வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (26/09/2016)

கடைசி தொடர்பு:18:22 (26/09/2016)

இந்த ஆண்டு சென்னையைப் புயல் தாக்குமா... என்ன சொல்கிறது பஞ்சாங்கம்?


 

டந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெருமழை பெய்து கடும் சேதம் விளைவிக்கும் என்று பஞ்சாங்கத்தை  அடிப்படையாகக் கொண்டு,  ஏகப்பட்ட வாட்ஸ் அப் தகவல்கள் தமிழகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.  

'தமிழ்நாடு முழவதும் மழை, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இரவுகளில் அடிக்கடி இடி-மின்னல் தோன்றும் ! கார்த்திகை மாதம் அதிக மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி  கட்டடங்கள் சேதமுறும். அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும். குறிப்பாக அக்டோபர்  மற்றும் நவம்பர் மாதங்களில் பெருமழை பெய்யும் என்றும், சென்னையை பெருமழை உலுக்கும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமேஸ்வரம், இலங்கை, அந்தமான் தீவுகள் பாதிப்பு அடையும்.' என்பதுதான் மேற்சொன்ன வாட்ஸ் அப் தகவல்களில் தேதிவாரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் சாராம்சங்கள்.

இந்தத் தகவல்கள் எல்லாம் ஆதாரமானவையா என்பது குறித்து வானியல்,  ஜோதிடம் முதலான துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களிடம் கருத்துகள் கேட்டோம்.

கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு இது பற்றிச் சொல்லும்போது...

''தமிழ் வருட ஆண்டுகள் மொத்தம் 60; அவ்வகையில், 1956-ல் பிறந்த இந்த துர்முகி ஆண்டு, 60 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் 2016 ஏப்ரலில் (சித்திரை) பிறந்தது.
துர்முகி ஆண்டு குறித்த பாடல் ஒன்று...
''மிக்கான துர்முகியில் வேளாண்மை ஏறுமே
தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான
குஜர தேசத்தில் குறை தீரவே விளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்!

 

பழங்காலத் தமிழர்கள் பகலில் சூரியனையும், இரவில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் வைத்து, தட்ப வெப்ப நிலையையும் பருவகாலத்தையும் கணித்து வந்தனர். பகலில் வானின் குறுக்கே பறந்து செல்லும் பறவைகள், பூச்சிகள் இவற்றையெல்லாம் வைத்தும் கணிப்பார்கள்.  இப்போது பூமியின் நிலை, மனித சமூகத்தின் வளர்ச்சி, அறிவியல்  வளர்ச்சி,  நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் முதலான பொருட்களின் பயன்பாடுகள்,  தொழிற்சாலைகளின் கழிவுகள், அதனால் சீர்கெட்ட நிலம், கடல் எனப் பலவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.  இதனால்தான் மவுன்ட் ரோடில் மழை இருக்கும், கிண்டியில் மழை இருக்காது என்பது போன்ற, பழங்காலத்தில் இல்லாத நிலைகள் உருவாகின்றன.

 

என்னைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மழை அதிகம் இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், போன முறை பெய்த அளவு இருக்காது. சென்னை, கடலூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் தொழிற்சாலை இருப்பதால்,  மழை அதிகமாக இருக்கும். மற்றபடி, இணையத்தில் உலவும் கருத்துக்கள் சற்று மிகைப்படுத்தப்பட்டவை. வாட்ஸ் அப் விஞ்ஞானிகளின் லீலைகள். அதைப் பற்றி பயப்படத்தேவையில்லை'' என்றார் உறுதியாக.

இவரைப் போலவே, மேகங்களை ஆய்வு செய்து வரும் இயற்கை ஆய்வாளர்  பெரம்பலூர் மழைராஜுவைச் சந்தித்துப் பேசியபோது...
''கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக மேகங்களை ஆய்வு செய்து வருகிறேன். இந்த ஆய்வின் மூலம் மேகங்களின் வகைகள் மற்றும் நிறங்கள் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணித்து,  இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே கணித்து துல்லியமாகக் கூறி வருகிறேன். இந்த ஆய்வின் மூலம் ஓரிரு மாதங்கள் முன்னதாகவே, கனமாக மழை பெய்யும் இடங்களையும், புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ள இடங்களையும் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும்.  பருவ மழைக் காலங்களிலோ, நிலநடுக்கக் காலங்களிலோ  சேதம் ஏற்பட்டுவிட்டால் , மக்களைப் பயமுறுத்தும் பல்வேறு தகவல்களை அடுத்தடுத்துப் பரவவிட்டு தேவையற்ற பீதியைக் கிளப்பி வருகிறார்கள். இதற்குப் பஞ்சாங்கமும் விதிவிலக்கல்ல.

கடந்த ஆண்டு கடலூர், சென்னை வெள்ளத்துக்குப் பிறகும் இதே போல பஞ்சாங்கத்தை சுட்டிக்காட்டிப் பல செய்திகள் பரபரப்பாக வெளிவந்தன. ஆனால், அதன் பிறகு அதுபோல் எதுவும் நடக்கவில்லை என்பதை நாம் கண்கூடாகவே பார்த்தோம்.

வடகிழக்குப் பருவமழையைப்  பொறுத்தவரை , திருவள்ளூர் முதல் திருவாரூர்  வரை கடலோர  மாவட்டங்களில் மிக பலத்த மழை இருக்கும்.  தெற்கு ஆந்திராவில் கன மழையோ, புயலோ கரையைக் கடக்க  வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடலூருக்கும் தெற்கு திருவாரூக்கும் இடையில் கன மழை பெய்யவோ, புயல் கரையைக் கடக்கவோ வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் சராசரிக்கு அதிகமாகவும், தென் தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்கள் தவிர பெரும்பாலும் சராசரிக்குக் குறைவாகவும் மழை பெய்வதற்கான சூழல் காணப்படுகிறது.  பருவ மழை முடிந்த பிறகு, தொடர்ந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் நிலை காணப்படுவதால், மழை நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் தருவது மிக முக்கியம். இல்லாவிட்டால், பெரிய தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும்h என்றார்.
இதைப் பற்றி  ஜோதிட ரீதியாகவும், அறிவியல்பூர்வமாகவும்  ஆய்வு செய்து வரும் ஜோதிட விண்வெளி ஆய்வாளர் புயல் எஸ்.ராமச்சந்திரன்...

புயல் எஸ்.ராமச்சந்திரன்

 

செப்டம்பர்  20 முதல் அக்டோபர் 30 வரை காற்று, இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. செப்டம்பர் 22 – 25, செப்டம்பர் 29 - அக்டோபர் 2, அக்டோபர் 8 – 11, அக்டோபர் 13 – 17, அக்டோபர் 22 – 30 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினம், நெல்லூர் ஆகிய இடங்களுக்கு இடையே புயல் கரையைக் கடப்பதால் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்யும். குறிப்பாக, வட மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 15 - டிசம்பர் 22 - காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் - பலத்த மழை;
டிசம்பர் 23  - டிசம்பர்  28 - மிதமானது முதல் கனமழை
ஜனவரி 5  - ஜனவரி 7 - மிதமானது முதல் கனமழை
ஜனவரி 8 -  ஜனவரி 14 -  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, தற்போது நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. அதனால், தமிழக மக்கள் அச்சம்கொள்ளத் தேவை இல்லை. அக்டோபர் 12 முதல் 17 வரை மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. நவம்பர் , டிசம்பர் மாதங்களில் இரண்டாம் வாரங்களில்  இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, கவனமாக இருக்க வேண்டும்” என்று துல்லியமாக தேதிவாரியாகக் கூறினார்.
இதற்கிடையே வானிலை ஆய்வு மையம்  அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில்...

''தமிழகத்தில் கடந்த வருடம், வடகிழக்கு பருவமழை சற்று அதிகமாகவே பெய்தது. குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை பெய்தது. அதன் காரணமாக சென்னையில் வெள்ளச் சேதம் ஏற்பட்டது.  அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெற்கு உள் கர்நாடகா ஆகியவை வருடந்தோறும் பெறக்கூடிய மழையில் 30 சதவிகிதத்தைப் பெறுகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் 48 சதவிகித மழை கிடைக்கிறது.கடந்த வருடம் வடகிழக்குப் பருவமழை காலத்தில் 152 சதவிகிதம் மழை பெய்தது. இந்த வருடம் (2016) வட கிழக்குப் பருவமழை காலத்தில் தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை பெய்யும். அதாவது, இயல்பான மழை பெய்யும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் விளையாட்டை யார் அறிவார்? எதுதான் உண்மை, என்னதான் நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம்!

- எஸ்.கதிரேசன்

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்