ஆண்டாள் சூடிய மலர்மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு..! | Andal's garland taken to Tirupati for pooja

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (05/10/2016)

கடைசி தொடர்பு:10:44 (06/10/2016)

ஆண்டாள் சூடிய மலர்மாலை திருப்பதி வெங்கடாஜலபதிக்கு..!

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. திருப்பதி, ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்ற பெருமாளின் திருத்தலங்களில் நடைபெறும் சிறப்பு விசேஷங்களின்போது, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு மாலை அணிவித்து அதை இங்கிருந்து கொண்டு சென்று சுவாமிகளுக்கு சூட்டுவது வழக்கம். திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புரட்டாசி மாதத்தில் பிரம்மாமோற்சவம் விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வர்.
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் 7-ம் தேதி கருடசேவை விழா நடக்கிறது. இதற்காக ஸ்ரீதிருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்று காலை திருப்பதி வெங்கடாஜலபதிக்காக பிரத்யேகமாக மாலை கட்டும் பணி முடிந்து, அந்த பிரமாண்டமான பூ மாலையை திருக்கோயில் வளாகத்துக்கு மேளதாளங்களுடன் எடுத்துச் சென்று திருக்கோயில் உற்சவரான ஆண்டாளுக்கு சூடி சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகளும் நடந்தது. பிறகு ஆண்டாளுக்கு அணிவித்த மாலையை தனிக்கூடையில் வைத்து மேளதாளங்கள் முழங்க, திருக்கோயிலைச் சேர்ந்த யானை ஜெயமாலிகா பின்னே செல்ல அந்த பூமாலை கூடையை திருப்பதி செல்வதற்கு தயாராக இருந்த வாகனத்தில் ஏற்றி வைத்தனர். அப்போது சுற்றி நின்ற பக்தர்கள் அனைவரும் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கமிட, பிறகு அந்த பிரம்மாண்ட பூ மாலை ஏ.சி பொருத்தப்பட்ட இன்னோவா காரில் திருமலை திருப்பதியை நோக்கி கிளம்பிச் சென்றது.

 

ஆண்டாளுக்கு இந்த பிரம்மாண்ட பூ மாலையை ஆண்டுதோறும் கட்டித்தரும் திருத்தங்கல் காளிமுத்து கூறியதாவது :- "கடந்த 6 ஆண்டுகளாக ஆண்டாளுக்கு அணிவிக்கும் மாலைகளை கட்டித்தரும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெங்கடாஜலபதி சுவாமிக்கு பிரம்மாண்ட மாலை அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் இருந்து 80 கிலோ எடையுள்ள பூக்களை வரவழைத்தோம். பிறகு காலை 7 மணி முதல் 10 பேர் கொண்ட குழுவினர் மாலை கட்டும் பணியைத் தொடங்கினோம். செவ்வந்தி, விரிச்சி, மரிக்கொழுந்து, நீல சாமந்திப்பூ ஆகிய 4 வகையான பூக்களை கொண்டுதான் இந்த பிரம்மாண்ட மாலையைக் கட்டுவோம். இந்த மாலை ஒரே மாதிரியான வண்ணத்தில் இருக்காது. அடுத்தடுத்து ஒவ்வொரு வண்ணம் வரும்படி மாலையின் வரிசை அமைக்கப்பட்டிருக்கும். அதனால்தான் இந்த மாலைக்கே ஆண்டாள் மாலை என்று பெயர் வைத்துள்ளோம். மாலை கட்டும் பணியை துவங்குவதற்கு ஒருவாரத்துக்கு முன்பிருந்தே விரதமிருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இது எனக்குக் கிடைத்த பூர்வ ஜென்ம பாக்கியமாகத்தான் கருதுகிறேன்' என்றார்.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தக்கார் ஸ்ரீபதி ரவிச்சந்திரன் கூறியதாவது: 'ஆண்டாள் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் இங்கிருந்து திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்துக்கு மாலை கொண்டு செல்லும் வைபவம் தொடங்கியிருக்கிறது. இதற்கு முன்பு வாகன வசதி இல்லாத காலங்களில், நீண்ட நாட்கள் கெட்டுவிடாமல் இருக்கும் வெட்டி வேரைக்கொண்டு தயாரிக்கப்படும் மாலையை ஆண்டாளுக்குச் சூடி பிறகு அதை இங்கிருந்து மாட்டு வண்டியில் நாட்கணக்கில் பயணம் செய்து திருப்பதியில் அருள்பாலிக்கும் வெங்கடாஜலபதிக்கு அணிவிப்பதை நம் முன்னோர்கள் கடைபிடித்து மகிழ்ந்திருக்கிறார்கள். போக்குவரத்து வசதிகளில் முன்னேற்றம் வந்த பிறகு ரயில், பேருந்து போன்றவற்றில் மாலையை திருப்பதிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். கடந்த 2000 - ம் ஆண்டு முதல் மாலையை தனியாக காரில் கொண்டுபோய் சேர்க்கும் வழக்கம் உருவாகிவிட்டது. ஆண்டாள் மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லும்போதே ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலின் மிகவும் பிரசித்தி வாய்ந்த இலையால் செய்யப்பட்ட 2 கிளிகளும் உடன் எடுத்து செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது. திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது. அக்., 5 - ம் தேதி இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆண்டாள் சூடிய மாலை அக்.,6-ம் தேதி காலை திருப்பதிக்குச் சென்று கோயிலை நிர்வகிக்கும் பெரிய ஜீயர் மடத்தில் வைக்கப்படும். மறுநாள்  7-ம் தேதி ஆண்டாள் மாலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கருடசேவையின்போது ஆண்டாள் சூடிய மாலையை வெங்கடாஜலபதிக்கு அணிவித்து, பக்தர்களின் தரிசனத்துக்காக திருவீதி உலா எடுத்துச் செல்லப்படும். 
ஆண்டாள் கோயில் மாலை வழங்கியதற்கு நன்றிக்கடனாக திருப்பதி கோயிலில் இருந்து வெங்கடாஜலபதிக்கு சாத்தப்பட்ட பட்டுப்புடவை, வஸ்திரம் மற்றும் 2 வெண் குடைகள் ஆகியவை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வந்து சேரும். அவை திருப்பதி பிரம்மோற்சவ விழா முடிந்ததும், அடுத்து வரும் வெள்ளிக்கிழமை ஆண்டாளுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆண்டாளை தரிசிப்பர்' என்று கூறினார்.

செய்தி: எம்.கார்த்தி
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்