துடுறோம்ல... இது தற்செயலா கிடைச்சதுதானே... மேலும் ஒரு ரிலாக்ஸேஷனே இல்லாம எப்படிப்பா இருக்கமுடியும்..?'  என காரணங்களை அடுக்கும். மனசுக்கும் மனசாட்சிக்கும் இடையே ஒரு போராட்டமே நடக்கிறது.

இந்த ஆன்மாவும், மனமும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை. ஆன்மாவும், மனமும் முழுவதுமாக ஒத்துப்போய்விட்டால் அவா்கள் ஞானிகளாக, மகான்களாக அல்லது அதற்கும் மேம்பட்ட பிறவிகளாக இருப்பார்கள். ஆன்மா ஏவுகின்றபடிதான் மனம் செயல்பட்டு உடலை இயக்க வேண்டும். ஆனால், சில வேளைகளில் ஆன்மாவின் கட்டளைக்கு  மாறாகவே மனம் செயல்படுகிறது. அதனால்தான் உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வஞ்சகம் போன்ற துயர சம்பவங்கள்  நிகழ்கின்றன. ஆன்மா சொல்வதைக் கேட்காது,  மனம் தன்னிச்சையாகச் செயல்படுவதால் ஏற்படும் பாவங்கள் மற்றும் தீவினைகள் ஆன்மாவில் அழுக்காக ஏறுகின்றன. ஆன்மா பிறவி எடுத்து அந்தத் தீவினைப் பாவங்களைத் தீர்க்க வேண்டியுள்ளது.

மனம் செய்யும் குற்றங்களுக்காக ஆன்மா பிறவி எடுப்பது, ஆன்மிகத்தில் ஒரு விந்தை. அவரவர்களின் மனோபலத்துக்கேற்ப, மனசோ மனசாட்சியோ வெற்றி பெறுகிறது. இதனால்தான் சிலர் கொடும் தவறுகளைச் செய்யும்போது, உனக்கு மனசாட்சியே இல்லையா? எனக் கேட்கிறோம். இந்த மனசாட்சியானது படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், ஆத்திகர், நாத்திகர் என எல்லோருக்கும் உண்டு.  இதைத்தான் 'அஹம் பிரம்மாஸ்மி'  -Aham Brahmasmi - (நான் பரம்பொருளாக இருக்கிறேன்) என்றும்  'தத்வம் அஸி' ( 'அது நீ' - உபநிடத மகாவாக்கியம்) என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மனசாட்சியின் குரலைத்தான் 'மனம் சொல்வதைக்கேளுங்கள்...'என்று சுயமுன்னேற்ற வகுப்புகளில் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், அதில் நன்மையும் விளையலாம், தீமையும் விளையலாம். அதனால் மனசாட்சி சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் எந்தக் கோயிலுக்கும் போக வேண்டிய அவசியமிருக்காது.

மனசாட்சிதான் நம் ஆன்மா! மனசாட்சிக்குப் பயப்படுகிறவர் மற்றவற்றுக்குப் பயப்படவேண்டியதில்லை.

- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!