பழநிக்கு ‘திருஆவினன்குடி’ என பெயர் வந்தது ஏன் ?

‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் அருணகிரியார். இவர், பழநித் திருத்தலம் பற்றி திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில் பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றவர். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிக்கோயில்’ என்கிறார்கள்.‘பழனங்கள்’ (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் ‘பழநி’ எனப்பட்டது.

‘சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்தில் 'ஆவினன்குடி' என்று பெயர் பெற்றிருந்தது!’ என்று திருமுருகாற்றுப்படை உரையில், நச்சினார்க்கினியர் குறிப்பிடுவதால், ‘சித்தன் வாழ்வு’ என்ற பெயரிலும் பழநி அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர் வந்ததாம்.ஒருமுறை கோபம் கொண்ட திருமால், திருமகளை புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்கு தவம் இருந்து பலன் பெற்றாள். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரின் ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இது.

‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானை சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன். சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால், ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இப்படியாக, திரு - லட்சுமி, ஆ - காமதேனு, இனன் - சூரியன், கு - பூமி, டி - அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால், பழநி திருஆவினன்குடி என்று ஆனது. அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதை தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காக கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவபெருமான்.

‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்து தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக்கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பார்கள்.

கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்னும் அசுரன் பொதிகைக்குத் தூக்கிச் சென் றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள். முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை, தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். திருவிழா காலங்களில் பக்தர்கள்- தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்பட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள மற்றொரு சிறப்பு பிரம்மன் விக்கிரகம். இந்த பிரம்மன் அம்பு - வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார்.

ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக பிறக்கும்படி பிரம் மனுக்கு சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்கு சாப விமோசனம் தரும்படி முருகனை பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார். திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனியால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் . தண்டாயுதபாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள். மலைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் முருகன். ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

-எஸ்.கதிரேசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!