வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (22/09/2016)

கடைசி தொடர்பு:10:53 (22/09/2016)

சிதைந்து கிடக்கும் சமணர் படுகை - வரலாற்று அலட்சியம்!

மணம் என்னும் சொல் `சிரமண` என்னும் வட சொல்லின் திரிபு. அதனால், `சிரமணர்` தமிழில் `சமணர்` என அழைக்கப்பட்டனர். சமணர் என்பதற்கு இன்பம் - துன்பம் ஆகிய இரண்டையும் சமமாக கருதுபவர் என்று பொருள் கொள்ளலாம். நட்பு, பகை அற்றவர் எனவும் கூறலாம். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பவர் என்று விரிவான பொருளைத் தருவதாகவும் கொள்ளலாம். பழமையான வேதமாகிய ரிக்வேதம் சமணத்தை பறைசாற்றுகிறது.

பாண்டிய நாட்டில் முன்னரே சமணம் கால் கொண்டிருந்ததால் வடநாட்டு துறவிகளின் வருகையும் செயல்பாடுகளும் புதியதொரு ஊக்கத்தை உண்டு செய்தது எனலாம். ஆக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கி.மு.3 - ம் நூற்றாண்டிலேயே சமண மதம் பரவி இருந்ததாக அறிகிறோம். இக்கருத்தை உறுதிபடுத்த நமக்கு உதவுவது ஆங்காங்கே கிடைக்கும் சமணர் தொடர்புடைய கல்வெட்டுகளாகும். இத்தகைய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் அச்சரப்பட்டி, மாங்குளம், திருப்பரங்குன்றம், தேனி ஆகிய இடங்களில் இன்றளவும் காணப்படுகின்றன.

தேனி மாவட்டம், உத்தமபாளைத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களால் கட்டப்பட்ட படுகைகள் அனைத்தும் தற்போது அழியும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. கி.மு 6 - ம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதிகளில் சமண மதம் தோன்றியதாக கூறப்படுகிறது. சங்க காலங்களிலேயே புத்த மதமும் சமண மதமும் இருந்ததாக தமிழ் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் சமணர்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. இவற்றின் 23 - வது வழித்தோன்றல் பரசுராமர் எனவும், 24 - வது தலைமை பொறுப்பை வகித்தவர் மகாவீரர் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

உத்தமபாளையத்தில் அமைந்துள்ள சமணர் படுகையில் இரண்டு வகையான சிலைகள் உள்ளன. பாம்புக்கு கீழே இருப்பவர் பரசுராமர் என்றும் மூன்று குடைகளுக்கு கீழே இருப்பவர் மகாவீரர் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் முதலாவது பாண்டிய மன்னன் சடையமாறன், இங்குள்ள படுகையில் வாடா விளக்கு தொடர்ந்து எரிய, ஆயிரம் பொன்களை கொடுத்ததாக கல்வெட்டுகளில் கூறப்படுகிறது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளையும் சின்னங்களையும் தனக்குள் கொண்ட சமணர் படுகைகளில் தற்போது கயவர்கள் பதுங்கும் கூடாரமாக திகழ்கிறது. குடித்துவிட்டு போடப்பட்ட மதுபாட்டில்கள் கிடக்கிறது. 1000 ஆண்டு வரலாறு கூறும் சிறப்பிடத்தின் கல்வெட்டுகளின் அங்கு வரும் சமூக விரோதிகள் இழி சொற்களால் எழுதியும், அதில் கிறுக்கியும் சேதப்படுத்தி வருகின்றனர் என்பது மிகப்பெரிய அவலம்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் இப்பகுதியை கலாச்சாரமிக்க இடம் என தொல்லியல் துறை அறிவித்தது. ஆனால், இப்போது பலகையே நெலிந்துபோய் கிடக்கிறது. வரும் தலைமுறையினர் இவ்விடத்தின் வரலாற்றை அறியவும், எஞ்சியிருக்கும் சின்னங்களை காக்கவும் அரசும், தொல்லியல் துறையும் முன்வருமா???

 

 

- உ.சுதர்சன் காந்தி
(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள் – வீ.சக்தி அருணகிரி

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்