Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புஷ்கர மேளாவும், லட்சத் தீபமும்!- புத்திரப்பேறு தரும் திருக்கழுக்குன்ற மலைத் திருவிழா...

திருக்கழுக்குன்றம் ஸ்பெஷல்!

பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்
உன் நாமங்கள் பேசுவார்க்கு
இணங்கிலாததோர் இன்பமே வரும்
துன்பமே துடைத்து எம்பிரான்
உனக்கு இல்லாததோர் வித்துமேல் விளை
யாமல் என் வினை ஒத்தபின்
கணக்கிலாத் திருக்கோலம் நீ வந்து
காட்டினாய் கழுக் குன்றிலே!

ன மாணிக்கவாசகர் உருகிப்பாடியதும், அவருக்கு பரமனார் பல திருக்கோலங்களைக் காட்டி அருள் புரிந்ததுமான புண்ணியத் திருத்தலம் திருக்கழுக்குன்றம்.

அதுமட்டுமா?

வேதங்களே மலை வடிவம் கொண்டதால் வேதகிரி எனவும், கழுகுகள் பூஜித்ததால் கழுக்குன்றம் எனவும், கல்வெட்டுத் தகவல்களின்படி, உலகளந்த சோழபுரம், இந்திரபுரி, நாராயணபுரி, பிரம்மபுரி, முனிக்கணபுரி, தினகரபுரி, ருத்திரகோடி என்று இன்னும் பல திருப்பெயர்களைக் கொண்டது திருக்கழுக்குன்றம்.

செங்கல்பட்டு - மாமல்லபுரம் சாலையில், செங்கல்பட்டிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் திருத்தலத்தில் நாளை சங்குபுஷ்கர மகாமேளா எனும் பெரும் வைபவம் நடைபெறவுள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி ராசியில், பிரவேசிக்கும் திருநாளில், இந்தத் தலத்தில் உள்ள சங்கு தீர்த்தத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகளெல்லாம் சங்கமம் ஆவதாக ஐதீகம். அப்படி, குரு பகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும் திருநாள், நாளை (2.8.16) என்பதால், விழாக் கோலம் பூண்டுள்ளது திருக்கழுக்குன்றம். அங்கே நிகழவுள்ள சங்கு புஷ்கர தீர்த்தத் திருவிழாவிலும், லட்ச தீப பெருவிழாவிலும் நாமும் கலந்துகொண்டு புண்ணியம் பெறுவோம். முன்னதாக திருக்கழுக்குன்றத்தின் மகிமைகளை அறிந்து செல்வது சிறப்பல்லவா?

திருக்கழுக்குன்றம் துளிகள்:

• வேதங்களே மலையாகி திகழ்வதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, ரிக் வேதம் மலையின் அடிவேராகவும், யஜுர் வேதம் - மலையின் மத்திம பாகமாகவும், சாம வேதம் - மலையின் மேல்பகுதியாகவும் மற்றும் அதர்வண வேதம் - மலைச் சிகரமாகவும் திகழ்வதாக ஐதீகம்.

• தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகிய மூவரும் இந்தத் திருத்தலத்துக்கு வருகை புரிந்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். ஆனால் மூவருமே, மலை மீது ஏறாமல் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. வேதங்களே மலையானதால், அந்த மலை மீது கால் பதிக்காமல், மலையின் அடிவாரத்தில் நின்று வழிபட்டார்களாம், அம்மூவரும். இப்படி மூவரும் இருந்து வழிபட்ட இடம் மூவர்பேட்டை.

* திருக்கழுக்குன்ற மலைக்கோயில், ஒரு குகைக் கோயில், பாறையைக் குடைந்து கோயிலெழுப்பும் முறையை பல்லவ மன்னர் மகேந்திரவர்மரே ஏற்படுத்தினார். இந்த மலைக்கோயிலையும் மகேந்திரவர்மரே எழுப்பித்ததாகக் கருதப்படுகிறது.

* மலை மீது வேறு சில குகைகளும் உள்ளன.

