தமிழர்களின் காதலர் தினம் சித்ரா பெளர்ணமி! | Chitra Pournami is Valentine's Day of the Tamils

வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (21/04/2016)

கடைசி தொடர்பு:18:29 (21/04/2016)

தமிழர்களின் காதலர் தினம் சித்ரா பெளர்ணமி!

 
பார்வதி தேவி வரைந்த அழகான தத்ரூபமான ஒரு ஓவியத்தை, சிவன் தன் மூச்சுக் காற்றை கொடுத்து உயிர் கொடுத்தார். உயிர் பெற்று வந்த அந்த சித்திர குழந்தைக்கு 'சித்ர குப்தன்' எனப் பெயர் சூட்டப்பட்டது. அப்படி சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி அன்றுதான் சித்ரா பெளர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குகிறோம்.

எமதர்மர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பாவ புண்ணியங்களை கணக்கெடுக்கும் கணக்குப்பிள்ளயாக எமலோகத்தில் பதவியில் அமர்த்தப்பட்டார் சித்ர குப்தன். நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து, சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் நிகழ்வதாகச் சொல்லப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் சித்ரா பௌர்ணமி அன்று பூம்புகாரில் இந்திரவிழா நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திரன் தன் பாவங்கள் நீங்கப்பெற்ற நாள் சித்ரா பௌர்ணமி என்றும் புராணம் கூறுகிறது.

மேலும், அன்றைய தினம் புனித நதிகளில் நீராடினால் பாவங்கள் நீங்கும். சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது நல்லது என்பார்கள். அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களைக் குறைக்கவும், சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் ரிஷிகள், சித்தர்கள், யோகியர்கள் அங்கே தயாராக இருப்பார்களாம். பழங்காலத்தில் சித்ரா பெளர்ணமியன்று ஆற்றங்கரையில் ஊற்று தோண்டி அதற்கு திருவூற்று என பெயர் சூட்டி  இறைவனை வலம் வரச்செய்வார்களாம்.

இப்படிப்பட்ட பல புராண கதைகள், பல வழிபாடுகள், பல சடங்குகள் சித்ரா பெளர்ணமியை ஒட்டி கூறப்படுகிறது. அந்த கதைகள் ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால் வழிவழியாக வந்த சித்ரா பெளர்ணமி கொண்டாட்டங்கள் மனிதர்களின் மனப்பாரத்தை இறக்கி வைக்கும் ஒரு விழாவாகவும், குடும்ப உறவை இறுக்கமாக்கும் ஒரு நிகழ்வாகவும் அனுசரிக்கப்பட்டு வந்தது.

ஆனால், இன்றைய இயந்திர உலகில் அதன் தாக்கம் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. மனைவியுடன் அமர்ந்து பேச நேரமில்லை. பெற்ற குழந்தைகளிடம் கொஞ்சி மகிழ அவகாசம் இல்லை. வேலை முடித்து வீட்டுக்கு போனாலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என மொபைலுக்குள் அடக்கிக் கொள்கிறோம் வாழ்க்கையை. ஆனால், உறவுகளை மேம்படுத்துவதற்காகவே விழாக்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர் பண்டைய தமிழர்கள். அப்படி குடும்பத்தோடும், உறவுகளோடும் கொண்டாடி மகிழும் உன்னதமான ஒருநாள்தான் சித்ரா பெளர்ணமி. பண்டைய தமிழர்களின் அன்பை வெளிப்படுத்தும் காதலர் தினமாக இருந்தது சித்ரா பெளர்ணமி. 

சித்திரை மாத முழு நிலா நாளில், நதிக்கரைகளில் ஒன்றுகூடி உண்டு மகிழ்ந்து மனதில் உள்ள ஆசைகள், எதிர்பார்ப்புகள், கனவுகள், கவலைகளை பிரியமானவர்களுடன் பேசி மனச் சுமையை இறக்கி, ஆறுகளில் அன்பை ஓடவைத்த நிகழ்வை மறந்தே விட்டான் ஆன்ட்ராய்டு தமிழன். ஐம்பது வருடம் இணைந்து வாழ்ந்த முதிய தம்பதிகள், நேற்று திருமணமான இளம் தம்பதிகள், கடைக் கண்களால் காதலை பரிமாறிக்கொள்ள துடிக்கும் இளைஞர்கள், பரிமாறிக்கொண்டிருக்கும் காதல் ஜோடிகள் என அத்தனை பேருக்கும் பெளர்ணமி ஆற்றங்கரையே இந்திர சொர்க்கமாக இருக்கும்.

