திருக்கழுக்குன்றத்தில் சங்குபுஷ்கர மகாமேளா!

வேதங்களே மலையாகி நிற்கும் மிக அற்புதமான திருத்தலம் திருக்கழுக்குன்றம். இங்கே, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி ராசியில் பிரவேசிக்கும் திருநாளில், சங்கு புஷ்கர மஹாமேளா வைபவம் வெகு கோலாகலமாக நடைபெறும். அப்படியான புண்ணியத் திருநாள் இன்று.

கங்கை முதலான புண்ணிய நதிகள் யாவும் சங்கு தீர்த்தத்தில் சங்கமிக்கும் மிக அற்புதமான இந்த நாளில், ஸ்வாமியைத் தரிசிக்கவும்,  தீர்த்தமாடவும் நேற்று முதலே பக்தர்கள் திரளாகக் குவிய ஆரம்பித்தனர். இன்றைக்குக் காலையிலேயே ஸ்வாமி தீர்த்தவாரிக்குப் புறப்பட்டார். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அருள்மிகு வேதகிரீஸ்வரர் சங்குதீர்த்தக் கரைக்கு எழுந்தருள, ‘‘சம்போ மகா தேவா... தென்னாடுடைய சிவனே போற்றி’’ என்ற பக்தர்களின் முழக்கங்களுக்கு இடையே வெகு சிறப்பாக நடந்தேறியது, தீர்த்தவாரி வைபவம். தொடர்ந்து பக்தர்கள் மீதும் ஆங்காங்கே 'ஷவர்' மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது.  

பிறகு ஸ்வாமி திருவீதியுலாவாகப் புறப்பட்டு, ஊரின் ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குத் தரிசனம் தந்த பிறகு, ஸ்வாமி கோயிலில் எழுந்தருளுவார். அதே நேரம், மலைக் கோயிலைத் தரிசிக்கவும் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த விழாவில், கலந்து கொண்ட பக்தர்களிடையே பேசியபோது,

‘‘மிக அற்புதமான திருவிழா இது. இந்த முறை, காஞ்சிபுரம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏன் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கே குவிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைக்கு குருப்பெயர்ச்சி மட்டுமின்றி ஆடிப்பெருக்கும் சேர்ந்து வந்துள்ளது. ஆடிப்பெருக்கன்று தீர்த்தங்களில் நீராடுவது உசத்தி என்பார்கள். இங்கே இன்று கங்கை முதலாக புண்ணிய நதிகள் எல்லாம் சங்கமிக்கும் நாள் என்பதால், இந்தத் தீர்த்தவாரியில் கலந்து கொண்டதால், பன்மடங்கு பலன் கிடைத்தது என்றே சொல்லவேண்டும்’’ என்று சிலிர்ப்புடன் பகிர்ந்து கொண்டார்கள்.

மாலையில் இந்தத் திருத்தலத்தில் லட்சதீபப் பெருவிழா நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

- பா.ஜெயவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!