திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3-ல் கொடியேற்றம்! 

சிவ பெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாள்கள் இத்திருவிழா மிகவும் விஷேசமாகக் கொண்டாடப்படுகிறது. 

உலகப் பிரசித்திப் பெற்ற, இத்திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவை முன்னிட்டு, கோயில் போபுரங்களில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றத்துக்கு முன்பு 3 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 30-ம் தேதி ஸ்ரீதுர்கையம்மன் உற்சவமும், டிசம்பர் 1-ம் தேதி ஸ்ரீபிடாரியம்மன் உற்சவமும், டிசம்பர் 2-ம் தேதி ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெறுகின்றன. 

அதனைத்தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 8-ம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும், 9-ம் தேதி காலை 6.05 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் பஞ்ச ரதங்களின் வீதியுலாவும் நடக்கிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4 மணிக்குக் கோயில் மூலவர் சந்நிதியில் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறுகிறது. 

டிசம்பர் 13-ம் தேதி இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், 14-ம் தேதி இரவு ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பல் உற்சவமும், 15-ம் தேதி இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

இந்த ஆண்டு நடைபெறும் கார்த்திகை தீபத் திருழாவில் உலகம் முழுவதில் இருந்தும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

-ரா.வளன்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!