வெளியிடப்பட்ட நேரம்: 19:54 (12/10/2016)

கடைசி தொடர்பு:10:46 (13/10/2016)

பரிவேட்டை திருவிழா... களைகட்டிய கன்னியாகுமரி!

  
பரிவேட்டை ஊர்வலம், கன்னியாகுமரியில் வெகு பிரசித்தம். ஆண்டுதோறும் பகவதி அம்மன் திருக்கோயிலில் நவராத்திரியில் நடக்கும் உன்னதத் திருவிழா. இந்த ஆண்டும் திருக்கோயில் பக்தர்கள் சங்கம் சார்பில் பரிவேட்டை ஊர்வலம் சிறப்பாக அக்டோபர் 11, விஜயதசமி  அன்று சிறப்பாக நடைபெற்றது.


ஊர்வலத்துக்கு முன்னதாக நெற்றிப்பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட மூன்று யானைகளின்  அணிவகுப்பு! முத்துக்குடை, பகவதி அம்மன் உருவப் படத்தை தாங்கியபடி பக்தர்கள் சென்றனர். குதிரை ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட ரதங்கள், நாதஸ்வரம், பஞ்ச வாத்தியம், செண்டை மேளம், தையம் ஆட்டம், சிங்காரிமேளம், தேவராட்டம், கோலாட்டம், பொய்க்கால் குதிரை, பஜனை... எனக் களைகட்டியது கன்னியாகுமரி .


எலுமிச்சைப் பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்குத் தயாரானாள். ஊர்வலம் மாலை 6 மணியளவில் மகாதானபுரம் வேட்டை மண்டபத்தைச் சென்றடைந்தது. மேல்சாந்தி போற்றிகள் பூஜை நடத்தினர்.போற்றி, பரிவட்டம் கட்டி, பரிவேட்டை மண்டபத்தை நோக்கி நான்கு முறை அம்பு எய்தார். அதன் பிறகு, திசைகள் நோக்கி நான்கு முறையும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்பு பாய்ந்த இளநீருடன் பக்தர் ஒருவர் அம்மன் வாகனத்தை வலம் வந்தார். பாணாசுரன் என்ற அரக்கனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சியாக இது கருதப்படுகிறது.


பரிவேட்டை ஏன்?
`என்னை ஒரு கன்னிப் பெண்தான் கொல்ல முடியும்’ என வரம் வாங்கியவன் பாணாசுரன். வரம் தந்த ஆணவத்தில் அவன் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பார்வதி தேவி பூமியில் அவதரித்தார். அம்பாளின் அவதார நோக்கம்... பாணாசுரனை வதம் செய்வது.  மலையத்துவஜன் மன்னனின் மகளாக அவதரித்தார் பார்வதி தேவி. வளர்ந்து கன்னிப் பருவத்தை அடைந்தார். சிவபெருமான், அம்பாளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார்... மலையத்துவஜ மன்னனிடம் பெண்கேட்டு வந்தார்.
தம்மை மணக்க தேவி, ஈஸ்வரனிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சூரிய உதயத்துக்கு முன்னர், மூன்று பொருட்களை கன்னியாகுமரிக்குக் கொண்டுவர வேண்டும் என்பது கோரிக்கை. அவை, கண் இல்லாத தேங்காய், காம்பில்லா வெற்றிலை, கணு இல்லாத கரும்பு. இறைவனாயிற்றே! அவற்றையும் கண்டுவிட்டார். சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு கன்னியாகுமரிக்கு அவற்றோடு வந்தார். வழுக்கம்பாறை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது அது நடந்தது. நாரதமுனிவர் சேவல் கோழியாக உருமாறி, கூவினார். `ஒரு கன்னிப் பெண்ணால் மட்டுமே பாணாசுரனை வதம் செய்ய இயலும். இறைவனோடு திருமணம் நிகழ்ந்துவிட்டால், தேவியின் அவதார நோக்கம் நிறைவேறாது’ என்பதால் அப்படிச் செய்தார் நாரதர்.  இறைவன், `சூரிய உதயம் நிகழ்ந்துவிட்டது, இனி இம்மூன்று பொருட்களைக் கொண்டு போய்ப் பயனில்லை’ எனக் கருதி சுசீந்திரம் திரும்பிவிட்டார். நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி அன்று தேவி, பாணாசுரனை வதம் செய்த பின்னர் சிவபெருமானை நோக்கி கையில் ஜபமாலையுடன் தவக்கோலத்தில் காட்சிதருகிறார் என்பது ஐதீகம்.

 


பின்னர் அம்மன் ஊர்வலம் மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் வழியாக காரியகாரமடம் அருகில் வந்து சேர்ந்தது. அங்கு வெள்ளிக் குதிரை வாகனத்தில் இருந்து வெள்ளிப் பல்லக்கு வாகனத்தில் கோயில் நோக்கி ஊர்வலம் புறப்பட்டது. அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி, பகவதி அம்மன் திருக்கோயில் கிழக்கு வாசல்  எல்லா நாட்களிலும் திறந்திருக்காது. ஓர் ஆண்டில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, வைகாசி விசாகத் திருவிழா, நவராத்திரி திருவிழாவின் கடைசி நாளான பரிவேட்டை திருவிழா மற்றும் கார்த்திகை தீபத் திருவிழா ஆகிய ஐந்து நாட்களில் மட்டுமே திறக்கப்படும். அதுவும் 1 மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். கிழக்கு வாசல்தான், பிரதான நுழைவுவாசலாக பண்டைய நாட்களில் இருந்தது. 
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர், கடல் வழியாகச் சென்ற கப்பல் ஒன்று, பகவதி அம்மனின் வைரக்கல் மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கத்தின் ஒளி எனக் கருதி  கரையை நோக்கி வந்ததாம். அப்போது அந்தக் கப்பல் பாறையில் மோதி கடலில் மூழ்கியதாம். அதற்குப் பிறகுதான்  கோயிலின் கிழக்கு வாசல் மூடப்பட்டது. இப்போது கோயிலின் வடக்கு வாசல் பக்தர்களின் தரிசனத்துக்காக பிரதான நுழைவு வாசலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பரிவேட்டை திருவிழாவில் கன்னியாகுமரி பகவதிஅம்மன், கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்குள் எழுந்தருளினாள்.


- த.ராம்
படங்கள்.ரா.ராம்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க