வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (09/05/2016)

கடைசி தொடர்பு:18:08 (09/05/2016)

ராமாநுஜர் 1000- எளியோருக்கும் அருளிய மகான் ஶ்ரீ ராமாநுஜர்!


1017-ம் ஆண்டு, திருப்பெரும்புதூரில் (பெரும்புதூரில்) ஆசூரி கேசவசோமயாஜி - காந்திமதி தம்பதியருக்கு ஆதிசேஷனின் அம்சமாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அருளால்,  ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையின் மாமா பெரியதிருமலைநம்பி,  குழந்தைக்கு ராமாநுஜன் என்றும், லக்ஷ்மணனின் பெயரான இளையாழ்வார் என்றும் பெயர் சூட்டினார்.

தந்தை ஆசூரிகேசவர் தன் பிள்ளையை திருப்புட்குழி தலத்தில் இருந்த யாதவப்பிரகாசர் என்பவரிடம் வேதம் பயில அனுப்பினார். ராமாநுஜர் பிறவி ஞானியாக இருந்தபடியால், பாடம் கேட்கும்போதே ஆசானிடம் துணிந்து கேள்விகள் கேட்பதுடன், சமயங்களில் தானே விளக்கவும் செய்வார். இதனால், ராமாநுஜரிடம் துவேஷம்கொண்ட யாதவப்பிரகாசர், தன்னை மிஞ்சிய சீடனை அழித்துவிட வேண்டும் என்று முடிவுசெய்து, காசி யாத்திரைக்கு ஏற்பாடு செய்தார். கங்கையில் நீராடும்போது ராமாநுஜரை மூழ்கடித்து கொன்றுவிடுவது அவருடைய திட்டம்.

ராமாநுஜருடன் சென்ற அவருடைய தம்பி கோவிந்தன், மற்ற சீடர்கள் பேசிக்கொண்டதிலிருந்து இந்த விஷயத்தை அறிந்துகொண்டான். உடனே அவன் ராமாநுஜரிடம் சொல்லி அங்கிருந்து அவரை தப்பிச் சென்றுவிடுமாறு கூறினான். அந்த வேளையில் அவர்கள் சுமார் 700 மைல்களைக் கடந்து விட்டிருந்தனர். காட்டின் வழியே சென்றபோது ராமாநுஜர், மற்றவர்களைப் பிரிந்துசென்ற வழியில் திரும்பிவிட்டார். ராமாநுஜரைக் காணாத யாதவப்பிரகாசர்,  ராமாநுஜரை காட்டு விலங்குகள் கொன்றுவிட்டிருக்கும் என்று நினைத்துக்கொண்டார்.


காட்டு வழியில் நடந்து களைத்துப்போன ராமாநுஜர், ஓர் இடத்தில் படுத்து உறங்கிவிட்டார். அப்போது, அவரைத் தட்டி எழுப்பினான் ஒரு வேடுவன். அவனுடன் அழகான மனைவியும் இருந்தாள். ராமாநுஜரிடம் நடந்ததை அறிந்துகொண்ட வேடுவன், தான் வழிகாட்டிச் செல்வதாக அழைத்துச் சென்றான். ராமாநுஜர் அவர்களுடன் நடந்தார். ராமாநுஜனை அழைத்துச் சென்ற வேடுவ தம்பதியர், வழியில் ராமாநுஜர் தூங்கியபோது மறைந்துவிட்டார்கள். கண் விழித்தபோது, ஆலய கோபுரங்கள் நிமிர்ந்து நிற்கும் காஞ்சிபுரத்தின் எல்லையை,  தான் அடைந்துவிட்டதை உணர்ந்தார். சுமார் 700 மைல் தூரத்தைச் சில மணிகளில் கடக்க உதவி தன்னைக் காஞ்சியில் கரைசேர்த்த, கருணை வள்ளல் பரந்தாமனும் அவருடன் வந்த மகாலட்சுமியுமே என்று உணர்ந்து, கரங்குவித்து வணங்கினார்.

மனித குலம் உய்விக்க வந்த அந்த மகானின் சரிதத்தில் இருந்து சில பகுதிகள்...

ராமாநுஜரின் வைஷ்ணவப் பற்றும் பக்தியும் தீவிரமாக வளர்ந்தன. வரதராஜரின் சந்நிதியில் துறவறம் மேற்கொண்டார். யதிராஜர் என்ற பட்டப் பெயரும் பெற்றார். வரதராஜ பெருமாளின் கட்டளைப்படியே ஒவ்வொரு செயலையும் செய்ய முற்பட்டார்.

காஞ்சியில் இருந்து திருவரங்கத்துக்குப் புறப்பட்ட ராமாநுஜர், திருவரங்கப் பெருமானின் கோயிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பூஜா கிரமங்களை ஒழுங்குபடுத்தினார். திவ்வியபிரபந்த பாராயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் மந்திரோபதேசம் பெற விரும்பி பலமுறை நடையாக நடந்தார். இறுதியில் அவருக்கு மந்திரோபதேசம் செய்த நம்பி, அந்த மந்திரத்தை யாருக்கும் உபதேசம் செய்யக் கூடாது என்றும், மீறினால் நரகமே கிடைக்கும் என்றும் எச்சரித்தார். ஆனால், எல்லோரையும் கடைத்தேற்ற அவதரித்த ராமாநுஜர், ''ஊராரே வாரீர், உலகத்தாரே வாரீர், நீங்கள் அனைவரும் உய்யும் வண்ணம் மந்திரோபதேசம் செய்கிறேன்'' என்று அழைத்து, நம்பியிடம் தாம் பெற்ற அஷ்டாட்சர மந்திரமான 'ஓம் நமோ நாராயணாய' என்னும் திவ்விய மந்திரத்தை உபதேசித்தார். அதுபற்றி கேள்விப்பட்ட நம்பி ராமாநுஜரை அழைத்து, ''நான் சொல்லியதை மீறினால், உனக்கு நரகம் கிடைக்கும் என்பது தெரியாதா?'' என்று கேட்டார். அதற்கு ராமாநுஜர், ''ஐயனே, தாங்கள் சொல்லியபடி நான் நரகத்துக்குப் போனாலும், உபதேசம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்கள் நலம் பெறுவார்களே. அதுவே எனக்குப் போதும்'' என்றார்.
உடனே திருக்கோஷ்டியூர் நம்பி ராமாநுஜரை அணைத்துக்கொண்டு, ராமாநுஜரே தம்முடைய பெருமான் என்ற பொருளில் ''நீரே எம்பெருமானார்" என்று பாராட்டி ஆசி கூறினார்.

ராமாநுஜர், திருவரங்கத்தில் கொள்ளிடக்கரையின் பக்கமாக வந்துகொண்டு இருந்தபோது, உறங்காவில்லி என்ற பயில்வான் தன்னுடைய அழகான மனைவியின் மேல் வெயில் படக்கூடாது என்பதற்காக குடை பிடித்துக்கொண்டு வந்தான். ராமாநுஜருடன் சென்றவர்கள், ''உறங்காவில்லி மனைவிக்கு தாசன்'' என்று ஏளனம் செய்தனர். அதற்கு ராமாநுஜர், ''அவன் தன்னுடைய மனைவியின் அழகில் மயங்கி இருக்கிறான். அவன் அழகே உருவான அரங்கனைக் கண்டுவிட்டால், அரங்கனுக்கு தாசனாகி விடுவான்'' என்றார்.
அதேபோல் அவனைப் பெருமாள் தரிசனத்துக்கு அழைத்து வந்தார். திருமாலின் அளவிலாத அழகில் மனத்தைப் பறிகொடுத்த அவன்,  தீவிர பக்தனாக மாறினான். அவனும் அவனுடைய மனைவி பொன்னாத்தாளும் ராமாநுஜரின் தொண்டில் ஈடுபட்டார்கள்.


