நான் யார்?- ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!


உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில், காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர், அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர்.


அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவதுபோல், ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது, எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர், நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர், அவரை வழியைவிட்டு விலகிப் போகச்சொல்கிறார்.

எதிரில் வந்தவர், 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.

ஆதிசங்கரருக்கு அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே, அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அதுதான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் பிரம்மம். இந்தப் பிரபஞ்சமும் பிரம்மம். தூய உணர்வுதான் இந்தப் பிரபஞ்சமாக விரிந்துள்ளது. சத்வம், ரஜஸ், தமஸ் மற்றும் அறியாமையினால் நான் பொருட்களைப் பிரம்மம் அல்லாததாகக் கருதுகிறேன். பேரானந்தமான, அழிவில்லாத, தூயவடிவமான பிரம்மம்தான் எங்கும் நிறைந்துள்ளது என்று யாருக்கு உறுதியான ஞானம் உள்ளதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்வாக கருதப்படுபவரோ அவரே என் குரு என்பதில் நான் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

எந்தப் பேரானந்தக் கடலின் சிறு துளியினாலேயே இந்திரன் போன்ற தேவர்கள் திருப்தி அடைகிறார்களோ, முற்றிலும் அமைதியான மனதை அடைந்து முனிவர்கள் நிறைவு பெறுகிறார்களோ, அந்த அழிவற்ற பேரானந்தக் கடலில் ஒன்றுபட்டவரே பிரம்மத்தை உணர்ந்தவர் ஆவார். அவரே பிரம்மமும் ஆவார். அவர் யாராக இருந்தாலும் சரி, இந்திரனால் பூஜிக்கப்பட வேண்டிய பாதங்களை உடையவர் என்பதும், அவரே என்னுடைய குரு என்பதும் என்னுடைய உறுதியான நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!