ஏழைகாத்தம்மன் கோயிலில்... குழந்தையே தெய்வம்! | Children are treated as God in the temple of ezhaikathamman

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (29/09/2016)

கடைசி தொடர்பு:17:28 (29/09/2016)

ஏழைகாத்தம்மன் கோயிலில்... குழந்தையே தெய்வம்!

துரை மாவட்டம், மேலூர் அருகே அமைந்துள்ளது 'வெள்ளளூர்' எனும் அழகிய கிராமம். இதனை 'வெள்ளளூர் நாடு' என்றும் அழைப்பர். மதுரையைச் சுற்றியுள்ள 52 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றுபட்டு, வெள்ளளூர்  கிராமத்தில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயிலில் திருவிழா எடுத்துச் சிறப்பிக்கின்றனர்.

குழந்தையே தெய்வம்!
இத்திருவிழாவின்போது, தெய்வ பக்தியில் சிறந்துவிளங்கும் ஏழு சிறுமிகளை, அம்மனின் உத்தரவுப்படி கன்னி தெய்வங்களாக, அருள் வந்து தேர்வு செய்வார், வெள்ளளூர் ஏழைகாத்தம்மன் கோயில் பூசாரி. புரட்டாசியில் நடைபெறும் திருவிழாவின்போது, இந்தக் குழந்தைகளுக்கு நகைகளும் பட்டுப்பாவாடைகளும் அணிவித்து, தெய்வக் குழந்தைகளாக பாவித்து மரியாதை செலுத்துவர், இப்பகுதி கிராமத்து மக்கள்.
இப்படி தெய்வமாக பாவித்து வழிபடப்படும் குழந்தைகளின்  திருவிழா  இந்த ஆண்டு புரட்டாசியில் துவங்கியது. அந்தச் சிறுமிகள் ஏழு பேரும் கோயிலிலேயே தங்கி, அம்மனை வணங்கி, விரதமிருப்பர். பின்னர், இவர்களை  திருவிழாவின் கடைசி நாளன்று மதுக்கலயங்களுடன்  இவ்வூரிலிருந்து, அருகில் இருக்கும் 'கோயில்பட்டி' எனும் கிராமத்தில் உள்ள மற்றொரு ஏழைகாத்தம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வர். இவ்வாறு சிறுமிகள் வருவதை, ஏழைகாத்தம்மனே தங்கள் ஊருக்கு வருகைபுரிவதாக எண்ணி மெய்சிலிர்க்கின்றனர், கோயில்பட்டி கிராமத்து மக்கள்.

இப்படி, வெள்ளளூர் ஏழைகாத்தம்மன் கோயிலின்  கடைசித் திருவிழா  சமீபத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. இந்நாளில் சுற்றுப்பட்டு 52 கிராமங்களைச் செய்த 22 அம்பலக்காரர்களுக்கும்  கிராம மக்கள் மரியாதை செய்தனர். 

விநோத வழிபாடு:
இது தவிர, திருமணமான பெண்கள், தென்னம்பாளையால் ஆன மதுக்கலயங்களை,மேல் சட்டை அணியாமல் ஏந்திச் சென்று, ஏழைகாத்தம்மன் கோயிலில் சென்று, சமர்ப்பித்து வேண்டுகின்றனர். இதனால் அவர்களின் குடும்ப வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம்.  தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் , களிமண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலைகளையும் கையில் ஏந்தி, கோயிலில் சென்று நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அது மட்டுமல்லாது,  இளைஞர்களும் சிறுவர்களும் வைக்கோல் பிரியில் பொம்மைகள் செய்து, இறுதி நாளன்று வேஷம்கட்டியும், வண்ணக்கொடிகள் தூக்கியும் ஊர்வலம் வந்து, கோயிலுக்குச் சென்று  பிரார்த்தனை செய்கின்றனர்.  
இப்படி, விநோத நேர்த்திக்கடன் மற்றும் பிரார்த்தனைகளின் தொகுப்பாக நடக்கிறது  பழைமை வாய்ந்த வெள்ளளூர், ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா. 


விநோத வழிபாடாக இருந்தாலும், ஊரின் ஒற்றுமைக்கான விழா என்பதால், போற்றத்தக்கது இந்த வெள்ளளூர்த் திருவிழா!

- தகவல் மற்றும் படங்கள்:  சே.சின்னதுரை 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்