"எங்க ஊருல ஆறு இல்லையப்பா...ஆனாக்கூட அந்த காலத்துல சுண்டல் செஞ்சு, பொங்க வச்சு எடுத்துக்கிட்டு நானும் அவரும் எங்க ஊரு கம்மாக்கரை கருப்பசாமி கோயிலுக்குப் போயிருவோம். நாங்க மட்டுமில்லைய்யா...ஊரு சனமே அங்கதான் இருப்பாக..." வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார் 75-ஐ கடந்த மூதாட்டி ஒருவர்.

"அட, எங்க ஊரு குளக்கரையிலதாங்க நாங்க தினம் தினம் காதல் வளர்த்தோம். எங்க ஊரு மெரினா பீச் அதுதாங்க. எங்களுக்கு காதலர் தினம் சித்ரா பெளர்ணமிதாங்க... மூணு சித்ரா பெளர்ணமி குளக்கரை கொண்டாட்டத்துக்கு அப்புறம்தான் எங்களுக்கு கல்யாணமே ஆச்சு..." என பழைய நினைவுகளுக்கு தாவுகிறார்கள் சென்னையில் தன் மகன் வாங்கியிருக்கும் அடுக்குமாடிக்கு குடியிருப்புக்குள் தங்களை சுருக்கிக்கொண்ட ஒரு தம்பதி.

"பௌர்ணமி இரவில், முழுநிலா ஒளியில் குடும்பத்தினர் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திப் பாருங்கள். கணவன் மனைவி மனம் விட்டு பேசுங்கள். கவலைகள் காணாமல் போகும்.  கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரை... ஏரிக்கரை என எங்காவது ஒரு இடத்துக்கு போய் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நிம்மதியாக உட்காருங்கள். 'அட, அதுக்கெல்லாம் நேரம் இல்லீங்க, ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போக நைட் ஒன்பது ஆகும்.' என்பவர்கள் உங்கள் வீட்டு கிணத்து மேடு, மொட்டை மாடியிலாவது அமர்ந்து, நிலாவை பார்த்தபடி பேசுங்கள்... சிரியுங்கள்... மகிழுங்கள்... மனம் லேசாகும். உங்களுக்கு இயல்பாக எழும் ஓர் இனம் புரியாத உணர்வு, இன்னும் எதையாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை நிச்சயம் உருவாக்கும் என்கிறார்கள்" உளவியல் நிபுணர்கள். 

எப்போதுமே குழப்பங்கள் நீங்கி நம் மனம் தெளிவுபெற்று, ஒரே நேர்கோட்டில் இயங்கத் தொடங்கிவிட்டால் மகத்தான சாதனைகளை மிகச் சுலபமாக நிகழ்த்த முடியும் என்பது உளவியல் நிஜம். இன்னொரு முக்கியமான விஷயம்,  கோடை வெயிலின் உச்சம் பெற்ற மாதம் சித்திரை. வெயிலின் உஷ்ணத்திலிருந்து விடுபட்டு கடல், ஆறு, குளம், ஏரி என நீர் நிலைகளில் கூடி மக்கள் தங்களை குளுமைப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதே சித்ரா பெளர்ணமி கொண்டாட்டத்தின் நோக்கம்.

இன்று சித்ரா பெளர்ணமி...நிலவில் குளித்து..இறுகிக்கிடக்கும் மனதை இளக்கி, உங்களுக்குள் இருக்கும் அன்பை குடும்பத்துக்கு பரிமாறுங்கள். இந்த சித்ரா பெளர்ணமி நிச்சயம் மறக்க முடியாததாக இருக்கும்.

-கா.முத்துசூரியா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்