Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

 அனைத்து மதத்தவரும் விரும்பும் அன்னை வேளாங்கண்ணித் திருவிழா!

                                       
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம். ஒவ்வொரு வருடமும் இந்தப் பேராலயத்தில் ஆண்டு விழாக் கொண்டாட்டம்  வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 29 - ம் தேதி கடல் போல் கூடிய மக்கள் வெள்ளத்தின் நடுவில் கொடியேற்றப்பட்டுத் தொடங்கப்பட்ட திருவிழா, மேரி மாதா பிறந்த தினமான செப்டம்பர்  8 ம் தேதி நேற்று மாலையுடன் கோலாகலமாக நிறைவுற்றிருக்கிறது.


வங்காள விரிகுடா கடற்கரையோரம்  பனை மரங்கள் சூழ்ந்த, கடற்காற்றும் வீசும் பரவசமான சோலையில்  அமைந்திருக்கிறது புனித வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில்.  இயேசுநாதரின் தாயாரான மரியன்னையின் பெயரால் அமையப்பட்ட இந்தத் திருத்தலம் தஞ்சை மறை மாவட்டத்தின்  கலங்கரை விளக்காகத் திகழ்கிறது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது,எல்லா மதங்களையும் சார்ந்த லட்சக்கணக்கான  மக்கள் திரண்டு வந்து, அன்னையின் அன்பை, ஆசீர்வாதத்தை, அருளைப் பெற்றுச்செல்வது வாடிக்கை. துன்பக் கடலில் நீந்தித் தவிக்கும் பலருக்கும் கைகொடுத்து உதவிவரும் கருணைமிகு மேரி மாதா இங்குதான் குடிகொண்டு இருக்கிறார். தன்னை நாடி வரும் மக்களை அரவணைத்துத் தேற்றி,தாயின் பரிவையும் பாசத்தையும் வழங்கிக் காத்து வருகிறார்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும்  புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது. மதநல்லிணக்கத்துக்கான ஈடு இணையற்ற சான்றாக நின்று மிளிர்கிறது ஆரோக்கிய மாதா பேராலயம்.


செப்டம்பர் 8 -ம் தேதி மாதாவின் பிறந்த தினம். அன்றைய தினத்தைக் கணக்கில் கொண்டே ஒவ்வோர் ஆண்டும் பேராலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி மாலை பேராலயத்தில் தஞ்சை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், விழாக் கொடியை புனிதம் செய்த பிறகு, பேராலயத்தில் இருந்து கடற்கரைச் சாலை, ஆரிய நாட்டுத் தெரு எனப் பல பகுதிகளுக்கும்  ஊர்வலமாக எடுத்துச் சென்று, மீண்டும் ஆலயத்தைச் சென்றடைந்தது. பின்னர் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கிய அன்றைய தினமே பேராலாயத்தில் லட்சகணக்கான மக்கள் வருகை தர ஆரம்பித்தனர். இதற்காகப் பேராலயம் மட்டும் இல்லாமல், வேளாங்கண்ணி முழுக்கவே மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, வண்ணமயமாக காட்சியளித்தது.


 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு ஏற்றவாறு,  தினமும்  தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி என சகல மொழிகளிலும் திருப்பலிகள் நடைபெற்றன. மிக முக்கிய நிகழ்வாகப் போற்றப்படும் பெரிய தேர் பவனி செப்டம்பர் 7-ம் தேதி மாலை நடைபெற்றது. அன்றைய தினம் புனித ஆரோக்கிய மாதா பெரிய தேரில் அலங்காரம் செய்யப்பட்டு எழுந்தருள, ஆறு சிறிய சப்பரங்களில் அந்தோணியார், சூசையப்பர் என அவர்களும் அலங்காரத்தில் எழுந்தருள,  மக்கள் வெள்ளத்தில் பெரிய தேர் பவனி கொண்டாட்டமாய் நடைபெற்றது. அந்த நேரத்தில் பக்தர்கள் 'மரியே வாழ்க! மாதாவே வாழ்க!’ என கோஷமெழுப்பி, மாதாவின் புகழைப் பாடிப் பரப்பினர். 


வேளாங்கண்ணித் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள்  40 நாட்கள் கடுமையான விரதமிருந்து, பாத யாத்திரையாக நடந்தே வேளாங்கண்ணியை வந்தடைவர். அவ்வாறு வந்தவர்கள்  மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்ட சப்பரத்தில் மாதாவின் சிலையை வைத்து, அவளின் புகழைப் போற்றும் பாடல்களைப் பாடியபடியே பாத யாத்திரையாக வருவது தனிச் சிறப்பு. குறிப்பாக, வேளாங்கண்ணி வந்தடைந்ததும், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திலிருந்து பழைய வேளாங்கண்ணி ஆலயம் வரை ஒன்றரை கி.மீட்டருக்கு மணலால் நிரப்பப்பட்ட பாதையில் பக்தர்கள் முட்டிபோட்டுத் தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றிச் சென்றனர். கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது, மாற்று மத அன்பர்களும் தங்களின் வேண்டுதல் நிறைவேற மாதாவிடம் இப்படி மனம் உருகி வேண்டுவது வாடிக்கை!


திருவிழாவுக்கு வந்திருந்த தஞ்சாவூரைச்  சேர்ந்த பரணீதரன் என்பவரிடம் பேசினோம். நான்  இந்து மதத்தைச் சேர்ந்தவன். 15 வருடங்களாக மாலை போட்டு, விரதம் இருந்து பாத யாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வந்து செல்கிறேன். என் எத்தனையோ வேண்டுதல்களை மாதா நிறைவேற்றியிருக்கிறார். இந்த முறை என் மகனின்  உயிரைக் காப்பாற்றித் தர மாதாவின் ஆலயத்தைத் தேடி வந்திருக்கிறேன். என் மகனுக்குச் சிறுநீரகத்தில் நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வந்தது.  இம்முறை நான்  மாலை போட்டு விரதமிருந்து, வேளாங்கண்ணி கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த நேரத்தில், என் மகனுக்குப் பிரச்னை அதிகமாகி, மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழல் உருவாகிவிட்டது. இருந்தாலும் மனம் தளராமல் மாதாவின் மேல் பாரத்தைப் போட்டுப் பாத யாத்திரை கிளம்பி விட்டேன். இரண்டு நாட்கள் கழித்துப் பேராலயத்தை அடைந்தவுடன், என் மனைவியிடமிருந்து செல்போன் அழைப்பு வந்தது. என் மகனின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர் தெரிவித்திருப்பதாகச் சொன்னார் என் மனைவி. மனமுருகி மாதாவை வேண்டுபவர்களை அணைத்து ஆசீர்வதிப்பாள் அன்னை வேளாங்கண்ணி மாதா. அடுத்த வருடம், என் மகனையும் அழைத்து வந்து வேளாங்கண்ணியில் வேண்டுதலை நிறைவேற்றிவிடுவேன் என்று நெகிழ்ந்து சொல்கிறார் பரணீதரன்.
அன்னை என்றாலே, அன்போடு அரவணைத்து ஆறுதல் அளிப்பவர்தானே!


- கே.குணசீலன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement