அழகனுக்கு இடமளித்த அழகர்!  - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 3 

மதுரைக்கு 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும். அங்கே மலைமீது பழமுதிர்சோலை மலைக்கிழவோனாக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

திருச்செந்தூரில் மருமகனாகிய முருகனின் தயவில் மாமனாகிய திருமாலின் கோயில் அமைந்துள்ளது. அதற்கு நேர்மாறாக, இங்கே பழமுதிர்சோலையில் மாமன் தயவில் மருமகன் கோயில் கொண்டுள்ளார் என்பார்கள்.

அழகர் மலை என்று வழங்கும் இடம், இரண்டு அழகர்களுக்கும் உரிய தலமாக விளங்குகிறது. ஒர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தரராஜப் பெருமாள்; மற்றொருவர், 'என்றும் இளையாய் அழகியாய்’ என்று போற்றப்படும் முருகன்.

சோலைமலை, திருமாலிருஞ்சோலை மலை, திருமாலிருங்குன்றம் என்றும் இந்த மலைக்குப் பெயர்கள் உண்டு. பரிபாடல் இதன் புகழைப் பாடுகிறது.

அழகர் கோயில் மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது. இதை 'நூபுர கங்கை' என்றும் சொல்வர். இதற்குப் போகும் வழியில், முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாகிய ஆறாவது படைவீடு ஆயிற்று.

''பலவுடன் வேறு பல்துகிலின் நுடங்கி அகில் சுமந்து.... இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோனே" (திருமுருகாற்றுப்படை 296-317) என நக்கீரர் வருணித்துள்ள இயற்கைக்காட்சிகளை இன்றும் இங்கே நாம் கண்டு இன்புறலாம்.
மலையின் நீளம் கிழக்கு மேற்காக 16 கி.மீ உள்ளது. எழில்மிகு இயற்கை இன்பம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. இத்தலம் இடபகிரி (விருஷபகிரி) எனவும் அழைக்கப்படுகின்றது. 


இமயன் இத்தலத்தில் இடபமாகிய தரும வடிவுடன் தவமியற்றி, தன் பெயரால் இம்மலை விளங்கவேண்டுமென இறைஞ்சி இறைவனருள் பெற்றதால் இம்மலை இடபகிரி (விருஷபாத்ரி) என்றும் அமைவதாயிற்று.

வேல் மூலவராக உள்ள முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு, இருபுறமும் வள்ளி, தெய்வகுஞ்சரி விளங்க நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். கல்லால் ஆகிய வேலுக்கு தனிச்சிறப்பு உள்ளது.

இத்தலத்தின் தீர்த்தமாக நூபுரகங்கை (திருச்சிலம்பாறு) என்ற சுனை உள்ளது. இது திருமாலின் திருச்சிலம்பிலிருந்து உற்பத்தியாகி வருவதாகக் கூறுவர். இச்சுனை மலை உச்சியிலிருந்து வரும்போது சூரிய ஒளியால் பலவிதங்களில் ஒளிரும். நவரத்தின ஒளியும் இதில் தெரியும்.

திருமாலின் (அழகரின்) திருவடியை இச்சுனை வருடிக்கொண்டு பாய்வதால், திருமாலின் திருவடிக்குப் பணி செய்யும் திருமகளைப் போன்றுள்ளது. இதில் அனைவரது எண்ணங்களும் பூர்த்தியாவதால், 'இஷ்டசித்தி' எனவும் இதை அழைப்பர்.

முருகன் எழுந்தருளியுள்ள தலங்களில் எல்லாம் 'சரவணப் பொய்கை' இருக்கும். அந்த வகையில் இங்கே சரவணம் என்ற பொய்கை இருந்ததென்று தெரிய வருவதால், முருகனின் திருக்கோயிலும் இருந்திருக்க வேண்டும் என்று தெளியலாம்.

 

 

'ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
ஆறமர லந்தலம்பு துறைசேர...
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே...’


என்று நூபுரகங்கையையும் சோலை மலையையும் இணைத்து முருகனைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.

சங்க காலத்திலும், அருணகிரிநாதர் காலத்திலும் விளங்கிய கோயில் தற்போது இல்லை. இன்று காணப்படுவது அண்மைக்காலக் கோயிலே! 

தினமும் காலை 11 மணிக்கு மட்டுமே ஒருகால வழிபாடு நடைபெறுகிறது. ஆனால், காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரையில் கோயில் திறந்திருக்கும். தீபாராதனை, அர்ச்சனை முதலியவற்றை அடியார்களே செய்யலாம். கந்தசஷ்டி விழா சிறப்புடையது. அப்போது லட்சார்ச்சனை நிகழ்கிறது.


- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!