வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (01/10/2016)

கடைசி தொடர்பு:17:47 (01/10/2016)

குதூகலம் பொங்கும் குலசை தசரா..!


தர்மம் நிலைக்க வேண்டும் என்றால் அதர்மம் அவ்வப்போது அழிக்கப்பட வேண்டும். அப்படி அதர்மத்தை அழிக்கிற நிகழ்வுக்குப் பெயர்தான் ’சூரசம்ஹாரம்’ என்பதாகும்.  


அகன்று விரிந்து விசாலம் பெற்றிருக்கிற இந்த பூமியில் சூரிய பகவான் முகம்காட்டி மறைகிற கால அளவை ஒரு நாள் அதாவது 24 மணி நேரம் என நிர்ணயித்திருக்கிறான் மனிதன். அப்படியாக 365 நாட்களைக் கொண்ட நகர்வை ஒரு ஆண்டு என்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் இதுமாதிரியான ஆண்டுகள் லட்சக்கணக்கில் நகர்ந்திருக்கிறது.

 
இந்த லட்சக்கணக்கான ஆண்டுகளில், இப்பூமியில் வாழும் உயிர்கள் பல்வேறு உருவ அமைப்பையும் குண மாற்றத்தையும் பெற்றிருக்கிறது. அவ்வாறு மாற்றத்தக்க பண்புகள் எதிர்கால உயிர்களுக்கு நன்மை செய்வதாகவும் தீமை செய்வதாகவும்கூட அமைந்திருக்கிறது. தீமை செய்யும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக மக்களை நல்வழிப்படுத்தும் முயற்சிக்குப் பெயர்தான் ஆன்மிகம்.


அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்ட ஆன்மிகத்தின் பாதையைப் பின்பற்றி திருக்கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அசூரன் என்பவன் கொடியவனாக கருதப்படுகிறான். அந்த கொடியவனை சம்ஹாரம் செய்யும் அதாவது அழிக்கும் செயலே சூரசம்ஹாரம்.


வைகாசி விசாக திருநாளில் முருகன், பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மாதம் காளி உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதற்காக  விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தினால் நினைத்த காரியம் நிறைவேறும் என பக்தர்கள் அனுபவ ரீதியாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் என்ற ஊரில் அமைந்திருக்கும் முத்தாரம்மன்  திருக்கோயிலில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தொடர்ந்து 12 நாட்கள் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் தசரா திருவிழா அக்டோபர் 1 - இன்றைய தினம் கோலாகலமாகத் துவங்கிவிட்டது. 


தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் என பல மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், திருவிழா துவங்குவதற்கு நாற்பது நாட்களுக்கு முன்பிருந்தே விரதமிருக்க துவங்கிவிடுகிறார்கள். இன்று கொடியேற்றத்துடன் துவங்கும் இத்திருவிழா அக்டோபர் 12- ம் தேதி வரை ஆட்டம் பாட்டமென ஆரவாரமாக நடைபெறும். விசேஷ பூஜைகள், தேர்பவனி, அன்னதானம் என 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவின் பத்தாவது நாளில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி, மைசூரு தசராவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவில் குலசேகரப்பட்டினத்தில் தான் நடைபெறுகிறது.

          


திருக்கோயிலைச் சேர்ந்த பட்டர் மகாராஜசுவாமிகள் கூறியபோது, "ஞானமூர்த்தீஸ்வரர் - முத்தாரம்மன் என இக்கோயிலில் அம்மையும் அப்பனும் ஒரு சேர வீற்றிருக்கும் திருக்காட்சி வேறு எந்தவொரு திருக்கோயிலிலும் காண இயலாத அற்புதக் காட்சியாகும். வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து முத்தாரம்மனை வழிபட்டால், குறைகளை நீங்கிச் சிறப்புடன் வாழ்வாங்கு வாழலாம் என்பது நம்பிக்கை. தமிழ் மாத கணக்கின்படி புரட்டாசி 15 - ல் துவங்கும் இவ்விழாவுக்காக பக்தர்கள் ஆடி மாதத்திலிருந்தே விரதம் கடைபிடித்து, மாலைபோட்டுக்கொண்டு தயாராகிவிடுவர்.  பலவகையான வேடங்களில் திருக்கோயிலில் வலம்வருவது, அக்னிச்சட்டி எடுத்தல், நேர்த்திகடன் செலுத்துதல் போன்ற வழிபாடுகளில் பக்தர்கள் முழ்கியிருப்பர். அதனைத் தொடர்ந்து நடக்கும் சூரசம்ஹார நிகழ்ச்சி, தேர்பவனி, காப்பு அவிழ்த்தல் போன்ற நிகழ்ச்சிகள் குலசை திருவிழாவின் முக்கியமான அங்கங்களாக கருதப்படுகிறது" என்றார்.


