வெளியிடப்பட்ட நேரம்: 16:43 (21/04/2016)

கடைசி தொடர்பு:18:11 (21/04/2016)

இவர்தான் இளைய ஆதீனம்.. மதுரை ஆதீனத்தின் அடுத்த அதிரடி!

மீபகாலமாக கப்சிப்பாக இருந்து வந்த மதுரை ஆதீனம், மறுபடியும் லைம் லைட்டுக்கு வந்துவிட்டார். மதுரை ஆதீன மடத்துக்கு ஐந்தாவது முறையாக இளைய ஆதீனத்தை நியமிப்பதாக இன்று அறிவித்து, மீண்டும் சர்ச்சை வளையத்துக்குள் வாலண்டரியாக ஆஜராகியுள்ளார் ஆதீனம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து பெரும் சர்ச்சையாகி, மதுரை ஆதீனத்துக்கு எதிராக நாள் கணக்கில் போராட்டம் நடந்தது. ஆதீன மடத்தை அரசே ஏற்கும் அளவுக்கு நிலைமை மோசமானது. எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், நித்யானந்தா இளைய ஆதீனமல்ல என்று அறிவித்தார்.

''நான்தான் இளைய ஆதீனம்'' என்று நித்யானந்தா தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  அறநிலையத்துறை ஆதீனத்தின் மீது போட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த இக்கட்டுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தான் அதிமுக பேச்சாளராக அவதாரம் எடுத்தார். அதிமுக பேச்சாளராக தீயாய் வேலை செய்தவர், சமீப காலமாக சத்தமில்லாமல் இருந்தார்.

'என்னாச்சு ஆதீனத்துக்கு?' என்று எல்லோரும் கேட்க ஆரம்பித்த நிலையில்தான், திடீரென்று  இன்று இளைய ஆதீனத்தை நியமித்து பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ஆதீனம்.

''இன்று முதல் மதுரை ஆதீனத்தின், இளைய ஆதீனமாக பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை நியமனம் செய்திருக்கிறேன். இவர் சைவ தத்துவம் மற்றும் வேத பாடங்களை நன்றாக கற்று தேர்ந்தவர். இவருடைய பெற்றோர் குன்றக்குடி ஆதீனத்தில் சேவை செய்தவர்கள். இவரே எனக்கு அடுத்து மதுரை ஆதீனமாக பொறுப்பில் அமர்வார்’’ என்ற செய்தி அறிக்கையை எல்லோருக்கும் வழங்கினார்.

இந்த அறிவிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர்ராஜு உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கடந்த காலங்களில், சேலத்து சிறுவன் ஒருவனை இளைய ஆதீனமாக அறிவித்து எல்லோரையும் அதிர்ச்சியூட்டினார். பின்னர் அந்த பையன் குடும்பத்துக்கும் இவருக்கும் பிரச்னை வர, பிறகு செட்டில்மெண்ட் செய்து  அனுப்பிவிட்டார். அதைத் தொடர்ந்து மூலிகை பெட்ரோல் புகழ் ராமர்பிள்ளையின் உறவினர் ஒருவரை அடுத்த ஆதீனமாக நியமிக்க போவதாக அறிவித்தார்.

ஆனால் அப்படி அறிவிக்காததால் அவர் வழக்கு போட்டார். அது தள்ளுபடியானது. அதைத்தொடர்ந்துதான் நித்யானந்தவை இளைய ஆதீனமாக அறிவித்தார். அதில்தான் ஆதீனத்துக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர் ஏற்பட்டது. அவரை துரத்தியவுடன், திருவாரூரிலிருந்து இளைய தம்பிரான் என்பவரை அழைத்து வந்து மடத்தில் வைத்திருந்தார். அவர்தான் அடுத்த இளைய ஆதீனம் என்று எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தார்.  அவரும் சமீபத்தில் மடத்திலிருந்து எஸ்கேப்பாகி விட்டார்.

இந்த நிலையில்தான் இப்போது பிள்ளையார்பட்டி திருநாவுக்கரசை நியமித்துள்ளார். இவராவது நீடிப்பாரா என்கிறார்கள் ஆதீனத்தை அறிந்தவர்கள்.

ஆதீனத்தின் திடீர் அறிவிப்பை தொடர்ந்து, இதற்கு பின்னணியிலுள்ள மர்மத்தை கண்டுபிடிக்கும் வேலையில் இந்து இயக்கங்கள் இறங்கியுள்ளன.

இன்னும் சில நாட்களுக்கு மதுரை ஆதீனம் மீடியாக்களுக்கு நிறைய தீனி போடுவார் என எதிர்பார்க்கலாம்.


 -செ.சல்மான்

படம் : ஈ.ஜெ.நந்தகுமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்