குலத்தால் தாழ்த்தப்பட்டவனாக கருதப்பட்ட உறங்காவில்லி,  ராமாநுஜரின் சீடன் ஆனான். ராமாநுஜர் காவிரியில் நீராடிவிட்டு அவனுடைய தோளில் கைவைத்த வண்ணம் படியேறி வந்தார். உயர்குலத்தோரான சிலருக்கு இது பிடிக்கவில்லை. அதனால், ராமாநுஜர் மீது புகார் கூறினார்கள். உறங்காவில்லியின் பெருந்தன்மையை உணர்த்துவதற்காக ஒரு திட்டம் வகுத்தார் ராமாநுஜர்.
அன்று இரவு சீடர்கள் சிலரை அனுப்பி, உறங்காவில்லியின் குடிசையில் உறங்கிக்கொண்டிருந்த அவனது மனைவி பொன்னாத்தாளின் நகைகளை கவர்ந்து வரச் செய்தார். மறுநாள் காலையில் அந்த  உயர்குலத்தோர் குடிசைக்கு போனபோது, உறங்காவில்லி தனது மனைவியிடம் "உன் உடம்பில் இன்னும் சில நகைகள் உள்ளனவே? இவற்றையும் அந்த ஏழைகள் எடுத்துச் செல்ல விட்டிருக்கலாமே?'' என்று கூறக் கேட்டார்கள். தங்களைக் காட்டிலும் உறங்காவில்லி பண்பால் உயர்ந்தவன் என்பதைப் புரிந்துகொண்டார்கள். அவன் மீது தனி அன்பு காட்டிய ராமாநுஜரை உயர்வாக மதிக்க முற்பட்டார்கள்.


அக்காலத்தில் சோழ தேசத்தை ஆட்சி செய்த குலோத்துங்கன், வைஷ்ணவர்களிடம் துவேஷம் காட்டியபடியால், ராமாநுஜர் திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை என்னும் திருநாராயணபுரத்துக்குச் சென்றார். அங்கே மறைந்திருந்த பெருமாள் அவருக்கு தரிசனம் தந்தார். ராமாநுஜர் பெருமாளை வழிபட்டார். பெருமாளுக்குக் கோயில் எழுப்பிய ராமாநுஜர், உற்ஸவம் விக்கிரஹம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபோது, பெருமாள் அவருடைய கனவில் தோன்றி, அங்கே இருந்த உற்ஸவ மூர்த்தியான சம்பத்குமாரனிடம், டில்லி பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்துவிட்டபடியால் டில்லிக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறினார்.

அதைக் கேட்ட ராமாநுஜர் டில்லிக்குச் சென்றார். பாதுஷா வேற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ராமாநுஜரை உரிய மரியாதையுடன் வரவேற்றார். வந்த காரணம் பற்றி தெரிந்துகொண்ட பாதுஷாவுக்கு, அவர் கேட்கும் விக்கிரஹம் தன்னுடைய மகளுக்குப் பிரியமானது என்பதால் கொடுப்பதற்கு மனம் வரவில்லை. எனவே ''நீங்கள் கேட்கும் விக்கிரஹம் இந்த அரண்மனையில் இருப்பதாகத் தெரியவில்லை. முடிந்தால் தேடி எடுத்துச் செல்லுங்கள்'' என்று கூறினார்.


ராமாநுஜர் மன்னரையும் அழைத்துக்கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றார். அங்கே மன்னரின் செல்வ மகளின் அறைவாசலில் நின்று, தயக்கமின்றித் தனது பார்வையை ஒரே நிலையில் நிறுத்தி "செல்வப் பிள்ளையே வரும்!" என்று அன்பும் பக்தியும் கனியக் கனிய அழைத்தார். உடனே அற்புதம் நிகழ்ந்தது. ராஜகுமாரி பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாத வகையில் வைத்திருந்த மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு, ராமாநுஜரை நோக்கி வந்தார். உற்ஸவ விக்கிரஹத்துடன் மேல்கோட்டைக்கு வந்த ராமாநுஜர், அங்கேயே பல ஆண்டுகள் தங்கி இருந்தார்.