கடந்த 33 வருடங்களாக தொடர்ந்து குலசை தசராவில் வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்திவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த பக்தரான என். இசக்கிமுத்துவிடம் பேசினோம்,  நான் கார்பெண்டர் வேலை பார்க்கிறேன். எனக்கு கல்யாணம் ஆகி 20 வருடம் கடந்துவிட்டது. ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறாங்க. ஒரு காரியம் நடக்கவேண்டும்னு கடவுளை நினைச்சு, திருவிழாவில் வேஷம் போட்டால்  நிச்சயமாக அந்த காரியம் நடந்தே தீரும் என்பது என் வாழ்க்கையில் நான் அனுபவித்து உணர்ந்த ஒரு நம்பிக்கை. 'எனக்கு ஏழு வயது இருக்கும் போது என் உடம்பு முழுவதும் புண்ணாகி துர் நீர் வடிந்துகொண்டிருந்தது. எத்தனையோ மருத்துவர்களிடம் சென்று பார்த்தும் உடம்பு சரியாகவில்லை. அப்போது என்னைத்தூக்கி விளையாடிய என் தாத்தாவுக்கும் அது பரவியது. அந்த தருணத்தில் எல்லோருமே என்னை  வெறுத்து ஒதுக்கினாங்க. இந்த நேரத்தில் 'என் மகனுக்கு சீக்கிரமே உடம்பில் உள்ள நோய் போய்விட்டால் ஆயுசு முழுவதும் பல வேடங்களில் கோயிலுக்கு வருவான்’ என முத்தாரம்மனை வேண்டி நேமிஷம் போட்டாங்க எனது பெற்றோர் . தசரா திருவிழாவில் முதன்முதலில் நரிக்குறவர் வேஷம் போட்டேன். எனக்கு வந்திருந்த நோய் காணாமலே போய்விட்டது. அதன் பின்னர் ஐந்து வருடங்களாக தசராவில் தொடர்ந்து நரிக்குறவர் வேஷம் போட்டேன். அடுத்த பத்து வருடங்களுக்கு கிருஷ்ணர் வேஷம் போட்டேன். இந்த வருடத் திருவிழாவுக்கு காளி வேஷம் போடப்போகிறேன்.  என்னோட மனைவி பெயர் மரியசெல்வம்  வேறு மதத்தைச் சேர்ந்த அவர் ஆரம்பத்தில் என்னுடைய இந்த ஈடுபாடுகளைக் கண்டு நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தார். ஆனால் என்னுடைய பக்தியையும், என் குடும்பத்துக்கு அம்மனின் அருள் முழுவதுமாய் கிடைப்பதையும் பார்த்து, இப்போது முத்தாரம்மனின் தீவிர பக்தையாகிவிட்டார். குலசை தசரா திருவிழாவுக்காக நாற்பது நாட்கள் விரதம் இருப்பது வருடம் முழுவதும் உடல் நலத்தோடு வாழ வழிவகுக்கிறது. அப்படி விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்தத் தயாராகும் என்னைப்போன்ற பக்தர்கள்,  வேஷம்போட்டுக்கொண்டு பொதுமக்கள் முன் செல்லும்போது, மக்கள் அனைவரும் எங்களை வணங்குவதைப் பார்க்கவே எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கும். வேண்டியவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் இந்த முத்தாரம்மனுக்காக என் வாழ்நாள் முழுவதும் வேஷம் போட்டு குலசை தசராவுக்குப் போவேன்’’ என்றார் பெருமிதத்துடன். 

 

ஞானியார்குடியிருப்பை சேர்ந்த மற்றொரு பக்தரான செந்தில்முருகன், 'நான் தசராவில் வேஷம் போடுறேன். என் ஊர்க்காரங்க, உறவுக்காரங்கன்னு பலபேர் குலசை தசராவில் வேஷம் போடுவதை சிறு வயதிலிருந்தே பார்த்து ரசித்திருக்கேன். அந்த ஆர்வத்துல தான் நானும் 32 வருடங்களுக்கு  முன்பு வேஷம் போட்டேன். ஆனால் இப்போ என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி விதவிதமான வேஷங்களை போடணும் என்கிற ஆர்வத்தோடு ஆண்டுதோறும் தவறாமல் திருவிழாவில் வேஷம் போடுகிறேன்.  சும்மா விளையாட்டாக வேஷம் போட ஆரம்பித்த நான், இப்போ தன்னைத் தாழ்த்தி ஆணவத்தை கரைத்துவிட பிச்சைக்காரன் வேஷமும், ஆண்டவனின் அருளை தன் மீது ஏற்றி வைத்துக்கொள்ள கடவுள் வேஷமும், எதிரியை அழிக்கும் போர்க்குணம் பெற காளி வேஷமும், காரியம் சாதிக்கும் வல்லமை பெற ஆஞ்சநேயர் வேஷமும், அறிவில் சிறந்து விளங்க ஞானிகள் வேஷமும் ஆர்வத்துடன் போடுறேன். அந்தந்த வேஷங்களைப் போடுகிறவர்களுக்கு அதற்கு வேண்டிய சக்தியை அம்மன் தருகிறாள் என்பதையும் நான் மனப்பூர்வமாக உணர்கிறேன்' என்று நெகிழ்கிறார்.


இவ்வூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளான தண்டுபத்து, தாண்டவன்காடு, பெரியபுரம், சிறுநாடார் குடியிருப்பு, ஞானியார் குடியிருப்பு, சுண்டங்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் வேலை காரணமாக வெளியூர்களில் அதிகம் வசித்தாலும், குலசேகரப்பட்டினம் திருவிழாவின்போது தவறாமல் தங்களின் ஊருக்கு வருவதை கடமையாகக் கொண்டுள்ளனர்.


 அக்டோபர்  1-ம் தேதி முதல் கையில் காப்பு, கழுத்தில் மாலை, உடல் முழுவதும் வேஷம் என பக்தர்கள் நிறைந்த பகுதியாகிவிடுகிறது இப்பகுதிகள். வேஷம்போடுகிறவர்களை ஒருங்கிணைத்து அந்தந்த ஊர் பெயர்களைக் கொண்ட குழுவாக இயங்குகிறார்கள். திருவிழா காலத்தின் மூன்று வேளைகளிலும் அன்னதானம், தமிழ் கலாசாரத்தின் அங்கங்களான கொண்டாட்ட நிகழ்வுகள் எல்லாமே இங்கு நடத்தப்படுகிறது. வேஷம்போட்டு பொதுமக்களிடம் வசூலிக்கும் காணிக்கைகளை மொத்தமாக கோயிலில் சேர்த்துவிடுகிறார்கள். பொதுமக்களும் தொழிலதிபர்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து நிகழ்ச்சிகளை முன்வந்து நடத்துறாங்க. சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிகளால் ஒருவார காலம் இந்த பகுதியே விழா கோலம் பூண்டிருக்கும். சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் யார் அதிகமாக நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் என்ற போட்டியே நிழவும்.


இந்த மக்களைப் பொறுத்தவரையில் ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல், தீபாவளி போன்ற கலாசார விழாக்களைவிட, குலசை தசரா திருவிழாவையே அதிகமாக விரும்புகிறார்கள். வாணவேடிக்கை, மேளதாளங்கள் என கோலாகலக் கொண்டாட்டத்தோடும், முழுமையான பக்தி உணர்வோடும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா அனைவரின் மனதிலும் மகிழ்ச்சியை நிரப்புகிறது.

அரசின் கவனத்துக்கு :
மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இத்திருவிழாவில் கலந்துகொண்டு கோயிலில் தங்கியிருக்கும் பெண் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் பரிதவிக்கிறார்கள். கழிப்பிட தேவைகளுக்காக அவர்கள் சிரமப்படுவது ஆண்டுதோறும் தொடர்கிறது. சுற்றுப்புறத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளமாக இருக்கும் இத்திருவிழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளே சென்று வெளியே வருவதற்கான பாதை வசதிகளுமில்லை. சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் குளிக்கும் வழக்கம் உண்டு. அங்கே பாதுகாப்பு வசதி இல்லாமல் கடந்த வருடம் ஒரு பெண் பக்தர் கடலில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்தது. அது போன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இம்முறை நிகழ்ந்துவிடாமல் அம்மனின் அருளை பக்தர்கள் முழுமையாகப் பெருவதற்கு அரசு தரப்பும் உதவ வேண்டியது அவசியம்.


கட்டுரை : எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள் : ஏ.சிதம்பரம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்