* திருக்கயிலையிலிருந்து மூன்று சிகரங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, நந்திதேவரால் தென் திசைக்குக் கொண்டுவரப்பட்டன. திருப்பருப்பதம், திருக்காளஹஸ்தி மற்றும் வேதகிரியில்(திருக்கழுக்குன்றத்தில்) முறையே இவை மூன்றும் சேர்க்கப்பட்டன. எனவே, இது, ''தென்கயிலாயம்'' ஆகும்.

• இங்கு தர்மம் செய்தால், அது கோடி மடங்கு பலன் தரும். எனவே, இது தர்மகோடித்தலம் ஆகும். சங்கு தீர்த்தம் மட்டுமின்றி வேறுபல தீர்த்தங்களும் இங்கு உண்டு. இத்தலத்தில் உள்ள நால்வர் கோயிலின் பின்புறம் இந்திர தீர்த்தம் உள்ளது. மலைக்குத் தென்கிழக்கில் சம்பு தீர்த்தம் மற்றும் ருத்திர தீர்த்தம். தென்மேற்கில் அகத்திய தீர்த்தம் (பொன்னிட்ட நாதர் குளம்): மார்க்கண்ட தீர்த்தம் (சேரன் குளம்) மற்றும் மெய்ஞ்ஞான தீர்த்தம். சற்றுத் தொலைவில் அண்டரசன் குளம் எனும் கோசிக தீர்த்தம். மேற்கில் கோடி விநாயகர் (மலை வலப் பாதை) கோயில் அருகில் கோடி தீர்த்தம் (இதுவே வருண தீர்த்தம்). வடமேற்கில் அகலிகை தீர்த்தம். வடக்கில் வசிஷ்ட தீர்த்தம். இன்னும் சங்கு தீர்த்தம். நந்தி தீர்த்தம். இவற்றோடு மலை மீது சம்பாதி தீர்த்தம் எனும் பட்சி தீர்த்தம் உள்ளது.

* சங்கு தீர்த்தத்துக்குத் தென்கிழக்காக சிறுதொலைவில் ருத்திர கோடீஸ்வரர் கோயில் உள்ளது. மிகப் பழமையானது.

கழுகுகள் வழிபட்டது ஏன்?

சத்ய யுகத்தில் (கிருத யுகம்) இங்கு இரண்டு கழுகுகள் வழிபட்டன. விருத்தசிரவர முனிவரின் மகன்களான சண்டன், பிரசண்டன் ஆகிய இருவரும், முன் செய்த தீவினையால் கழுகு உருவம் பெற்றார்கள். இவர்கள், தந்தையின் ஆலோசனைப்படி, சிவனை நினைத்து வேதகிரியில் தவமிருந்து, முக்தி அடைந்தனர். திரேதா யுகத்தில், சம்பாதியும் ஜடாயுவும் சூரியனுடன் விளையாடிய காரணத்தால், சம்பாதி சிறகுகளை இழந்தும், ஜடாயு உடல் பொரிந்தும் துன்பம் அடைந்தனர். வேதகிரி தீர்த்தத்தில் மூழ்கி வழிபட, அவர்களின் துன்பம் நீங்கியது. சமீப காலம் வரை இரு கழுகுகள் தினமும் உச்சி வேளையில் மலையை வட்டமிட்டு வந்து உணவருந்திச் செல்லும். காஷ்யபரின் மகன்களான சம்புவும் ஆதியுமே இவர்கள் என்று கருதப்படுகிறது. 2,000-வது ஆண்டுக்குப் பின் அந்தக் கழுகுகள் வருவதில்லையாம். இதனால் சாபம் நீக்கப் பெற்றுவிட்டனர் என்று மக்கள் நம்புகின்றனர்.

சங்கு தீர்த்தக் குளம்!

மலையடிவாரக் கோயிலின் எதிரில் உள்ள தெருவின் கோடியில் இருக்கும் குளமே, சங்கு தீர்த்தம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தத் தீர்த்தத்தில் சங்கு (குறிப்பாக, வலம்புரிச் சங்கு) தோன்றுவதால் இந்தப் பெயர். பெரிய குளமாக விளங்கும் சங்கு தீர்த்தத்தைச் சுற்றிலும் படிகள் உள்ளன. நடுவில் நீராழி மண்டபமும் நீராடுவதற்கு வசதியாகப் படித்துறை மண்டபமும் உள்ளன.