அக்காலத்தில் அந்தப் பிரதேசமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு இருந்தது. பெய்யும் மழை நீர் எல்லாம் தேங்க வழியில்லாமல் வீணாகப்போனது. அப்போது, அங்கிருந்த தொண்டனூர் என்ற இடத்தில் மூன்று குன்றுகள் இருந்தது ராமாநுஜரின் பார்வையில் பட்டன. மூன்று குன்றுகளுக்கும் இடையில் இடைவெளி இருந்தது. உடனே ராமாநுஜரின் மனதில் ஒரு திட்டம் உருவானது. தம்முடைய சீடர்களுடன் மேலும் பல ஆட்களையும் திரட்டி, மூன்று குன்றுகளுக்கும் இடையில் இருந்த பகுதியை தோண்டச் செய்து, அந்த மண்ணைக்கொண்டே குன்றுகளுக்கு இடையில் இருந்த இடைவெளியை அடைத்து ஒரு பெரிய ஏரியை உருவாக்கினார். பின்னர் வந்த மழையால் அந்த ஏரி நிரம்பி அந்தப் பகுதியில் இருந்த வறட்சியை காணாமல் போகச் செய்தது. இன்றைக்கும் அந்த ஏரியைக் காணலாம்.

ராமாநுஜர் தம்முடைய முதிர்ந்த பருவத்திலும் அனைத்து உயிர்களிடத்திலும் அரங்கனையே தரிசித்தார். தம்மைப் பின்பற்றியவர்களில் பக்திகொண்ட பெண்மணிகளைக் கூடச் சிஷ்யையாக ஏற்றுக்கொண்டார். பொன்னாச்சி, திருவட்டானுஅம்மை, திருவான் பரிசரத்து அம்மை போன்ற பலரையும் சிஷ்யைகளாக ஏற்றுக்கொண்டார்.

தமது நீண்ட ஆயுட்காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் ஏற்பட்டார்கள். அவர்களில் அனேகர் அவருடைய உருவத்தை வடித்துப் பிரதிஷ்டை செய்தனர். அவற்றில் திருவரங்கத்தில் 'தானானதிருமேனி', திருப்பெரும்புதூரில் 'தானுகந்த திருமேனி', மேல்கோட்டையில் 'தமர் உகந்த திருமேனி, என மூன்று விக்கிரஹங்களையும் தாமே தழுவி தம்முடைய ஆசிகளுடன் வழங்கினார்.

விசிஷ்டாத்வைதத்தைப் பிரசாரம் செய்து, பாரத தேசத்திலும் முக்கியமாகத் தமிழ்நாட்டிலும், அதற்குப் பேராதரவைத் தேடிக் கொடுத்தார். தமது இறுதிக் காலத்தை உணர்ந்து பராசரருக்குப் பட்டம் கட்டி, அவரிடம் தம்முடைய பொறுப்புகளை ஒப்படைத்தார். தமது நூற்று இருபதாவது பிராயத்தில் திருவரங்கத்தில் பரமபதம் அடைந்தார்.


இளையாழ்வார், லக்ஷ்மணமுனி, திருப்பாவை ஜீயர், எம்பெருமானார், உடையவர், பாஷ்யகாரர், யதிராஜர் என்ற பல நாமங்களுடன் அழைக்கப்படும் மகான் ராமாநுஜரின் 1000-மாவது ஆண்டு இந்த வருடம் முதல் அடுத்த வருடம் வரை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


- எஸ்.கண்ணன்கோபாலன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்