விளக்கேற்றுவதற்கும் உண்டு விதிமுறைகள்! | regulations for holy lamp lighting

வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (01/09/2016)

கடைசி தொடர்பு:18:44 (01/09/2016)

விளக்கேற்றுவதற்கும் உண்டு விதிமுறைகள்!

                                                               

விளக்கேற்றுதல் என்பது, நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே  நம் கலாசாரத்தில்  தொன்றுதொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மரபு. சுபகாரியங்கள் அனைத்தையும் விளக்கேற்றிவிட்டுத்தான் தொடங்குகிறோம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விளக்கேற்றும் முறைக்கும் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார்கள் பெரியவர்கள். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.


1.வீட்டில் நாம் எந்தவொரு பூஜையைச்  செய்யத் தொடங்கும்போதும், முதலில் சுமங்கலியான ஒருவரை குத்துவிளக்கு ஏற்றிச் சொல்லி, அதை வணங்கிய  பிறகே தொடங்க வேண்டும்.
2. தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெயை ஊற்றிய பிறகே பஞ்சுத் திரியை வைக்க வேண்டும்.   
3. விளக்கில் எண்ணெய் விட்ட பிறகு, எத்தனை திரிகளை வைத்தாலும், அனைத்து திரிகளையும் ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் விளக்கில் இரண்டு திரிகளாவது போட்டு ஏற்றுவது நல்லது.
4.  இரண்டு திரிகளின் நுனிகளை இணைத்து, அதை நன்றாக முறுக்கி தீபமேற்றுவது உன்னதமான வாழ்வுக்கு அடித்தளமிடும்.
5. கிழக்கு திசையை நோக்கித் திரி ஏற்றினால், பலன்கள் அனைத்தும் முழுமையாகக் கிடைக்கும்.
 

என்னென்ன திரிகளால் என்னென்ன பலன் ?
பெரும்பாலான வீடுகளில், பருத்திப் பஞ்சால் செய்யப்பட்ட திரியைத்தான் பயன்படுத்துகிறார்கள். பருத்திப் பஞ்சுத் திரி மட்டுமல்லாது, இன்னும் சில வகைத் திரிகளை  விளக்கேற்றுவதற்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு திரிக்கும் ஒவ்வொரு வித பலன் உண்டு. அவை:
 

பஞ்சுத் திரி: பருத்திப் பஞ்சைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப்  பயன்படுத்தினால் பித்ருக்களால் ஏற்பட்ட சாபமும், வம்சாவளிப் பிரச்னைகளும் நீங்கும்.

மஞ்சள் துணி திரி: மஞ்சள் துணியைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், அனைத்து வியாதிகளும் நீங்கும், செய்வினை போன்ற பிரச்னைகள் நீங்கிப் பூரண அருள் கிட்டும்.

சிவப்பு வண்ணத் திரி : சிவப்பு வண்ணத்தினாலான  துணியைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், திருமணத் தடை நீங்கும், குழந்தைப் பேறு கிட்டும்.

வெள்ளைத்துணி திரி: வெள்ளைத் துணியைத் திரியாகச் செய்து, பன்னீரில் நனைத்துப் பயன்படுத்தினால், மனக் குழப்பங்கள் நீங்கி, தெளிவான சிந்தனைகள் உருவாகும்.

வெள்ளெருக்குத் திரி : வெள்ளெருக்கம் பட்டையால் செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால் பொருளாதாரப் பிரச்னைகள் நீங்கி, செல்வ வளம் அதிகரிக்கும்.

தாமரைப்பூ தண்டு திரி: தாமரைப்பூ  தண்டைக் கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், முன்வினைக் கர்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கை வளப்படும்.


வாழை நார்த் திரி
வாழைத்தண்டு நாரைக்கொண்டு செய்யப்பட்ட திரியைப் பயன்படுத்தினால், குடும்பப் பிரச்னைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும்.
வீட்டில் விளக்கேற்றுவோம்! இருள் நீங்கி அருள் பெறுவோம்!

- தி.ஜெயப்பிரகாஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்