புஷ்கர மேளாவும்… லட்சதீபமும்!

மார்க்கண்டேயன் தவம் இயற்றி, சிவபெருமானை வழிபட்டான். வழிபாடு செய்த தீர்த்தத்தை வைக்கப் பாத்திரம் இல்லை. என்ன செய்வதென்று அறியாமல் இறைவனை இறைஞ்ச, அவனுக்காக சங்கு தோன்றும்படி செய்தாராம். எனவே, சங்கில் நீரெடுத்து அவன் வழிபட்டான். சங்கு பிறந்த பொய்கையே, சங்கு தீர்த்தமாயிற்று. மார்க்கண்டேயனுக்காக சங்கு தோன்றிய இடமல்லவா! இங்கு நீராடினால் நோய்கள் நீங்கும், என்பது பக்தர்களின் நம்பிக்கை. கழுக்குன்றத்தின் சங்குதீர்த்த புஷ்கரமேளாவும் லட்சதீபப் பெருவிழாவும் பிரசித்தமானவை. குரு பகவான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு ராசிக்குள் பிரவேசிப்பார். அப்படி அவர் கன்னி ராசிக்குள் பிரவேசிக்கும் நேரத்தில், கங்கை முதல் அனைத்து நதிகளும் புண்ணிய தீர்த்தங்களும் சங்கு தீர்த்தத்தில் வந்து தாங்களே நீராடுகின்றன. இதுவே சங்கு தீர்த்த புஷ்கரமேளா என்று கொண்டாடப்படுகிறது. அன்று, சங்கு தீர்த்தத்தில் நீராடி கோடிக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள். அன்று மாலையில் லட்சதீபப் பெருவிழா நடைபெறும். கோயிலிலும் தீர்த்தங்களிலும், ஊரெங்கும் தீபம் ஏற்றிக்கொண்டாடுவது வழக்கம்.

பலன்கள்!

வேதகிரியான கழுக்குன்ற மலையை வலம் வருவது மிகவும் சிறப்புக்குரியது. புத்திர பாக்கியத்துக்கான பிரார்த்தனைத் தலம் இது. செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலையில் அல்லது பௌர்ணமி நாட்களில் வலம் வருவது உகந்தது. ஒரு மண்டலம் (45 நாட்கள்) காலை வேளைகளில் இந்த மலையை வலம் வந்து வேதகிரீஸ்வரரை எண்ணிப் பிரார்த்தித்தால், புத்திரப்பேறு உண்டாகும்.


நிகழ்ச்சி நிரல்

01.08.2016 காலை யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, 1-ம் கால பூஜை நடைபெறும். மாலை 3-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடைபெறும்.

02.08.2016 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு அவபிரதயாகம், மகாபூர்ணாஹூதியும், 9.30 மணிக்கு அபிஷேகம், தீர்த்தவாரி, வெள்ளி அதிகாரநந்தி வீதியுலாவும் நடைபெறும். மாலை 6 மணிக்கு லட்சதீபம் கோலாகலமாக நடைபெறும். குளம் மற்றும் வீடுகளில் பக்தர்கள் தீபமேற்றுவார்கள். இரவு திருக்கல்யாணம், வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி திருவீதி உலா என நள்ளிரவு வரை லட்சதீப பெருவிழா நடைபெறும்.

சங்கு கடல்நீரில் மட்டுமே உற்பத்தியாகும். ஆனால் இங்கு நன்னீரில் உற்பத்தியாவது சிறப்பு. 12 வருடத்திற்கு ஒரு முறை குளத்தில் சங்கு பிறக்கும். 2011-ல் சங்கு பிறந்தது. அடுத்ததாக 2023-ல் தான் சங்கு பிறக்கும். சங்கு பிறப்பதற்கும் புஷ்கரமேளாவிற்கும் தொடர்பு இல்லை. லட்சதீப விழாவில் சங்கு பிறக்கும் நிகழ்வு நடைபெறாது.

பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?.., என்பது குறித்து செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பன்னீர்செல்வத்திடம் பேசினோம், “1-ம்தேதி 4 மணியிலிருந்து 2-ம் தேதி இரவு 12 மணி வரை மக்கள் கூட்டம் பொதுவாக அதிகமாக இருக்கும். 5 முதல் 8 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

100 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக மாமல்லபுரம், மதுராந்தகம், திருப்போரூர், செங்கல்பட்டு ஆகிய வழித்தடங்கள் வழியாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் எக்காரணம் கொண்டும் சங்கு தீர்த்தக் குளத்தில் இறங்கக் கூடாது. குளக்கரை மேலே உள்ள ஸ்ப்ரே மூலமாக பக்தர்களுக்கு குளத்துநீர் தெளிக்கப்படும். இதற்காக குளத்தை சுற்றி 16 ஸ்ப்ரேக்கள் வைக்கப்பட்டுள்ளன. குளத்தை சுற்றி 5 உடைமாற்றும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருக்கழுக்குன்றத்தில் நுழைவுப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டி பேனர்கள் வைத்துள்ளோம். அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரும் அங்கே உதவிக்கு தயாராக இருப்பார்கள். முக்கிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் ஆங்காங்கே டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளன.

அன்னதானம் செய்ய விரும்புவோர்கள், முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும். மாவட்ட உணவு மற்றும் பாதுகாப்பு அதிகாரி உணவை பரிசோதித்த பின்னரே பக்தர்களுக்கு வழங்க அனுமதிக்கப்படும். அன்னதானம் செய்யும் இடத்திற்கு பக்கத்தில் குப்பைத்தொட்டிகளில் மட்டுமே குப்பையை போடவேண்டும்.

பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பாக்கெட்டுகள் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்படும் நீர் தரமானது என்பதால், பக்தர்கள் தண்ணீர் பாட்டில்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

கிரிவலப்பாதை, பார்க்கிங் பகுதி, சங்குதீர்த்தக் குளம், சாலை ஓரங்கள் என மக்கள் கூடும் இடங்களில் 50 தற்காலிக கழிவறைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இலவச கழிவறையைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டும்.

குளத்தைச் சுற்றி 4 கோபுரம் அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வருவார்கள். குளத்தில் 2 விசைப்படகு உட்பட 4 படகுகளில் 40 பேர் அடங்கிய மீட்புக்குழுவினர் குளத்திற்குள் ரோந்துப்பணியில் இருப்பார்கள்.

வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் போன்றவர்கள் கோயிலுக்கு செல்வதற்காக சிறப்பு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு துணையாக ஒருவரை அழைத்துக் கொள்ளலாம். வயதானவர்கள் தங்குவதற்காக இங்குள்ள பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலைப்படிகள் ஏறுவதற்கு கடினமாக இருக்கும் என்பதால் வயதானவர்கள், இதயநோய் உள்ளவர்கள் மலைக்கோயிலுக்கு செல்ல வேண்டாம். மலைக்கோயிலின் பலனை தாழக்கோயிலில் உள்ள சிவனை தரிசித்து பலன்பெறலாம்.

அரசு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கலை மற்றும் பண்பாட்டுத் துறை மூலமாக கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் ராட்டினம் போன்ற, பொழுது போக்கு அம்சங்களும் இருக்கும்.

சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 18 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாம்களில் 58 மருத்துவர்கள், 54 செவிலியர்கள், 36 மருந்தாளுநர்கள் ஆகியோர் அவசரகால உதவிக்கு உள்ளனர். 18 அவசரகால ஊர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

50-க்கும் மேற்பட்ட சி.சி.டிவி கேமராக்கள் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படும்.” என்கிறார்.

- பா.ஜெயவேல்.

படங்கள்: ரா.ஹரி பிரசாத்
(மாணவப் புகைப்படக்காரர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement