சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு நினைவிடம்..! வெங்கய்யா நாயுடு நம்பிக்கை

சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு நினைவிடம் அமைக்க பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆன்மிக குருமார்களில் தமிழகத்திலும், இந்திய அளவிலும் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பெற்ற சுவாமி தயானந்த சரஸ்வதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம், டெல்லியில் உள்ள ஆர்ஷ வித்யா பரம்பரா அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். சுவாமி தயானந்த சரஸ்வதியின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய  வெங்கய்ய நாயுடு, "உலக அரங்கில் இந்து மத கருத்துகளை எளிய முறையில் எடுத்துரைத்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. அவரது போதனைகளையும், பொது சேவைகளையும் தொடருவதே அவருக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்.  சுவாமி தயானந்த சரஸ்வதிக்கு டெல்லியில் நினைவிடம் அமைக்க துறவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்" என்று வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார். 

"இந்து சமயத்தில் உள்ள துறவிகள் அனைவருமே தேசியவாதிகளாகத் திகழ்கின்றனர். மதமாற்றம் அதிக அளவில் நடைபெற்ற  காலகட்டத்தில் அதற்கு எதிராக குரல் எழுப்பியவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. நாம் அனைவரும் துறவிகளாக முடியாது. ஆனால்,  சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோரின் போதனைகளை நம்மால் எளிதாக பின்பற்ற முடியும். அவரது போதனைகள் தேசத்துக்கு  மட்டுமின்றி உலகத்துக்கே பொதுவானவையாக உள்ளது" என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் கூறினார். 

சுவாமி தயானந்த சரஸ்வதி, நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மிக குருவாக இருந்து வந்தார். தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சென்னையில் இருந்தாலும், கோவை ஆனைகட்டி ஆசிரமத்தில் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவரை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க ஒருபோதும் தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!