சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

பரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும், என கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிப்படையாக வலியுறுத்தி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையை எதிர்த்தும், அனைத்து வயது பெண்களையும் கோயிலில் அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீது உச்ச நீதிமன்றத்தில் கடந்த திங்கள் கிழமையன்று விசாரணை நடைபெற்றபோது, அதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக  திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், " சபரிமலை அய்யப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு. ஒரு வேளை, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் நடைமுறை சிக்கல் எதுவும் இருக்கும் என்றால், அப்பிரச்னைகளைப் பற்றி உச்ச நீதிமன்றத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் முறைப்படி தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் கேரளா அரசு புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்" என்று  கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் கருத்தால் ஏற்கனவே அதிர்ச்சியடைந்துள்ள திருவாங்கூர் தேவஸ்தானம், இப்போது கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தால் மேலும் அதிர்ந்துபோய் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!