எந்தக் கோயிலில் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன்?!

ழிபாட்டிற்காக மனத் தூய்மையுடன் நாம் ஒவ்வொரு முறையும் கோயிலுக்கு வரும்பொழுது, நம்மையே அறியாமல் கோயிலை ஒரு முறையேனும் சுற்றி வலம் வருகிறோம். அப்படி கோயிலை சுற்றி வலம் வருகையில், நமக்குப் புண்ணியங்கள் வந்து சேர்வதாக ஐதீகம். முக்கியமாக, நமது முன் ஜென்ம பாவங்கள் ஒவ்வொன்றாக விலகி, நாம் பாவத்திலிருந்து முழுவதுமாக விடுபடுகிறோம், என்றும் நமது முன்னோர்கள் சொல்வதுண்டு.

இப்படியாக எந்தக் கோயிலில் எத்தனை முறை சுற்றி வலம் வரலாம், ஒவ்வொரு முறை வலம் வருவதற்கும் என்ன புண்ணியம் நமக்குக் கிடைக்கும், என்பது குறித்து விவரிக்கிறார் பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் இலக்கியமேகம் ந.ஶ்ரீநிவாசன்.

 

விநாயக பெருமான், முருகப் பெருமான், அம்பிகை, சிவபெருமான், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு எந்தெந்த வகையில் நாம் வழிபட்டு வலம் வர வேண்டும்? அப்படி வலம் வந்தால் என்ன பலன் என்பதைப் பார்க்கலாம்.

விநாயகர் கோயில்

விநாயக கோயிலில், ஒரு முறை சுற்றி வலம் வந்தாலே போதுமானது. இதனால், நமது செயல்களில் ஏற்படும் தடைகள் நீங்கி, இயல்பாகவே வெற்றிகள் வந்து சேர்ந்துவிடும்.

முருகப் பெருமான் கோயில்

முருகப் பெருமான் கோயிலில், ஆறு முறை வலம் வர வேண்டும். இதனால், எதிரிகளை வெல்லக்கூடிய திறமையும், கூர்ந்த மதியும் ஏற்படுகிறது.

அம்பிகை பராசக்தி வழிபாடு

அம்பாள் கோயில்களில், பராசக்தி வழிபாட்டில், ஐந்து முறை கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டும். இதனால், வெற்றி, மன அமைதி, ஆகியவை கிடைக்கும். குறிப்பாக வெள்ளிக் கிழமை தொடங்கி, செவ்வாய்க் கிழமை வரை தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தினசரி வலம் வந்தால், நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

 

சிவபெருமான் கோயில்

சிவபெருமான் கோயில்களில், ஐந்து முறை வலம் வர வேண்டும். இதனால், எண்ணியது நிறைவேறும். மீண்டும் பிறவா நிலை, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.

திருமால் கோயில்

திருமால் கோயில்களில் மகாவிஷ்ணுவை மூன்று முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி, அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும்.

நவக்கிரகங்கள்

நவக்கிரக கோயில்கள், விக்ரகங்களை ஒன்பது முறை சுற்றி வலம் வர வேண்டும். இதனால், ஜாதகத்தில் உள்ள குறைபாடுகள் நீங்கும் தன்மை, வாழ்க்கை பயனுள்ளதாக மாறுதல், தினசரி கடமைகளில் ஒழுங்கு ஆகியவை பக்தர்களுக்கு கிடைக்கும்.

இது தவிர கோயிலைச் சுற்றி பதினோரு முறை, பதிமூன்று முறை, பதினைந்து முறை, நூற்றியொரு முறை, நூற்றி எட்டு முறை வலம் வருதல் மற்றும் அங்கபிரதட்சனம் போன்றவை பக்தர்களின் பிரார்த்தனைகளை பொறுத்து அமைகிறது. பக்தர்கள் வேண்டிக்கொண்டதற்கு ஏற்றார்போல், பக்தி செலுத்தும் விதமும் மாறுபடும்.

- ரா.வளன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!