திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. ரூ.10 கோடிக்கு இன்சூரன்ஸ்! | 10 crore Insurance for Tiruvannamalai karthikai Deepam festival

வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (22/11/2016)

கடைசி தொடர்பு:12:12 (23/11/2016)

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா.. ரூ.10 கோடிக்கு இன்சூரன்ஸ்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு பெறும் வகையில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் பெருமை கொண்ட தலமாகவும் திகழும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற உள்ளது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், டிசம்பர் 9-ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. காலை 6.5 மணிக்கும் தொடங்கும் தேர் திருவிழாவில் விநாயகர், முருகன், அருணாச்சலேஸ்வரர், அம்பாள், சண்டிகேஷ்வரர் என 6 தேர்கள் கோயிலைச் சுற்றி வலம் வர உள்ளன. இவ்விழாவின் முக்கியத் திருவிழாவான மகா தீப தரிசனம் டிசம்பர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு மலை மீது ஏற்றப்படுகிறது.

இத்திருவிழாவில், கடந்த ஆண்டைப் போலவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்து சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதிர்பாராமல் ஏற்படும் கூட்ட நெரிசல், விபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் பக்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் நிர்வாகம் சுமார் 500 பேருக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஒரு நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதனால், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு  அருணாச்சலேஸ்வரர்  கோயில் நிர்வாகம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தியிருக்கிறது. அதன்படி 9-ம் தேதி நடைபெறும் தேரோட்டத் திருவிழாவில் மொத்தம் 6 தேர்கள் கோயிலைச் சுற்றி வலம் வருகின்றன. அதனால், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் என ஒரு தேருக்கு 50 பேர் வீதம். ஆறு தேர்களுக்கும் மொத்தமாக குரூப் இன்ஸ்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், முக்கியத் திருவிழாவான டிசம்பர் 12-ம் தேதி மகா தீப தரிசன விழாவுக்காக 10 நாட்கள் அங்கேயே தங்கி தீபம் ஏற்றும் ஊழியர்கள், கோயிலில் இருந்து மலைக்கு நெய் எடுத்துச் செல்லும் ஊழியர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்று 30.11.16 முதல் 16.12.16 வரை ஒட்டுமொத்தமாக சுமார் 500 பேருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன. இந்த இன்சூரன்ஸ் தொகையின் மொத்த மதிப்பு 10 கோடி ரூபாய் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் செய்துள்ள இன்சூரன்ஸ் திட்டத்தின் படி, வரும் 30-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பிரகாரங்கள், கோயிலைச் சார்ந்த இடம் மற்றும் தீபம் ஏற்றப்படும் மலைப்பகுதி ஆகியவற்றில் பக்தர்களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளால் மட்டுமே இழப்பீடு பெற முடியும், முக்கியமாக, காவல்துறை மற்றும் மருத்துவ குழுவின் பரிந்துரைப்படி இந்த இழப்பீடு தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

- செய்தி மற்றும் படங்கள்: ரா.வளன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close