வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (31/08/2016)

கடைசி தொடர்பு:19:49 (31/08/2016)

பக்திப் பழக்கம் 10

நாம் அனைவரும் கட்டாயம் பின்பற்றவேண்டிய பத்து ஆன்மிகப் பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோமா?


1. வீடுகளில் தினசரி தீபம் ஏற்றுவது அவசியம். எந்தவொரு பொது நிகழ்ச்சி, விழாவாக இருந்தாலும்கூட தீபம் ஏற்றி விட்டுத்தான் தொடங்குகிறோம். அந்த நிகழ்ச்சி முடியும் வரை, தீபம் எரிந்துகொண்டு இருக்க வேண்டும். நம் கலாசாரத்தில் தீபத்துக்கு அப்படியொரு முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் கொடுத்துவந்துள்ளார்கள்.  நம் வீடுகளில் மாலை நேரத்தில் விளக்கேற்றும்போது, ஜன்னல்கள் திறந்திருக்கக் கூடாது. வீட்டின் முன்புற வாசல் மட்டுமே திறந்திருக்க வேண்டும். பின்புறமும் வாசல் இருக்கும் பட்சத்தில், அது மூடப்பட்டிருக்க வேண்டும்.


2. தீபத்தில் எரியும் சுடர், கிழக்கு நோக்கி எரிந்தால் ஐஸ்வர்யம் உண்டாகும். வடக்கு நோக்கி எரிந்தால், நோய்நொடிகள் குணமாகும். தீபத்தின் சுடர் மேல்நோக்கி நீண்டவாறு எரிந்தால் ஆரோக்கியம் சிறக்கும்.

3. வீட்டில் வழக்கமாக ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், வீட்டின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

4. வழிபாடு முடிந்த பிறகு, தீபச்சுடரின் மீது கையை வீசி அணைக்கக்கூடாது. மலரொன்றை எடுத்து சுடரின் மீது ஒத்தி, அணைக்க வேண்டும்.

5. மங்கலகரமான பொருட்களில் முதன்மையானது மஞ்சள். எந்த ஒரு சுபகாரியத்துக்கும் மஞ்சள் அவசியம். எனவே, வீடுகளில் எப்போதும் மஞ்சளை வைத்திருக்க வேண்டும். மஞ்சள் இருக்கும்  வீட்டில் மங்கலம் நிறைந்திருக்கும்!

6.வீடுகளில் காலை, மாலை இரண்டு வேளையும் மஞ்சள் நீரை த் தெளித்து வந்தால், லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.

7. அதிகாலை எழுந்தவுடன் சூரியனை வழிபடுவதால் ஆரோக்கியம் பெருகும். அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மையளிக்கும் சூரியனின் அருளால் நமது கர்மவினைகள் அனைத்தும் நீங்கும்.

8. பிறந்த குழந்தையை முதன்முதலில் சூரிய வெளிச்சம் படும் வகையில் வீட்டிலிருந்து வெளியே கொண்டுவருவதை , நம் முன்னோர்கள் பல்லாண்டு காலமாக ஒரு சம்பிரதாயமாகவே கடைப்பிடித்து வந்தனர். குழந்தையின் உடல் முழுவதும் நல்லெண்ணெயைப் பூசி, இளவெயிலில் படுக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது சூரியனின் ஆசி பெற்று, குழந்தையின் ஆரோக்கியம் சிறக்கும்.

9. சனிக்கிழமைகளில் காலை வேளையில் மட்டுமே அரசமரத்தைச் சுற்றி வழிபட வேண்டும்.

10. ஆறுகளும் நதிகளும் இறுதியில் கடலில்தான் கலக்கின்றன. எனவே, சமுத்திர ஸ்நானம் மிக உயர்ந்தது. அமாவாசை, பெளர்ணமி, கிரகணம் போன்ற முக்கிய தினங்களில் கடலில் நீராடுவது உத்தமம்!


முத்தான இந்தப் பத்துப் பழக்கங்களையும் கடைப்பிடிப்போம். நலம் பெறுவோம்!

- தி.ஜெயப்பிரகாஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்