வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (01/10/2016)

கடைசி தொடர்பு:14:00 (03/10/2016)

இந்த வருடம் நவராத்திரி பதினோரு நாட்களா?!

புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை துவங்கி நவமி வரையிலும் சாரதா நவராத்திரி காலம்.பத்தாவது நாளான தசமி அன்று விஜயதசமி திருநாள் அனுஷ்டிக்கப்படும். ஆக, பத்து நாள் கொண்டாட்டமாக அமையும் நவராத்திரி, இந்த வருடம் 11 நாட்கள் நீடிக்கிறது. இதுகுறித்து, விளக்குகிறார் நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகர பாரதி. 

"இந்து மதத்தில் மூன்று தெய்வங்கள் முக்கியமாகப் போற்றப்படுகின்றனர். படைக்கும் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன். இந்த மூன்று தேவர்களும், மூன்று சக்திகளாக திகழ்கிறார்கள். 

இவர்களின் சக்திகளாக திகழும், மூன்று தேவியர்களும் போற்றப்படுகின்றனர்.  இந்த மூன்று தேவர்களின் தேவிகளாக சரஸ்வதி, லட்சுமி, துர்கை ஆகிய முப்பெருந்தேவியர்கள் இருக்கிறார்கள். இந்த முப்பெருந்தேவியர்களை போற்றி துதிக்கும் விழாதான் நவராத்திரியாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம். 

நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. 

குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தேவியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். துர்க்கை உடல் சக்தியை கொடுப்பவள். வீர தீர பராக்கிரமத்தை உருவாக்குபவள். லட்சுமி பதினாறு செல்வங்களையும் வழங்கக்கூடியவள். சரஸ்வதி கல்வி செல்வத்தைத் தருபவள். 

நவராத்திரியில் கொலு வைத்து, சுமங்கலி பெண்களை (திருமணமாகி புத்திர, புத்திரிகளுடன் சந்தோசமாக வாழும் பெண்களை) பூஜித்து அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், உணவுப் பொருட்கள், துணிகள் போன்ற மங்கள பொருட்களை கொடுத்து, அவர்களது நல்வாழ்த்துகளை பெறுவது கூடுதல் சிறப்பாகும். இதனால், ஜாதகத்தில் பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் ஆகியோர் வலுவிழந்த நிலையில் இருப்பவர்களுக்கு நன்மை உண்டாகும்.

இந்த ஆண்டு நவராத்திரி அதிக திதி காரணமாக, பத்து நாட்கள் நடைபெறுகிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல், 10-ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1-ம் தேதி 'பிரதமை' நாள் முழுவதும் இருக்கிறது. 2-ம் தேதி காலையிலும், பிரதமை தொடர்கிறது. இதுவே அதிக திதியாகும். இதன் காரணமாக, 11-ம் தேதி விஜயதசமியையும் சேர்த்து மொத்தம் 11 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படவிருக்கிறது. 

11-ம் தேதி விஜயதசமி அன்று, பூஜை முடிந்ததும் புதிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். சில இடங்களில் நவராத்திரி இரண்டாம் தேதி தொடங்கப்படுகிறது. இதில் பழைய முறைப்படி 9 நாட்களே பூஜை முறைகள் நடைபெறும். 

மூன்று சக்திகளின் ( துர்கா, லட்சுமி, சரஸ்வதி) ஏக சக்தியாக விளங்கும் காமாட்சியை, இந்த நவராத்திரி காலத்தில் தினமும் காமாட்சி விளக்கு ஏற்றி வழிபடுவது குடும்பத்திற்கு கூடுதல் நன்மையைத் தரும். பல்வேறு காரணங்களால், ஒன்பது நாள்களிலும் தேவியை பூஜிக்க முடியாதவர்கள், அஷ்டமியன்றாவது அவசியம் முப்பெருந்தேவியர்களையும் பூஜிக்க வேண்டும். இதனால், முப்பெருந்தேவியர்களின் பரிபூரணமான ஆசி நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்" என்று 

-ரா.வளன் 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்