Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒற்றுமை வளர்க்கும் ஓணம்! ஏன்... எப்படி கொண்டாடப்படுகிறது...?

உலகெங்கும் வாழும் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
ஓணத்தின் சிறப்பு
கேரள மக்களால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும், ‘ஓணம் பண்டிகை’ ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் (மலையாளத்தில் சிங்ங மாதம்) ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள், தங்கள் வாழ்க்கையுடன் ஒன்றி, தங்கள் மனதில் நீங்கா இடம்பெற்று தங்களைத் தேடிவரும் மாமன்னன் மகாபலியை வரவேற்பதே ஓணம் பண்டிகையின் தலையாயச் சிறப்பு ஆகும்.

ஓராயிரம் ஆண்டுகால பண்டிகை!

கேரளாவில் பருவமழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும். கேரளாவின் முக்கியப் விழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை, ‘அறுவடைத் திருநாள்’ என்றும் அழைப்பர். ஓணம், ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை. இந்த வரலாற்றுச் செய்தி, கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில் விவரமாக பொறிக்கப்பட்டுள்ளது.

 

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். ‘கசவு’ என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டின் முன்பு, பெண்கள் 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்று அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், அறுசுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. ஐந்தாம் நாள் அனுஷம் எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பர்யமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இதைக்காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஆறாம் நாள் திருக்கேட்டை, ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். திருவோண நாளான 10-ம் நாள் நடைபெறும் ஓணம் கொண்டாட்டத்துடன் இந்த விழா முடிவடைகிறது.

‘அத்தப்பூ’ என்ற பூக்கோலம்!

 

ஓணம் பண்டிகையின் முக்கிய அம்சமே, மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் ஒவ்வோர் வீட்டு வாசலிலும் போடப்படும் ‘அத்தப்பூ’ என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில், ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இந்தக் காலத்தில் வரும் ஓணத் திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக்கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில்வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து 10-ம் நாள், பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். 10-ம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

64 உணவு வகைகள்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான ‘ஓண சாத்யா’ என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இந்த உணவு எளிதில் ஜீரணம் ஆவதற்காக ‘இஞ்சிக்கறி’, ‘இஞ்சிப்புளி’ ஆகியவற்றை உணவுடன் எடுத்துக்கொள்வர்.

ஆண், பெண் ஆடும் நடனங்கள்!

 

ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பம்சம், ‘புலிக்களி’ அல்லது ‘கடுவக்களி’ என்று அழைக்கப்படும் நடனம் ஆகும். இந்த விழா, திருச்சூரில் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. தொந்தியை பெரிய அளவில் உருவாக்கி வைத்திருக்கும் ஆண்மகன்களுக்கு இந்த விழாவில் கிராக்கி உண்டு. இந்த விழாவைக் காண வெளிநாட்டினரும் வருகிறார்கள். புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன், மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கிவைக்கப்பட்டதாகும். கறுப்பு, மஞ்சள், சிவப்பு வர்ணம் பூசி, இசை ஒலிக்கேற்ப ஒருவித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர். ஓணம் பண்டிகைக் காலங்களில் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம், ‘கைகொட்டுக்களி.’ கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.

யானை அலங்காரம்!

ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழா. 10-ம் நாளான திருவோணத்தன்று, யானைகளை விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும். கயிறு இழுத்தல், களறி, பாரம்பர்ய நடனப் போட்டிகள் என பண்டிகையின் 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த விளையாட்டுகளில் கலந்துகொண்டு குதூகலம் அடைவர்.

ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைத்து மதத்தினரும், சமுதாயத்தினரும் ஒன்றுகூடி மகிழும் தேசிய விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது. அந்த வரலாற்றுச் செய்திகளைச் சங்ககால ஏடுகள் குறிப்பிடுகின்றன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் தமிழகத்தில் வாழும் கேரள மக்களோடு சேர்ந்து இப்போதும் ஓணம் பண்டிகையைத் தமிழக மக்களும் கொண்டாடுகிறார்கள். சென்னை மற்றும் கேரள எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் அரசு விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. 14-09-16 அன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

ஒற்றுமை வளர்க்கும் ஓணம் கொண்டாடுவோம்!

- எஸ்.முத்துகிருஷ்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement